இலக்ஸம்பர்க் நாட்டு கத்தோலிக்க சமூகத்திற்கு திருத்தந்தையின் உரை
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
இலக்ஸம்பர்க் நாட்டின் நமதன்னை பேராலயத்தில் அந்நாட்டின் கத்தோலிக்க சமூகத்தை சந்தித்தபோது திருத்தந்தை வழங்கிய உரையின் சுருக்கத்தை கீழே தருகிறோம்:
அன்புள்ள சகோதர சகோதரிகளே, துன்புறுவோரின் ஆறுதலான அன்னை மரியாவின் பாதுகாவலில் அர்ப்பணிக்கப்பட்ட Luxembourg ஆலயம் 4 நூற்றாண்டுகளாக அன்னை மரியாவின் பக்தியை கொண்டாடி வருகிறது. இந்நாட்டில் அன்னை மரியாவின் மாபெரும் யூபிலியின் போது நடைபெறும் இந்த சந்திப்பானது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அன்னை மரியாவின் யூபிலி ஆண்டிற்கான தொடக்க ஜெபத்தில் மறைபணியாளர்களாக, நற்செய்தியின் மகிழ்ச்சிக்கு சான்று பகர தயார் நிலையில் இருப்பவர்களாக வாழ உதவுமுமாறு வரம் கேட்போம். நம் சகோதர சகோதரிகளுக்கு ஆற்றும் சேவையில் நம் வாழ்வை அர்ப்பணிக்க நம் இதயங்களை அன்னை மரியாவிடம் ஒப்படைப்போம்.
ஆண்டவர் இயேசு அன்பின் இரு முக்கிய கூறுகளாக முன்வைப்பது ஆறுதல் அளிப்பதும், சேவை புரிவதும். இந்த அன்பே நாம் ஆற்றவேண்டிய மேலான பணி, மற்றும் முழுமையான மகிழ்ச்சிக்கு ஒரே வழி.
Luxembourgல் உள்ள திருஅவை, பணிவிடை புரிய வந்த இயேசுவின் திருஅவையாக இருக்க விரும்புகிறது என்பதை நாம் இந்த சந்திப்பு முன்னுரையில் கூறக் கேட்டோம். சேவையை பொறுத்தவரை இன்று மிகவும் தேவையானதாக இருக்கும், ‘பிறரை வரவேற்கும் பண்பை’ நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
பல நூற்றாண்டுகள் பாரம்பரியமிக்க உங்கள் நாடு தொடர்ந்து ஒரு நட்பின் இல்லமாக விளங்கவும், உதவி மற்றும் விருந்தோம்பலை நாடி உங்கள் கதவைத் தட்டுபவர்களை வரவேற்கவும், நான் உங்களை ஊக்குவிக்கிறேன். ஆம், நற்செய்தியின் மெய்ப்பொருள் அனைவரையும் வரவேற்கக் கூடிய திறந்த மனப்பான்மை கொண்டது. அது எவரையும் விலக்கி வைப்பதை ஒப்புக்கொள்வதில்லை.
கவலை, விலகியிருத்தல், மனக்கசப்பு ஆகியவற்றில் நம்மை நாம் மூடிவிட முடியாது. மாறாக, திருஅவையின் நிலைத்திருக்கும் மதிப்பீடுகளுக்கு உண்மையுள்ளவர்களாக வாழ்ந்து, நம் சவாலை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விழுமியங்களை நற்செய்திக்கான பாதைகளாக நாம் மீண்டும் கண்டுபிடித்து மதிக்க வேண்டும், எளிய மேய்ப்புப் பராமரிப்பு அணுகுமுறையைத் தாண்டி, நற்செய்தியை அறிவிக்கும் மறைபணியாளர் என்ற அணுகுமுறைக்கு செல்ல வேண்டும். மறைபணியாளர்களாக வாழ நம்மைக் கவர்வது, நாம் பெறவிருக்கும் சலுகைகளோ, மதமாற்றமோ அல்ல, மாறாக, கிறிஸ்துவைச் சந்திப்பதில் கிட்டும் மகிழ்ச்சியை முடிந்தவரை பல சகோதர சகோதரிகளுக்கு தெரியப்படுத்துவதற்கான நமது விருப்பம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நம்முடைய விசுவாசம் மகிழ்ச்சி நிறைந்தது, அது ஓர் ஆனந்த நடனம். ஏனெனில் நாம் நம்முடைய நண்பராக இருக்கும் கடவுளின் பிள்ளைகள் என்பதையும், நாம் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் இருக்க விரும்புகிறோம் என்பதையும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக நம் இறைவன் நம்முடைய மீட்பில் மிகவும் மகிழ்ச்சியடைகிறார் என்பதையும் நாம் அறிவோம்.
உங்கள் நாட்டின் மற்றுமோர் அழகான பாரம்பரியத்தை நினைவு கூர்ந்து எனது உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன். நீங்கள் வசந்த காலத்தில் சிறப்பிக்கும் மகிழ்ச்சிப் பவனியை, இந்நாட்டிற்கு நற்செய்தியைக் கொணர்ந்த புனித Willibrordன் அயராத முயற்சிகளை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் விதமாகக் கொண்டாடுகிறீர்கள் என்பதையும் நான் அறிவேன்.
அன்பு சகோதரிகளே, அன்பு சகோதரர்களே, இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிற பணி மிகவும் அழகானது. அன்னை மரியாவின் முன்மாதிரியைப் பின்பற்றி அவருடைய உதவியுடன் பணிபுரிவோம். உங்களுக்காக ஜெபிக்கிறேன் எனக்காகவும் ஜெபியுங்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்