இலக்ஸம்பர்க் நாட்டில் திருத்தந்தையின் முதல் உரை

முன்னேற்றம் என்பது உண்மையானதாகவும் முழுமையானதாகவும் இருக்க வேண்டுமெனில் நம் பொது இல்லமாகிய இப்பூமியை சுரண்டவோ தாழ்நிலைப்படுத்தவோ கூடாது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இலக்ஸம்பர்க் நாட்டில் அரசு அதிகாரிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் அரசு தூதுவர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரையின் சுருக்கத்தை இங்கு தருகிறோம்:

இலக்ஸம்பர்க் நாடு பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களின் மத்தியில் தன் இருப்பிடத்தைக் கொண்டிருப்பதால் ஐரோப்பாவின் பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் அதனையும் தொட்டிருக்கின்றன. கடந்த நூற்றாண்டின் முதல் பகுதியில் இருமுறை இந்நாடு ஆக்ரமிக்கப்பட்டு தன் சுதந்திரத்தையும் விடுதலையையும் இழந்துள்ளது. இரண்டாம் உலகப்போரின் முடிவிலிருந்து இந்த நாடு ஒன்றிப்பு மற்றும் சகோதரத்துவ உணர்வுடன் கூடிய ஐரோப்பாவை கட்டியெழுப்புவதிலும், ஒவ்வொரு நாடும் மாண்புடன் மதிக்கப்பட உழைப்பதிலும் தன் பங்களிப்பையும் வழங்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கிய முக்கிய அங்கத்தினர்களுள் இலக்ஸம்பர்க்கும் ஒன்று என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அதேபோல் இந்நாடு, பல ஐரோப்பிய நிறுவனங்களின் இருப்பிடமாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம், ஐரோப்பிய ஒன்றிய நிதியை கண்காணிக்கும் தணிக்கையாளர் அலுவலகம், ஐரோப்பிய முதலீட்டு வங்கி ஆகியவை இங்கு இருப்பதை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தனிமனிதர்களின் மாண்பு மதிக்கப்படுவதிலும், அடிப்படை சுதந்திரம் பாதுகாக்கப்படுவதிலும் உதவும் உறுதியான குடியாட்சி அமைப்பைக் கொண்டிருக்கும் இலக்ஸம்பர்க், ஐரோப்பாவில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைக் கொண்டுள்ளது.

ஒரு நாட்டின் முக்கியத்துவம் அதன் நில அளவாலோ, மக்கள் எண்ணிக்கையாலோ, பொருளாதார மேன்மையாலோ குறிக்கப்படுவதில்லை, மாறாக, மக்கள் மீதான பாகுபாடுகளைக் கைவிட்டு, பொதுநலனை மையமாக வைத்து, சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்து, குடிமக்களை நன்முறையில் வாழவைக்கும் முறைகளாலேயே ஒரு நாட்டின் மேன்மை அறியப்படுகிறது.

பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளிடையே ஒத்துழைப்பின் சந்திப்புச் சாலையாக இருக்கும் இலக்ஸம்பர்க், உலகின் பல்வேறு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பிற்கு ஒரு வழிகாட்டியாக இருக்க அழைப்புப் பெறுகிறது என, 1985ஆம் ஆண்டு இலக்ஸம்பர்க்கில் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் கூறியதை நான் மீண்டும் எடுத்துரைக்க ஆவல் கொள்கின்றேன்.

இத்தகைய வழிமுறைகள் குறித்து திருஅவையின் சமூகக் கோட்பாடுகளும் எடுத்துரைக்கின்றன. நானும், இந்த படிப்பினைகளை பின்பற்றி இரு முக்கியக் கருத்துக்களை வலியுறுத்தி வருகிறேன். ஒன்று, படைப்பின் மீதான அக்கறை, ஏனையது, உடன்பிறந்த உணர்வு நிலை. முன்னேற்றம் என்பது உண்மையானதாகவும் முழுமையானதாகவும் இருக்க வேண்டுமெனில் நம் பொது இல்லமாகிய இப்பூமியை சுரண்டவோ தாழ்நிலைப்படுத்தவோ கூடாது. அதுபோல் மக்களை விளிம்புநிலைக்குத் தள்ளிவிடக்கூடாது. செல்வத்தைக் கொண்டிருப்பது என்பது பொறுப்புணர்வுகளையும் உள்ளடக்கியது என்பதை நினைவில் கொள்வோம். ஆகவே, ஏழை நாடுகள் தங்கள் வறுமை நிலைகளில் இருந்து விடுபட்டு மேலெழும்பிவர நாம் உதவவேண்டும்.   இதன்வழி நாம், ஏழை மக்கள் குடிபெயரவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுவதை குறைக்கலாம். இலக்ஸம்பர்க் நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவானவர்கள், ஐரோப்பாவின் ஏனைய பகுதிகள் மற்றும் உலகின் ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில், குடியேற்றதாரர்கள், மற்றும் அகதிகளை வரவேற்பதில் ஏனைய நாடுகளுக்கு இந்நாடு ஒரு வழிகாட்டியாக இருக்கட்டும்.  துரதிட்டவசமாக ஐரோப்பிய கண்டத்தில் நாம் மோதல்களும் பகைமையுணர்வுகளும் மீண்டும் தலைதூக்கும் நிலைகளைக் காண்கிறோம். ஆம், மனிதமனம் கடந்தகால நிகழ்வுகளை எளிதில் மறந்துவிடுகிறது. இன்றைய சுரண்டல்களையும், மோதல்களையும், உயிரிழப்புக்களையும் பார்க்கும்போது, நம் பார்வை மேல் நோக்கி எழுப்பப்பட வேண்டிய தேவை ஏற்படுகிறது. மக்களின், தலைவர்களின் தினசரி வாழ்வும், ஆழமான ஆன்மீக மதிப்பீடுகளால் வழிநடத்தப்பட வேண்டியுள்ளது. இதன் வழி நம் கடந்தகால தவறுகள் மீண்டும் இடம்பெறாமல் தடுக்கலாம்.

சமூக மற்றும் தனிமனித புதுப்பித்தலின் ஆதாரமாகவும் வலிமையாகவும் நற்செய்தி உள்ளது என்பதை, மனிதகுல வல்லுனராக இருக்கும் திருஅவையின் சார்பில் நான் உரக்கக் கூற விரும்புகிறேன். பகைமை உணர்வுகளை அழித்து, நன்மைத்தனங்களை ஆற்றும் வகையில் மனித மனங்களை மாற்றும் வல்லமை இயேசுவின் நற்செய்திக்கே உள்ளது. மனிதகுலத்தை கடவுளோடு ஒப்புரவாக்கிய இறைமகன் இயேசுவின் நற்செய்தியை நாம் அனைவரும் அறிவோமாக.

போர்ச் சூழல்களுக்கு எதிராக அமைதியின் நன்மைத்தனங்களையும், குடியேற்றதாரரை ஒதுக்கிவைப்பதை விடுத்து அவர்களை ஒன்றிணைப்பதன் பலன்களையும், சுயநலக்கோட்பாடுகளுக்கு எதிராக ஒத்துழைப்பைக் கைக்கொள்வதன் நன்மைகளையும் இலக்ஸம்பார்க் நாடு மற்றவர்களுக்கு காட்டுவதாக. அனைவருக்கும் பாதுகாப்பையும், அமைதியையும் உறுதிச் செய்யும் நோக்கத்தில் நேர்மையான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறவேண்டிய தேவை உள்ளது. பணிபுரிவதற்கே என இந்த திருப்பயணத்திற்கு எடுக்கப்பட்டுள்ள தலைப்பு, பிறருக்கு பணிபுரிவது மேன்மையான உயர்குணம் என்பதை நமக்கு காட்டி நிற்கிறது. மகிழ்வுடனும் தராளமனத்துடனும் மற்றவர்களுக்கு பணிபுரிய இறைவன் நமக்கு உதவுவாராக, என வேண்டி தன் உரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2024, 13:55