திருத்தந்தையின் வருகைக்காக காத்திருக்கும் இந்தோனேசியா திருத்தந்தையின் வருகைக்காக காத்திருக்கும் இந்தோனேசியா  (AFP or licensors)

திருத்தந்தையின் ஆசியா, ஒசியானியா திருப்பயணம் – ஒரு முன்தூது

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த 45ஆவது திருப்பயணம்தான் 32 ஆயிரத்து 814 கிலோமீட்டர் என்ற வகையில் அதிக தூரத்தைக் கொண்டுள்ளதாக உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மாலை உரோம் நகர் பியூமுச்சினோ  பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஆசியா மற்றும் ஒசியானியப் பகுதிகளுக்கான தன் திருப்பயணத்தைத் துவக்க உள்ளார். உள்ளூர் நேரம் மாலை 5.15 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 8 மணி நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு, இந்தோனேசியா, பாப்புவா நியூ கினி, கிழக்கு திமோர் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கான தன் திருத்தூதுப் பயணத்தைத் துவக்க உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

  • நீண்ட திருப்பயணம்
  • திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம் பல விடயங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. இதுவரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருப்பயணங்களுள் அதிகப்படியான நாட்களைக் கொண்ட திருப்பயணம் என்றால் அது 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் அவர் கியூபா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் ஐ.நா. நிறுவனத்திற்கு மேற்கொண்ட திருப்பயணம். அதிலும் இது அமெரிக்க ஐக்கிய நாட்டில் இடம்பெற்ற குடும்பம் குறித்த எட்டாவது பன்னாட்டு கருத்தரங்கில் பங்குபெற திருத்தந்தை சென்ற திருப்பயணம். இந்த திருப்பயணத்தில்தான் அதிகபட்சமாக 8 நாட்கள் 23 மணி 45 நிமிடங்களை செலவிட்டுள்ளார் திருத்தந்தை. ஆனால், தற்போது திருத்தந்தை மேற்கொள்ளும் திருப்பயணமோ 11 நாட்கள் 1 மணி 10 நிமிடங்களைக் கொண்ட நீண்ட பயணமாக உள்ளது. இதுபோல் இந்த 45ஆவது திருப்பயணம்தான் 32 ஆயிரத்து 814 கிலோமீட்டர் என்ற வகையில் இதுவரை உள்ள திருப்பயணங்களில் அதிக தூரத்தைக் கொண்டுள்ளதாக உள்ளது. இதற்கு முன்னர் 2018ஆம் ஆண்டு ஜனவரியில் சிலே மற்றும் பெரு நாடுகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருப்பயணம் 30 ஆயிரத்து 334 கிலோமீட்டரை உள்ளடக்கியதாக இருந்தது. ஆகவே திருப்பயண நாட்களையும், பயணம் செய்யும் தூரத்தையும் பொறுத்தவரையில் இதுவே மிகப்பெரும் பயணம். மேலும், அண்மை நாட்களில் உடல் நலம் குன்றி காணப்படும் திருத்தந்தை, அதிலும் டிசம்பர் மாதத்தில் 88 வயதை நிறைவுச் செய்யவுள்ள திருத்தந்தை, இந்த நீண்ட திருத்தூதுப்பயணத்தை நிறைவுச்செய்ய உள்ளார் என்றால் எவ்வளவு மனவுறுதியுடையவராக இருப்பார் என்பதும் புரிகிறது. திருத்தந்தையின் திருப்பயணங்கள் என்று நாம் எடுத்துக்கொண்டோமானால் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் 1986ஆம் ஆண்டு நவம்பர் 18 முதல் டிசம்பர் முதல் தேதி வரை 13 நாட்கள் 6 மணி 15 நிடங்கள் பங்களாதேஷ், சிங்கப்பூர், பிஜி தீவு, நியூஜிலாந்து, ஆஸ்திரேலியா, செய்செலஸ் தீவு ஆகியவைகளில் 48 ஆயிரத்து 974 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டதே மிகப்பெரிய திருப்பயணமாக நோக்கப்படுகிறது. இப்பயணத்தை திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் மேற்கொண்டபோது அவருக்கு வயது 66 தான். 1920ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி பிறந்த அத்திருத்தந்தை 1986ல் மிக நீண்ட திருப்பயணத்தை மேற்கொண்டபோது 66 வயதினராக இருந்தார். ஆனால் 1936ஆம் ஆண்டு டிசம்பர் 17ல் பிறந்த தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 32 ஆயிரத்து 814 கிலோமீட்டர் தூரப் பயணத்தை 11 நாட்களில் மேற்கொள்ளும்போது அவரின் வயது 87 என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களும் 2008ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பன்னாட்டு இளையோர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆஸ்திரேலியாவுக்கு 32,836 கிலோமீட்டர்  கொண்ட பயணத்தை மேற்கொண்டார். 1927 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி பிறந்த அவருக்கு இத்திருப்பயணம் மேற்கொள்ளும்போது 81 வயது.
  • இந்தோனேசியா
  • அன்பு நெஞ்சங்களே, தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் நான்கு நாடுகளின் திருப்பயணத்தை ஒட்டி, அவர் பயணம் மேற்கொள்ளும் நாடுகள் குறித்த விவரங்களை இப்போது காண்போம்.
  • செப்டம்பர் 3ஆம் தேதி இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவை உள்ளூர் நேரம் நண்பகலுக்கு சிறிது முன்பாகச் சென்றடையும் திருத்தந்தை, விமான நிலைய வரவேற்புக்குப்பின் அந்நாள் முழுவதையும் திருப்பீடத் தூதரகத்திலேயே செலவிடுவார். இந்தோனேசியாவுக்கும் இத்தாலிக்கும் இடையேயான நேர வித்தியாசம் 5 மணி என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும்.27 கோடியே 57 இலட்சத்து 74ஆயிரம் மக்கள் வாழும் இந்தோனேசியா அல்லது இந்தோனேசியக் குடியரசு என்பது தென்கிழக்காசியா, மற்றும் ஓசியானியா பகுதிகளில் 17,508 தீவுகளைக் கொண்ட நாடாகும். இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள். போர்னியோ, சுமாத்திரா, சாவகம், நியூ கினி, சுலாவெசி என்பவை பெரிய தீவுகளாகும். இது போர்னியோ தீவில் மலேசியாவுடனும் புரூணையுடனும், நியு கினி தீவில் பப்புவா நியூ கினியுடனும், திமோர் தீவில் கிழக்கு திமோர் நாட்டுடனும் நில எல்லைகளை கொண்டுள்ளது. உலகில் மிக அதிகமான முஸ்லிம் மக்களைக் கொண்ட நாடு இந்தோனேசியா. பாப்புவா நியூ கினி, கிழக்குத் திமோர், மலேசியா ஆகிய நாடுகள் இந்த நாட்டின் எல்லைகளில் உள்ளன. சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும், இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளும் இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ளன. இந்தோனேசியா என்ற பெயர் கிரேக்க மொழியில் இந்தியா எனப் பொருள்படும். இந்தோனேசியம் இதன் தேசிய மொழியாகும். இது மலாய் மொழியை ஒத்தது. பெரும்பாலான மக்கள் இந்தோனேசிய மொழியுடன் உள்ளூர் மொழி ஒன்றையும் பேசுகின்றனர். அவற்றுள் சாவகம் என்ற மொழி அதிகம் பேசப்படும் மொழியாகும். இந்தோனேசியாவின் மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாமிய சமயத்தை பின்பற்றினாலும் இது இஸ்லாமிய நாடு அல்ல. மதச் சுதந்திரம் இந்தோனேசிய அரசியலமைப்பில் உள்ளது. இஸ்லாம், புத்தம், இந்து, கத்தோலிக்கம், சீர்திருத்த கிறித்தவம், கன்பூசியம் ஆகிய 6 சமயங்களை மட்டுமே அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது அரசு. மொத்த மக்கள் தொகையில் கத்தோலிக்கர் 3.01 விழுக்காட்டினராக உள்ளனர், அதாவது 82 இலட்சத்து 97,000 கத்தோலிக்கர் இந்தோனேசியாவில் உள்ளனர். இங்கு 39 மறைமாவட்டங்களும் 1456 பங்குதளங்களும் உள்ளன. 50 ஆயர்கள், 5,903 அருள்பணியாளர்கள், 9,658 பெண் துறவிகள், 21,932 பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தோனேசியாவில் தலத்திருஅவை 5684 கல்வி நிலையங்களைக் கொண்டுள்ளது.
  • பாப்புவா நியு கினி
  • 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவைச் சென்றடையும் திருத்தந்தை 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதிவரை தலைநகரிலேயே திருத்தூதுப்பயணம் மேற்கொண்டபின்னர், அன்று மாலை உள்ளூர் நேரம் 6.50 மணியளவில் பாப்புவா நியூ கினி நாட்டைச் சென்றடைவார். இந்தோனேசியாவுக்கும் பாப்புவா நியூ கினிக்கும் இடையேயான நேர வித்தியாசம் 3 மணி நேரமாகும். அதாவது, உரோமுக்கும் பாப்புவா நியு கினி நாட்டிற்கும் இடையே 8 மணி நேர வித்தியாசம் உள்ளது. இதுவே இந்தியாவுக்கும் பாப்புவா நியூ கினிக்கும் இடையேயான நேர இடைவெளி 4 மணி 30 நிமிடங்களாகும். இப்போது பாப்புவா நியூ கினி குறித்து காண்போம்.
  • பாப்புவா நியூ கினி என அழைக்கப்படும் இந்நாடு, 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து மெலனேசியா என அழைக்கப்படும், பசுபிக் பெருங்கடல் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நாட்டின் மிகச்சிறிய எண்ணிக்கையிலுள்ள நகரங்களிலொன்றான போர்ட் மோர்ஸ்பி இதன் தலைநகராகும். உலகிலுள்ள மிகவும் பன்முகத்தன்மையுடைய நாடுகளில் இந்நாடும் ஒன்று. மக்கள் தொகை 82 இலட்சத்து 41 ஆயிரமே உள்ள இந்நாட்டில் 850க்கும் மேற்பட்ட ஆதிக்குடிவாசிகளின் மொழிகளும், குறைந்தது அதே எண்ணிக்கையுடைய பழங்குடிக் குழுக்களும் உள்ளன. இந்நாடு அதிகமானக் கிராமங்களைக் கொண்டுள்ளதால், 18 விழுக்காட்டு மக்களே நகர்ப்புறத்தில் வசிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். இந்நாட்டு மக்கள் தொகையில் 30.6 விழுக்காட்டினர் கத்தோலிக்கர், அதாவது 25 இலட்சத்து 22 ஆயிரம் பேர். இங்கு 19 மறைமாவட்டங்களும் 462 பங்குதளங்களும் கொண்டு 27 ஆயர்கள், 600 அருள்பணியாளர்கள், 808 பெண் துறவிகள், 3134 பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்கள் மறைப்பணியாற்றி வருகின்றனர். தலத்திருஅவை 3559 கல்வி நிலையங்களையும் கொண்டுள்ளது.
  • கிழக்கு திமோர்
  • கிழக்கு திமோர் என்பது, இந்தோனேசியாவின் மேற்கு திமோரின் கிழக்கு பகுதியில் உள்ள நாடாகும். இது ஆஸ்திரேலியாவின் டார்வின் நகருக்கு வடமேற்குத் திசையில் 400 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நாடு 1975ஆம் ஆண்டே போர்த்துக்கல்லிலிருந்து சுதந்திரம் அடைந்த போதிலும், அதற்கு அடுத்த ஆண்டே இந்தோனேசியாவால் கைப்பற்றப்பட்டு அந்நாட்டோடு இணைக்கப்பட்டது. மக்களின் எதிர்ப்புப் போராட்டங்களுக்குப்பின், ஏறக்குறைய இரண்டு இலட்சம் உயிரிழப்புகளுக்குப்பின், 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி கிழக்கு திமோர் நாட்டு மக்களின் விருப்பம் குறித்த கருத்துக் கணிப்பை நடத்தியது இந்தோனேசிய அரசு.  இதில் ஏறக்குறைய 80 விழுக்காட்டு மக்கள் கிழக்கு திமோர் தனி நாடாகச் செல்வதையே விரும்பினர். இருப்பினும் 2002 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதிதான் அந்நாட்டின் புது அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு தனி சுதந்திர நாடாக மாறியது. 21ஆம் நூற்றாண்டில் உருவான முதலாவது புதிய நாடாகும் இது.கத்தோலிக்கப் பெரும்பான்மையைக் கொண்ட இரண்டு ஆசிய நாடுகளாக பிலிப்பீன்ஸும் கிழக்கு திமோரும் உள்ளன. கிழக்கு திமோரின் 14 இலட்சத்து 99 ஆயிரம் மக்கள்தொகையில் 97.8 விழுக்காட்டினர், அதாவது 14 இலட்சத்து 39 ஆயிரம் பேர் கத்தோலிக்கர். இங்கு 3 மறைமாவட்டங்களும், 66 பங்கு தளங்களும் உள்ளன. 3 ஆயர்கள், 347 அருள்பணியாளர்கள், 1038 பெண்துறவிகள், 1724 மறைக்கல்வி ஆசிரியர்கள் இங்கு பணியாற்றுவதுடன், 325 கல்வி நிலையங்களையும் நடத்துகிறது தலத்திருஅவை. செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் பாப்புவா நியூ கினியிலிருந்து விடைபெற்று கிழக்கு திமோர் வந்தடையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டில் 10ஆம் தேதி முழுவதும் தன் மேய்ப்புப்பணி திட்டங்களை நிறைவு செய்து 11ஆம் தேதி காலை 11 மணியளவில் சிங்கப்பூர் நாட்டிற்கு பயணமாவார்.
  • சிங்கப்பூர்
  • சிங்கப்பூர் என்பது தென்கிழக்காசியாவில் மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது. சிங்கப்பூர் பெரிதும் நகரமயம் ஆன நாடாகும். 1963இல் ஏனைய பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளுடன் சேர்ந்து மலேசியாவோடு இணைந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது. 1965 ஆகஸ்ட் 9இல் மலேசியாவிலிருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனிக் குடியரசு நாடாக உருவானது.
  • சிங்கப்பூரின் மக்கள்தொகையில் பெரும்பாலானோர் சீனர். இவர்களுக்கு அடுத்ததாக மலாய், மற்றும் சிங்கப்பூர் தமிழர்கள் உள்ளனர். சிங்கப்பூரின் அலுவல்முறை மொழிகளாக ஆங்கிலம், சீனம், மலாய் மொழி, தமிழ் ஆகியவை உள்ளன. ஏறக்குறைய 60 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சிங்கப்பூரில் 3 இலட்சத்து 95 ஆயிரம் பேர் கத்தோலிக்கர். இங்கு ஒரு மறைமாவட்டமும் மூன்று ஆயர்களும், 156 அருள்பணியாளர்களும் 156 பெண்துறவிகளும், 1817 பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்களும் உள்ளனர். தலத்திருஅவை 56 கல்வி நிலையங்களை நடத்திவருகிறது.

அன்பு நெஞ்சங்களே, நான்கு நாடுகளில் தன் திருத்தூதுப்பயணத்தை துவக்கும் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைபரப்புப்பணி பயணம் வெற்றியடைய நம் செபங்களை ஒப்படைப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2024, 16:51