உரையாடலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுங்கள்!

உரையாடலுக்கு உதவும் மிகவும் ஒரு முக்கியமான காரியம் மரியாதை. நமக்கும் வரம்புகள் இருப்பதால், மற்றவர்களின் குறைபாடுகளை நாம் மதிக்க வேண்டும். இது மிகவும் முக்கியம் : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தயாரித்து வைத்திருந்த உரையை வாசிக்காமல், அரங்கத்தில் கூடியிருந்த இளையோருடன் நேரிடையாக உரையாடினார்.  

அன்புள்ள இளையோரே, வெறுமனே விமர்சனம் செய்வோர், சுகவாழ்வு வளையம், தொழில்நுட்பம் ஆகிய மூன்று விடயங்கள் குறித்து நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகள் என்னைச் சிந்திக்கத் தூண்டின. இவற்றைக் குறித்து உங்களுடன் என் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

வெறுமனே விமர்சனம் செய்வோர்

இளைஞர்கள் துணிவுமிக்கவர்கள் மற்றும் உண்மையைத் தேட விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் குறிப்பிடும் இந்த, ‘வெறுமனே விமர்சனம் செய்வோர்’ என்று வார்த்தைகள் குறித்து இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஓர் இளைஞன் என்பவன் ஒரு விமர்சன சிந்தனையாளராக இருக்க வேண்டும், மேலும் விமர்சிக்காமல் இருப்பதும் நல்லதல்ல. ஆனால் உங்கள் விமர்சனம் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும், காரணம், வெறுமனே குற்றங்களையும் குறைகளையும் மட்டுமே கூறும் விமர்சனம் புதிய வழிகளைத் திறக்காது.

சுகவாழ்வு வாழ்வு வளையம்

இளைஞர்கள் தங்கள் வசதியான சூழலை விட்டு வெளியேறவும், தங்களை முன்னோக்கி நகர்த்தவும் துணிவுகொள்ள வேண்டும். வாழ்வைக் கட்டியெழுப்பவும், முன்னேற்றம் காணவும் தங்களின் வசதியான சூழலை விட்டு வெளியேற துணிவு வேண்டும்.

சவால்களைச் சந்திக்கத் துணிவுகொள்ளுங்கள். பயம் என்பது உங்களை முடக்கும் சர்வாதிகார மனோபாவம். இளைஞர்கள் அடிக்கடி தவறு செய்கிறார்கள், உண்மைதான். ஆனால் நான் ஏன் இந்தத் தவற்றை செய்கிறேன் என்றும் எத்தனை முறை தவறு செய்கிறேன் என்றும் சிந்தித்தால் நல்லது. தவறு செய்வது முக்கியமல்ல, ஆனால் அவற்றை உணர்ந்து பார்ப்பதே சிறந்தது. சவால்களைச் சந்திக்கத் தயங்குகிற, தவறுகள் செய்யத் தயங்குகிற ஓர் இளைஞன் ஏற்கனவே வயதாகிவிட்டவன் என்று அர்த்தம்.

தொழில்நுட்பம்

மூன்றாவதாக, தொழில்நுட்பங்கள் குறித்தும் பேசியிருக்கிறீர்கள். இன்று ஊடகம், அலைபேசி  அல்லது தொலைக்காட்சியைப் பயன்படுத்துவதற்குப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இவற்றை பயன்படுத்துவது நல்லதா அல்லது கெட்டதா என்பதை நீங்களே கூறுங்கள்.

அனைத்து இளைஞர்களும் ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும், ஆனால் நம்மை முன்னேற்ற உதவும் வகையில் அவற்றை நாம் பயன்படுத்த வேண்டுமே தவிர, நம்மை அடிமைப்படுத்தும் வகையில் அல்ல.

இங்குள்ள இளைஞர்களிடம் என்னை மிகவும் கவர்ந்த விடயங்களில் ஒன்று, மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான உங்கள் திறன்தான். மதங்கள் கடவுளை அடையும் பாதையாகப் பார்க்கப்படுகிறது. அவை தெய்வீகத்தை வெளிப்படுத்தும் வெவ்வேறு மொழிகள் போன்றவை. ஆனால் கடவுள் அனைவருக்குமானவராக இருக்கிறார். எனவே, நாம் அனைவரும் அவரது குழந்தைகள்.

இளமை வயது என்பது துணிவின் வயது. ஆனால் இந்தத் துணிவை நீங்கள் தவறாகப் பயன்படுத்தி உங்களுக்கு உதவாதக் காரியங்களைச் செய்வதற்குப் பதிலாக, உங்களின் முன்னேற்றத்திற்கும் பிறருடன் உரையாடுவதற்கும் அதனைப் பயன்படுத்துங்கள்.

உரையாடலுக்கு முக்கியத்தும் கொடுங்கள்

உரையாடலுக்கு உதவும் மிகவும் ஒரு முக்கியமான காரியம் மரியாதை. நமக்கும் வரம்புகள் இருப்பதால், மற்றவர்களின் குறைபாடுகளை நாம் மதிக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். நான் ஏன் இதைச்  சொல்கிறேன் என்றால், இந்த விடயங்களை சமாளிப்பது உங்கள் மதங்களுக்கிடையேயான உரையாடலுக்கு உதவுகிறது, மேலும் இது மற்றவர்களுக்கான மரியாதையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளதால் இது மிகவும் முக்கியமானது.

நீங்கள் இளைஞர்களாக உரையாடினால், நீங்கள் பெரியவர்களாகவும், குடிமக்களாகவும், அரசியல்வாதிகளாகவும் உரையாடுவீர்கள். உலகின் வரலாற்றில் எழுந்த சர்வாதிகாரம் ஒவ்வொன்றும் முதலில் துண்டித்தது உரையாடலைத்தான் என்பதை நான் உங்களுக்கு கூற விரும்புகின்றேன்.

உங்களின் கேள்விகளுக்கு எனது நன்றிகள். துணிவும் வலிமையும் நிறைந்த இளைஞர்களாகிய உங்களைச் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்கின்றேன். இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் பின்னோக்கிச் செல்லாமல் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்!  சவால்களைச் சந்தியுங்கள்.

கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2024, 14:19