ஏழைகள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளுடன் திருத்தந்தை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருத்தந்தையின் அடுத்த நிகழ்வு இந்தோனேசிய ஆயர் பேரவையின் தலைமை இல்லத்தில் பிறரன்பு உதவி நடவடிக்கைகளுடன் தொடர்புடையோரைச் சந்திப்பதாக இருந்தது. அதாவது, உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு, இந்திய நேரம் காலை 8.30 மணிக்கு Istiqlal மசூதியிலிருந்து புறப்பட்ட திருத்தந்தை, 4.7 கிலோமீட்டர் பயணம் செய்து 15 நிமிடங்களில் ஆயர் பேரவை மையத்தை வந்தடைந்தார். இந்த மையம் புதிதாக கட்டப்பட்டு இந்த ஆண்டு மே மாதம் 15ஆம் தேதிதான் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
இந்த மையத்தில் ஏழைகள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் என ஆயர் பேரவையிலிருந்து பிறரன்பு உதவிகளைப் பெறும் பலர் குழுமியிருக்க, இந்தோனேசிய ஆயர் பேரவைத்தலைவர், ஆயர் Antonius Subianto அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன், முதலில் இருவர் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொண்டனர். முதலில் பேசிய மிமி என்ற பெண்மணி தான் தன் 17வது வயதில் கண்பார்வையை இழந்ததாகவும், கத்தோலிக்கராகிய தான் சிலுவைப்பாதையில் ஆறுதலை அடைந்ததாகவும், இயேசு தன்னைக் கைவிடவில்லை என்பதை தான் வாழ்வு முழுவதும் உறுதியாக நம்பிவருவதாகவும் எடுத்துரைத்தார். மனிதர்களின் மாண்புக்காக திருஅவை தொடர்ந்து உழைத்து வருவதற்கும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழைகளுக்கு நம்பிக்கை தரும் வகையிலான திருத்தந்தையின் பரிவுணர்வுக்கும் தன் நன்றியை வெளியிட்டார் மிமி.
அடுத்துப் பேசிய ஆன்ட்ரூ என்பவர், தான் சிறு வயதிலேயே மிகக்குறைந்த அளவில் மனவளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் தன்னை அளவுக்கதிகமாக அன்புகூர்ந்த தன் பெற்றோரின் ஊக்கத்தினால் பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளுக்குத் தேர்வாகும் அளவுக்கு உயர்ந்ததாகவும் பெருமையுடன் தெரிவித்தார். இறுதியில் இவர் செய்தது அனைவரையும் பெருமைப்பட வைத்ததாக இருந்தது. தன் பெற்றோரை ஆசீர்வதிக்கும்படி திருத்தந்தையை விண்ணப்பித்த ஆன்ட்ரு, உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளைக்கொண்ட பெற்றோரை ஆசிர்வதிக்குமாறும் திருத்தந்தையிடம் கேட்டுக்கொண்டார். திருத்தந்தையும் அனைவருக்கும், குறிப்பாக தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட இருவருக்கும் தன் நன்றியை வெளியிட்டு அவர்களிடம் இருந்து விடைபெற்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்