ஒரு குழந்தையின் பிறப்பு உண்மையில், வியப்புகளைக் கொண்டு வருகிறது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
செப்டம்பர் 10, செவ்வாய்கிழமை இன்று, கிழக்கு திமோரின் தலைநகர் டிலியின் (Dili) டாசி டோலுவில் உள்ள கடற்கரை மைதானத்தில் நிறைவேற்றிய சிறப்புத் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரை
அன்புமிக்க சகோதரர் சகோதரிகளே! இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா தனது மக்களுக்கு ஒரு புதிய விடியலை அறிவிக்கிறார். நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்த அந்த எதிர்காலத்தின் கதவுகளை கடவுள் அவர்களுக்கு முன் திறப்பார் என்றும், அடக்குமுறையும் போரும் என்றென்றும் விரட்டியடிக்கப்படும் (9:1-4) என்றும் கூறுகின்றார்.
மேலும் கடவுள் பெரியதொரு ஒளியை அவர்கள் மீது ஒளிரச் செய்வார் (காண். வ. 2), என்றும், அது அவர்களை ஒடுக்கும் பாவ இருளிலிருந்து அவர்களை விடுவிக்கும் என்றும் முன்னறிவிக்கின்றார். ஆயினும் அவர் படைகள், ஆயுதங்கள் மற்றும் செல்வத்தின் பலத்தால் அல்ல, மாறாக ஒரு மகனை கொடையாக வழங்குவதன் வழியாக (காண். வி. 6-7) இதனைச் செய்வார் என்றும் உறுதியளிக்கின்றார்.
மகனின் வழியாக கடவுள் வழங்கும் மீட்பு
தனது மகனைக் கொடையாக வழங்குவதன் வழியாக, கடவுள் தனது மீட்பின் ஒளியை ஒளிரச் செய்கின்றார் என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம். ஒரு குழந்தையின் பிறப்பு வழியாக இவ்வுலகின் ஒவ்வொரு பகுதியிலும் மகிழ்ச்சியும் கொண்டாட்டடங்களும் வெளிப்படுகின்றன.
புதிதாகப் பிறந்த குழந்தையின் முன்னிலையில், உறைந்துபோன இதயங்கள் கூட இளகியதாகவும், மென்மையால் நிரப்பப்பட்டதாகவும் மாறுகின்றன. மேலும் ஊக்கமிழந்தவர்கள் மீண்டும் நம்பிக்கையை அடைகிறார்கள், மனமுடைந்தவர்கள் புதிதாகக் கனவு காண்வும், சிறந்த வாழ்க்கைக்கான சாத்தியத்தை நம்புவும் தொடங்குகிறார்கள்.
ஒரு குழந்தையின் வலுகுறைந்த நிலை, மிகவும் வலுவான ஒரு செய்தியைக் கொண்டு செல்கிறது, அது மிகவும் கடினமான ஆன்மாக்களைக் கூடத் தொடுகிறது, அவர்களில் நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான விருப்பத்தை மீட்டெடுக்கிறது. ஒரு குழந்தையின் பிறப்பு உண்மையில், வியப்புகளைக் கொண்டுவருகிறது!
எல்லாவற்றிக்கும் மேலாக நம்மிடம் நெருக்கம் கொண்டு நம்மை மீட்கவேண்டும் என்பதற்காக, கிறிஸ்துவில், கடவுள் தாமே மனிதரானார், ஒரு குழந்தையானார். கடவுளின் இந்த மறையுண்மையை உணர்ந்துகொண்டதன் வழியாக, நாம் வியப்படைவதும் நெகிழ்வதும் மட்டுமல்லாது, அவரின் அன்பிற்கு நம்மைத் திறக்கவும், அவரால் நாம் வடிவமைக்கப்படவும் அழைக்கப்படுகிறோம், இதனால் அவர் நம் காயங்களைக் குணப்படுத்துவார், நம் வேறுபாடுகளை சரிசெய்வார், நம் வாழ்க்கையை மாற்றியமைப்பார், நமது தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஒரு புதிய அடித்தளத்தை உருவாக்குவார்.
குழந்தைகள்போல் மாறுவோம்
கிழக்கு திமோரில் பல குழந்தைகள் இருப்பது எவ்வளவு அற்புதமானதாக இருக்கின்றது. உண்மையில், நீங்கள் ஓர் இளம் நாடு, உங்கள் நிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் உயிர்கள் நிறைந்திருப்பதை நம்மால் காண முடிகிறது. குழந்தைகளும் இளம்பருவத்தினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தங்களின் புத்துணர்வு, ஆற்றல், மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தைப் புதுப்பித்துக்கொள்வது எவ்வளவு இனிமையாக இருக்கின்றது.
இவ்விதத்தில் நம்மையே நாம் சிறிய குழந்தைகளாக ஆக்கிக்கொள்ளும்போது, கடவுள் நம்மில் பெரிய காரியங்களை செய்வதற்கு நாம் அவரை அனுமதிக்கிறோம். அவருடைய அன்பின் அளவின்படி, அன்னை மரியா தனது புகழ்ச்சிப் பாடல் வழியாக (காண்க லூக் 1:46-49) தாழ்மைக் குறித்து நமக்குக் கற்பிக்கிறார். இந்த நமது கொண்டாட்டத்திலும் நாம் அதையே செய்யலாம். காரணம், நம் அன்னை மரியா இதனை நன்கு உணர்ந்துகொண்டதால், தன் வாழ்நாள் முழுதும் இறைவன் முன்னிலையில் தன்னை சிறியவராக அதாவது, தாழ்மையான மனம் கொண்டவராக மாற்றிக்கொண்டார்.
ஆகவே, அன்பான சகோதரர் சகோதரிகளே, ஒரு சிறந்த மற்றும் மகிழ்ச்சியான வாழ்வைப் பெறும்பொருட்டு கடவுளுக்கு முன்பாகவும், ஒருவருக்கொருவர் முன்பாகவும், நம் வாழ்க்கையை இழக்கவும், நம் நேரத்தை கையளிக்கவும், நமது கால அட்டவணையைத் திருத்தவும், ஒரு சகோதரர் அல்லது சகோதரியாக உதவுவதற்கு எதையாவது விட்டுவிடவும் நாம் அச்சம் கொள்ள வேண்டாம்.
அன்பினால் உயிரைக் கையளிப்பவர்களிடம் மட்டுமே உண்மையான அரசாட்சி காணப்படுகிறது. இறைத்தந்தையின் ஆட்சியில் நம் ஒவ்வொருவருக்கும் இடமளிக்கும் பொருட்டு (காண்க.யோவா 14 :1-3), சிலுவையில் எல்லாவற்றையும் கொடுத்து தங்களைச் சிரியவர்களாகவும், (மனத்தாழ்மை) பாதுகாப்பற்றவர்களாகவும், பலமற்றவர்களாகவும் ஆக்கிக்கொண்ட அன்னை மரியாவைப் போலவும், அவரது திருமகன் இயேசுவைப் போலவும், (காண்க.பிலி 2:5-8), நாமும் இருப்போம்.
கைபாக் மற்றும் பெலாக் (The Kaibauk & The Belak)
இவை அனைத்தையும் இந்த நிலத்தின் இரண்டு அழகான மதிப்புமிக்க பாரம்பரிய பொருள்கள் நன்கு அடையாளப்படுத்துகின்றன. கைபாக் மற்றும் பெலாக் என்ற பெயர்கொண்ட இவை இரண்டும் விலைமதிப்பற்ற உலோகத்தால் செய்யப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
கைபாக்
முதலில் கைபாக் என்பது ஒரு நீர் எருமையின் கொம்புகள் மற்றும் சூரியனின் ஒளியைக் குறிக்கிறது, மேலும் நெற்றியில் அணியும் தலைக்கவசமாகவோ அல்லது வீடுகளின் உச்சியில் வைக்கவோ பயன்படுத்தப்படுகிறது. இது வலிமை, ஆற்றல் மற்றும் அரவணைப்பைப் பற்றி பேசுகிறது. மேலும் இது வாழ்வளிக்கும் கடவுளின் வலிமையைக் குறிக்கிறது.
அத்துடன், இதன் தலை மற்றும் வீட்டின் மேல் உள்ள அதன் உயரமான நிலையின் மூலம், இறை வார்த்தையின் ஒளி மற்றும் அவரது அருள் வலிமையுடன் மீட்பின் உன்னதமான திட்டத்தில் நாமும் நமது விருப்பங்கள் மற்றும் செயல்கள் வழி ஒத்துழைக்க முடியும் என்பதையும் இது நமக்கு நினைவூட்டுகிறது.
பெலாக்
கைபாக்கிற்குத் துணையாக மார்பில் அணியும் பெலாக் உள்ளது. இது இரவில் சூரியனின் ஒளியை தன்னடக்கத்துடன் எதிரொளிக்கும் நிலவின் மென்மையான ஒளியை நினைவுபடுத்துகிறது. இது அமைதி, வளமை மற்றும் இனிமையைப் பற்றி பேசுகிறது, மேலும் இது ஒரு தாயின் மென்மையை அடையாளப்படுத்துகிறது. அந்தத் தாய் தன்னுடைய மென்மையான அன்பான சைகைகளால் எதைத் தொட்டாலும் கடவுளிடமிருந்து அவள் பெறும் அதே ஒளியால் ஒளிர்கிறாள்.
கைபாக் மற்றும் பெலாக் இரண்டும் தந்தை மற்றும் தாயின் வலிமையையும் மென்மையையும் எடுத்துக்காட்டுகின்றன. உண்மையில், அறம் மற்றும் பரிவிரக்கத்தைக் கொண்ட தனது அரசாட்சியை இறைவன் இப்படித்தான் வெளிப்படுத்துகிறார்.
இறுதியாக, "ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியோரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; உயர்குடி மக்களிடையே - தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே –அவர்களை அமரச் செய்கின்றார்" (திபா 113:7-8) என்று இன்றைய பதிலுரைப்பாடலில் நாம் பாடிப்போற்றிய கடவுளிடம், அவரது அன்பின் வலிமையான மற்றும் மென்மையான ஒளியை இவ்வுலகில் நம்மையும் ஒளிரச்செய்யுமாறு இத்திருப்பலியில், ஆண்களாகவும், பெண்களாகவும், திருஅவையாகவும், சமுதாயமாகவும் ஒன்றிணைந்து மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்