விளிம்பு நிலையில் இருப்பவர்களுடன் இயேசு மிகவும் நெருக்கமாக இருக்கிறார்!

நற்செய்தியின் மகிழ்விற்கும், கடவுளைச் சந்திப்பதற்கும், இயேசு தரும் அழைப்பிற்கு முன் நம்மில் யாரும் காது கேளாதவர்களாகவோ அல்லது பேச்சற்றவர்களாகவோ இருக்க வேண்டாம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

செப்டம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை இன்று, பாப்புவா நியூ கினியின் தலைநகர்  போர்ட் மோர்ஸ்பிவிலுள்ள சர் ஜான் கைஸ் திறந்தவெளி அரங்கில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய சிறப்புத் திருப்பலியில் வழங்கிய மறையுரை.

அன்பான சகோதரர் சகோதரிகளே, இன்றைய நற்செய்தியில் காது கேளாதவர் நலம்பெறும் நிகழ்வு (மாற்கு 7:31-37) நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. புனித மாற்கு நற்செய்தியாளரின் கருத்துப்படி, காதுகேளாத மனிதரின் தூரம் மற்றும் இயேசுவின் அருகாமை குறித்த இரண்டு முக்கியமான கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின்றன. அவற்றைக் குறித்து இப்போது சிந்திப்போம்.

காதுகேளாதவரின் தூரம்

இன்றைய நற்செய்தியில் ‘விளிம்புநிலை’ பகுதி என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது, தெக்கப்பொலி பகுதி யோர்தானுக்கு அப்பால், எருசலேமின் மையத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இங்கே பொய்த்தெய்வங்களை (புறமத மக்கள்) வழிபடுவோர் வாழ்ந்துவந்தனர். அவர்களின் பழக்கவழக்கங்கள் காரணமாக, அது கடவுளிடமிருந்து வெகு தொலைவில் இருந்த தூய்மையற்ற பகுதியாகக் கருதப்பட்டது.

மேலும், இந்தக் காதுகேளாத மனிதரும் மற்றொரு வகையான தூரத்தை அனுபவித்தார். அவர் கடவுளிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் தொலைவில் இருந்தார், ஏனெனில் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் காது கேளாதவர், இதனால் அவரால் எதையும் கேட்கவும் முடியவில்லை, மேலும் அவர் பேச்சற்றவராகவும் இருந்தார்.  

அவர் வெளி உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டார், தனிமைப்படுத்தப்பட்டார், அவரது காதுகேளாத மற்றும் பேச்சற்றத்தன்மையால் அவர் ஒரு கைதிபோலவே இருந்தார். அதனால் அவர் மற்றவர்களைச் சென்றடையவோ அல்லது அவர்களுடன் தொடர்பு கொள்ளவோ ​​முடியாத நிலையில் இருந்தார்.

மேலும் அந்த மனிதரின் நிலைமையை நாம் மற்றொரு அர்த்தத்திலும் விளக்கலாம். ஏனென்றால் நம் காதுகள் மற்றும் நாக்குகளுக்குப் பதிலாக, நம் இதயங்கள் அடைக்கப்படும்போது, ​​நாமும் கடவுளுடனும் நம் சகோதரர் சகோதரிகளுடனும் ஒன்றிப்பு மற்றும் நட்பிலிருந்து துண்டிக்கப்படலாம்.

உண்மையில், சுயநலம், அலட்சியம், சவால்களைச் சந்திப்பதில் பயம், வெறுப்பு, மனக்கசப்பு போன்றவற்றின் வழியாக, கடவுளிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் நம்மையே நாம் விலக்கிக்கொள்ளும் போதெல்லாம் ஒரு வகையான உள் காது கேளாமை மற்றும் இதயத்தின் பேச்சற்றத்தன்மை ஏற்படுகிறது. மேலும் இந்தப் பட்டியல் இன்னும் கூடத் தொடரலாம். இவை அனைத்தும் கடவுளிடமிருந்தும், நம் சகோதரர் சகோதரிகளிடமிருந்தும், நம்மிடமிருந்தும், வாழ்வின் மகிழ்ச்சியிலிருந்தும் நம்மை விலக்கி வைக்கின்றன.

இயேசுவின் அருகாமை

இரண்டாவதாக நாம் பார்ப்பது இயேசுவின் அருகாமை. முதலில், கடவுள் தம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக, தான் பரிவிரக்கம் உள்ளவராக நமக்கு அருகில் இருப்பதை எண்பிக்க விரும்புகின்றார். உண்மையில், நற்செய்தி வாசகத்தில், இயேசு புறமதத்தினரைச் சந்திப்பதற்காக யூதேயாவை விட்டும், தனது சொந்த மதச் சூழலை விட்டும், சுற்றுப்புறங்களில் உள்ள பகுதிகளுக்குச் செல்வதைக் காண்கிறோம் (வச. 7:31).

இந்த வழியில், இயேசு தூரத்தைக் (இடைவெளியை) குறைக்கிறார், தொலைவில் இருப்பதாகக் கருதப்படுபவர்களை அருகாமையில் கொண்டு வருகிறார்.  மேலும் அந்நியர்களாகக் கருதப்படுபவர்களுக்குத் தன்னை மிகவும் நெருக்கமானவராகக் காட்டுகிறார்.

‘காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்’ (வச.32-33) என்று இன்றைய நற்செய்தி உரைக்கிறது.

இவ்வாறு, இயேசு தூய்மையற்றவரைத் தொடுகிறார், அவ்வாறு செய்வதன் வழியாக அவருடன் ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறார், அவர் தன்னை நெருங்கி வருவதற்கான தூரத்தைக் குறைக்கிறார். நம் வாழ்வைத் தொடவும், ஒவ்வொரு தூரத்தையும் நீக்கவும் வரும் இயேசுவின் அருகாமை இது. இதனைத்தான், “இயேசு தம் வருகையின் வழியாக தொலைவில் இருந்தவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார்” (காண். எபே 2:17) என்று புனித பவுலடியார் நமக்கு எடுத்துரைப்பதைப் பார்க்கின்றோம்.

இயேசு தனது அருகாமையின் வழியாக மனிதரின் பேச்சற்ற மற்றும் காது கேளாத்தன்மையைக் குணப்படுத்துகிறார். உண்மையில், நாம் தொலைவில் இருப்பதாக உணரும் போதெல்லாம், அல்லது கடவுளிடமிருந்தும், நம் சகோதரர் சகோதரிகளிடமிருந்தும் அல்லது நம்மில் இருந்து வேறுபட்டவர்களிடமிருந்தும் நம்மைத் தொலைவில் வைத்திருக்க முடிவு செய்யும்போதெல்லாம், நம்மையே நாம் விலக்கிக்கொள்வதுடன், வெளியில் இருந்தும் நம்மைத் தடுத்துக்கொள்கிறோம் என்பதை உணர்ந்துகொள்வோம்.

அப்படியானால், கடவுளின் வார்த்தைக்கும், நமக்கு அடுத்திருப்போரின் அழுகைக்கும் காது கேளாதவர்களாக, கடவுளிடமோ அல்லது அவர்களிடமோ பேச முடியாமல், நம் சொந்த அகந்தையைச் சுற்றியே சுழன்று வருகிறோம்.

இருப்பினும், இயேசு நம்மிடையே நெருங்கி வந்து, காதுகேளாதவரிடம் கூரியத்தைப் போலவே நம்மிடமும், “எப்பத்தா” அதாவது “திறக்கப்படு” என்று கூறுகிறார் (மாற்கு 7:34). ஆம், ஏனென்றால் இயேசு நம்முடைய கடின இதயத்தை வென்று, நம்முடைய பயத்தைப் போக்கவும், காதுகளைத் திறக்கவும், நாவைத் தளர்த்தவும் உதவுகிறார். ஆகவே, இந்த வழியில், நாம் கடவுளால் அன்புகூரப்படும் குழந்தைகளாகவும், ஒருவருக்கொருவர் உடன்பிறந்தோராகவும் நம்மை மீண்டும் கண்டுகொள்வோம்.

இயேசு உங்களுடனும் நெருக்கமாக இருக்கிறார்

சகோதரர் சகோதரிகளே, பசிபிக் பெருங்கடலில் உள்ள இந்தப் பெரிய தீவில் வாழும் நீங்கள் கூட சில வேளைகளில், உங்களை உலகின் விளிம்பில் அமைந்துள்ள தொலைதூர நிலத்தில் இருப்பவர்களாக நினைத்திருக்கலாம். ஒருவேளை, வேறு காரணங்களுக்காக, நீங்கள் சில வேளைகளில் கடவுளிடமிருந்தும் நற்செய்தியிலிருந்தும் தொலைவில் இருப்பதாகவும், அவருடனோ அல்லது ஒருவருக்கொருவருடனோ தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாகவும் உணர்ந்திருக்கலாம்.

ஆனாலும், காதுகேளாத அந்த மனிதரிடம் இயேசு நெருங்கி வந்ததுபோலவே, அவர் உங்களிடமும் நெருங்கி வர விரும்புகிறார், தூரத்தை உடைக்கிறார். மேலும் நீங்கள் அவருடைய இதயத்தின் மையத்தில் இருக்கிறீர்கள் என்பதையும், நீங்கள் ஒவ்வொருவரும் அவருக்கு முக்கியம் என்பதையும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறார். அவர் உங்கள் காது கேளாமை மற்றும் பேச்சற்றத் தன்மையை குணப்படுத்த விரும்புகிறார்.

இன்று அவர் உங்கள் ஒவ்வொருவரிடமும், “எப்பத்தா” அதாவது “திறக்கப்படு” என்று கூறுகிறார்! இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், கடவுளுக்கும் நம் சகோதரர் சகோதரிகளுக்கும், நற்செய்திக்கும் நம்மைத் திறந்து, அதை நம் வாழ்க்கையின் திசைகாட்டியாக மாற்றுவது. இந்த வழியில், பாப்புவா நியூ கினியிலும் நாம் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு ஒரு வேறுபட்ட சமுதாயத்தை உருவாக்க முடியும்.

உங்களைத் திறந்திடுங்கள்

நாம் முதல் வாசகத்தில் கேட்டதுபோல, இன்று இயேசு உங்களைப் பார்த்து, "பாப்புவா நியூ கினி மக்களே, திடன் கொள்ளுங்கள், அஞ்சாதீர்கள், நற்செய்தியின் மகிழ்விற்கும், கடவுளைச் சந்திப்பதற்கும், உங்கள் சகோதரர் சகோதரிகளின் அன்பிற்கும் உங்களைத் திறந்திடுங்கள் என்று அழைப்புவிடுகின்றார். ஆகவே, இயேசு தரும் இந்த அழைப்பிற்கு முன், நம்மில் யாரும் காது கேளாதவர்களாகவோ அல்லது பேச்சற்றவர்களாகவோ இருக்க வேண்டாம்.

மேலும்,  அருளாளரான ஜான் மஸ்ஸுக்கோனி (John Mazzucconi), உங்களின் இந்தப் பயணத்தில் உங்களுடன் வருவார், ஏனென்றால் அவர் மிகுந்த சிரமத்திற்கும் எதிர்ப்புக்கும் மத்தியில் கிறிஸ்துவை உங்கள் மத்தியில் கொண்டு வந்தார். இதனால் மீட்பின் மகிழ்வான செய்திக்கு முன் யாரும் காதுகேளாதவராக இருக்கக்கூடாது.

கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2024, 14:13