இந்தோனேசிய இளையோருடன் உரையாடும் திருத்தந்தை இந்தோனேசிய இளையோருடன் உரையாடும் திருத்தந்தை  (AFP or licensors)

திருத்தந்தையின் புதன் மாலை நிகழ்வுகள்

விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர், குருமடமாணவர்கள், பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்களைச் சந்தித்தார் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

செப்டம்பர் 4, புதனன்று திருப்பீடத்தூதரகத்திலேயே மதிய உணவருந்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறிது நேரம் ஓய்வும் எடுத்துக்கொண்டபின்னர்,  உள்ளூர் நேரம் மாலை 4.20 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் 2.50 மணிக்கு 1.5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள விண்ணேற்பு அன்னை பேராலயம் நோக்கிப் பயணமானார்.

இங்குதான் அவர் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர், குருமடமாணவர்கள், பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்கள் என தலத்திருஅவை உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. பேராலயத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது முதலில் இந்தோனேசிய ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Antonius Franciskus Subianto Bunyamin அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேச, அதனைத் தொடர்ந்து ஓர் அருள்பணியாளர், ஓர் அருள்சகோதரி தங்கள் வாழ்வு நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு சான்று பகர்ந்தனர். இந்த இரு சாட்சியப் பகிர்வுகளும் இடம்பெற்றபின் பாடகர் குழு ஒரு பாட்டை இணைந்து பாடியது. பின்னர் இரு பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்கள் தங்கள் சான்றுகளை வழங்கினர். இதைத் தொடர்ந்து திருத்தந்தையின் உரை இடம்பெற்றது. திருத்தந்தையின் உரைக்குப்பின் அருள்நிறை மரியே என்ற செபம் அனைவராலும் இணைந்து உரத்த குரலில் செபிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திருத்தந்தையின் ஆசீர் அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது. பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆயர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள இறுதிப்பாடலுடன் இச்சந்திப்பு முடிவுக்கு வந்தது.

திருத்தந்தையுடன் ஆன சந்திப்பு இடம்பெற்ற இந்த மரியன்னை பேராலயம் முதன் முதலில் 1810 பிப்ரவரியில் கட்டப்பட்ட ஒன்றாகும். 1826 ஜூலையில் தீவிபத்துக்கு உள்ளான இப்பேராலயம் 1890ஆம் ஆண்டு மே மாதத்தில் முற்றிலுமாக தரைமட்டமானதைத் தொடர்ந்து, 1891ல் மீண்டும் கட்டப்பட துவக்கப்பட்டு, 1901 ஏப்ரல் மாதம் திருநிலைப்படுத்தப்பட்டு திறந்துவைக்கப்பட்டதாகும்.

விண்ணேற்பின் அன்னை பேராலயத்தில் இடம்பெற்ற சந்திப்புக்குப்பின் அங்கிருந்து 60 மீட்டர்களே தொலைவிலுள்ள Grha Pemuda இளையோர் இல்லத்திற்குச் சென்று அங்கு SCHOLAS OCCURRENTES அமைப்பின் இளையோரைச் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த சந்திப்பு ஏறக்குறைய ஒருமணி நேரம் நீடித்தது.

இந்த சந்திப்போடு திருத்தந்தையின் புதன் தின பயணத்திட்டங்கள் நிறைவுக்கு வந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2024, 15:13