திருத்தந்தையின் புதன் காலை நிகழ்வுகள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருத்தந்தையின் புதன் தின நிகழ்வுகள், அன்று காலை உள்ளூர் நேரம் 7 மணிக்கு அதாவது இந்திய நேரம் காலை 5.30 மணிக்கு திருப்பீடத்தூதரக இல்லத்தில் தனியாக திருப்பலி நிறைவேற்றியதிலிருந்து துவங்கியது. திருப்பீடத்தூதரகத்திலிருந்து உள்ளூர் நேரம் காலை 9.20 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் 7 மணி 50 நிமிடங்களுக்கு காரில் புறப்பட்ட திருத்தந்தை 2.9 கிலோமீட்டரை 10 நிமிடங்களில் கடந்து அரசுத்தலைவர் மாளிகையை வந்தடைந்தார். Merdeka வளாகத்தின் வடக்கே அமைந்துள்ள அரசுத்தலைவர் மாளிகையே வெளிநாட்டு அரசுத்தலைவர்களை வரவேற்கும் இடமாகும்.
அரசுத்தலைவர் மாளிகை வளாகம் வந்த திருத்தந்தையை இந்தோனேசிய அரசுத்தலைவர் Joko Widodo அவர்கள், மாளிகை முகப்பிலேயே சந்தித்து வரவேற்றார். குழந்தைகள் குழு ஒன்று வரவேற்பு நடனம் ஒன்றை ஆடினர். பல குழந்தைகள் வத்திக்கான் மற்றும் இந்தோனேசிய தேசியக்கொடிகளை கையில் வைத்து அசைத்துக்கொண்டே வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். வத்திக்கான் நாட்டின் தலைவர் என்ற வகையில் இராணுவ அணிவகுப்பு மரியாதை திருத்தந்தைக்கு வழங்கப்பட, இரு நாடுகளின் தேசியப்பண்கள் இசைக்கப்பட்டன. இசைக்கருவிகளின் ஒலி எழும்பிக்கொண்டேயிருக்க, வத்திக்கான் அதிகாரிகள் அரசுத்தலைவருக்கும், இந்தோனேசிய முக்கிய அதிகாரிகள் திருத்தந்தைக்கும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். அரசு மாளிகையினுள் நுழைவதற்கு முன்னர் வருகையாளர் புத்தகத்தில் திருத்தந்தை கையெழுத்திட்டார். “இந்த நாட்டின் அழகில் மூழ்கிப்போன நான், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களிடையே உரையாடல் மற்றும் சந்திப்பின் இப்பூமியின் மக்கள் விசுவாசத்திலும், உடன்பிறந்த உணர்விலும், கருணையிலும் மேலும் வளர ஆவல் கொள்கின்றேன். கடவுள் இந்தோனேசியாவை ஆசீர்வதிப்பாராக” என அந்த வருகைப்பதிவேட்டில் எழுதியுள்ளார் திருத்தந்தை. இரு தலைவர்களும் இணைந்த புகைப்படமும் எடுக்கப்பட்டபின்னர் இரு தலைவர்களுக்கும் இடையேயான தனியறை சந்திப்புப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. வெளிவிவகார அமைச்சருக்கும் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. ஏறத்தாழ அரைமணி நேரம் இடம்பெற்ற அரசுத்தலைவர் மாளிகைக்குள்ளான சந்திப்புக்குப் பின்னர் அதே அரசுத்தலைவர் மாளிகையில் உள்ள Istana Negara என்ற அரங்கிற்குச் சென்ற திருத்தந்தை, அங்கு, அரசியல் மற்றும் சமூகத்தலைவர்களையும், பல்வேறு நாடுகளின் அரசியல் தூதுவர்களையும் சந்தித்து உரை ஒன்றும் வழங்கினார்
Istana Negara என்றழைக்கப்படும் அந்த பெரிய அறையில் அரசியல் மற்றும் மதத்தலைவர்கள், அரசுத் தூதுவர்கள், தொழில் தலைவர்கள், சமூகப் பிரதிநிதிகள், மற்றும் கலாச்சாரப் பிரதிநிதிகள் என ஏறக்குறைய 300 பேர் திருத்தந்தைக்காக காத்திருந்தனர். முதலில் இந்தோனேசிய அரசுத்தலைவர் Widodo தன் உரையை வழங்கினார். அதன்பின்னர் திருத்தந்தையின் அந்நாட்டிற்கான முதல் உரை இடம்பெற்றது. அவ்வுரையின் சுருக்கத்திற்கு இப்போது செவிமடுப்போம்.
இச்சந்திப்புக்குப் பின்னர் உள்ளூர் நேரம் காலை 11.15 மணியளவில் அதாவது இந்திய நேரம் காலை 9.45 மணிக்கு திருப்பீடத்தூதரகம் வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு அவருக்காகக் காத்திருந்த, இந்தோனேசியாவில் பணியாற்றும் இயேசு சபையினரை சந்தித்து அவர்களோடு உரையாடினார். இயேசு சபையின் அங்கத்தினராக இருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாட்டிற்கும் திருப்பயணம் மேற்கொள்ளும்போது அங்கு பணிபுரியும் இயேசு சபை துறவிகளைச் சந்திப்பது வழக்கமான ஒன்றாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்