இஸ்லாமிய தலைவர்களுடன் திருத்தந்தையின் சந்திப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
செப்டம்பர் 5ஆம் தேதி, அதாவது புனிதர் அன்னை தெரேசாவின் விழாவாகிய இந்த வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்தோனேசிய நேரம் 8.50 மணிக்கு, அதாவது இந்திய நேரம் காலை 7.20 மணிக்கு திருப்பீடத் தூதரகத்திலிருந்து புறப்பட்டு Istiqlal மசூதி நோக்கிச் சென்றார்.
இந்த Istiqlal மசூதிக்கு அவர் சென்றது, கலந்துரையாடல், ஒருவருக்கொருவர் மதிப்பு மற்றும் இணக்க வாழ்விற்காக உழைப்பவர்களுக்கு நன்றியுரைப்பதாக அமைந்திருந்தது எனலாம். Istiqlal மசூதியை திருத்தந்தை வந்தடைந்தபோது இஸ்லாமியத் தலைமைக்குரு முனைவர் நசாருதின் உமர் வெளியே வந்து திருத்தந்தையை மசூதிக்குள் அழைத்துச் சென்றார். மசூதிக்குள் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மசூதிக்கும் நெடுஞ்சாலையைக் கடந்து அருகில் இருக்கும் அன்னைமரியா பேராலயத்தைச் சென்றடைய அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கப்பாதையையும் பார்வையிட்டார். மசூதியையும் கத்தோலிக்கப் பேராலயத்தையும் இணைக்கும் இந்த அடிநிலப்பாதை, “நட்புறவின் சுரங்கப்பாதை” என அழைக்கப்படுகிறது.
இந்த மதக்கூட்டத்திற்கென பெரிய கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. திருத்தந்தை உள்நுழையும்போது அங்கு குழுமியிருந்தவர்கள் வரவேற்பு பாடல் ஒன்றை பாடிக்கொண்டிருந்தனர். திருத்தந்தை வந்தமர்ந்தவுடன் முதலில் இஸ்லாமிய பாரம்பரியப்படி நடனம் ஒன்று இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து குரானிலிருந்து ஒரு பகுதி பாடப்பட, விவிலியத்தின் லூக்கா நற்செய்தி 10ஆம் பிரிவிலிருந்து நல்ல சமாரியர் உவமை வாசித்தளிக்கப்பட்டது. இஸ்லாமிய தலைமைக்குரு உமர் அவர்கள், திருத்தந்தையை வரவேற்று உரை வழங்கியதைத் தொடர்ந்து, Istiqlal 2024 என்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு இரு தலைவர்களுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது. இந்த கூட்டறிக்கை, வன்முறை மற்றும் பாராமுகம் என்னும் கலாச்சாரத்தை எதிர்த்து போராடுவதையும், ஒப்புரவு மற்றும் அமைதியை ஊக்குவிப்பதையும் வலியுறுத்துவதாக இருந்தது. இதனைத் தொடர்ந்து திருத்தந்தையின் உரை இடம்பெற்றது. அதன் சுருக்கத்தை தற்போது தமிழில் தருகிறோம்.
திருத்தந்தையின் உரைக்குப்பின் இந்தோனேசிய மத விவகாரங்களுக்கான அமைச்சர் சார்பில் திருத்தந்தைக்கு நினைவுப் பரிசொன்று வழங்கப்பட்டது. அதன்பின் திருத்தந்தையுடன் மசூதியின் வெளி வளாகத்திற்கு நடந்துவந்த தலைமைக்குரு உமர், அங்கிருந்து மதத்தலைவர்களுடனும் திருத்தந்தையுடனும் இணைந்து புகைப்படம் எடுப்பதற்கும் ஏற்பாடுச் செய்திருந்தார். புகைப்படம் எடுக்கப்பட்டபின்னர் Alfattah Gate என அழைக்கப்படும் அந்த வளாக முக்கிய கதவு வரை வந்து திருத்தந்தையை வழியனுப்பிவைத்தார் தலைமைக்குரு உமர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்