இளைஞர்களே, சுதந்திரம் என்பது பிறரை மதித்து ஏற்பது!

நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் (தொநூ 4:9) நாம் எதிரிகள் அல்ல. ஒவ்வொரு உயிரும் இறைவனின் புனிதமான கொடை என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

செப்டம்பர் 11, புதன்கிழமை இன்று, கிழக்கு திமோரின் தலைநகர் டிலியில் (Dili) அந்நாட்டு இளையோருக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அவர்களுக்கு வழங்கிய அருளுரை.

அன்புள்ள இளைஞர்களே, இந்த நிலத்தின் மக்கள்தொகையில் நீங்கள் பெரும்பான்மையாக இருப்பதால், உங்கள் இருப்பு இந்நிலத்தை உயிரோட்டம், நம்பிக்கை மற்றும் எதிர்காலத்தால் நிரப்புகிறது. மகத்தான தியாகங்களுடன், இந்த நாட்டின் அடித்தளத்தை அமைப்பதில் உங்களுக்கு முன்னோடியாக இருந்தவர்கள், பொருளாதாரம், அரசியல், சமூகம் எனப் பல்வேறு தளங்களில் இன்னும் நிறையப் பணிகளைச் செய்ய வேண்டிய ஒரு மிகப்பெரும் பொறுப்பினை உங்களுக்கு விட்டுச் சென்றுள்ளனர்.

நீதி, ஒத்துழைப்பு, நேர்மை மற்றும் ஒன்றிப்பு ஆட்சி செய்யும் ஒரு நகரத்தை, ஒரு குழுமத்தை, ஒரு சமூகத்தை ஒன்றாகக் கட்டியெழுப்பவும், நற்செய்தியின் வழிகாட்டுதலின் கீழ் பணியைத் தொடரவும் வேண்டிய பொறுப்பு இப்போது உங்களுடையதாக இருக்கின்றது.

துயரங்களால் குறிக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் பின்னணியை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே இதன் அடிப்படையில், சுதந்திரம், அர்ப்பணிப்பு, உடன்பிறந்த உறவு ஆகிய மூன்று மதிப்பீடுகள் குறித்து நான் உங்களுடன் சிந்திக்க விரும்புகின்றேன்.

சுதந்திரம்

முதல் மதிப்பீடு சுதந்திரம். தெத்தும் (Tetum) என்ற மொழி சுதந்திரம் என்பதை 'ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே ஆளுதல்' என்றதொரு அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது. சுதந்திரம் என்பதை தனிமனிதனாகவும், ஈடுபாடற்றவராகவும், தான் மட்டுமே மேற்கோள் காட்டப்படக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்றதொரு அழைப்பாக நாம் கருதினால் இது வாழ்க்கையில் உங்களுக்கு உதவாது. மாறாக, உங்கள் எதிர்காலத்தின் பொறுப்பான மற்றும் சுதந்திரமான கதாநாயகர்களாக இருப்பதற்கும், உங்கள் தெளிந்து தேர்தல்களில் கவனமாக இருப்பதற்கும், அவைகளை எப்போதும் ஒன்றிப்பு, நபர்கள் மற்றும் படைப்பிற்கான மரியாதை, பரிவிரக்கம், அமைதியான மற்றும் தாராளமான சகவாழ்வை நோக்கி வழிநடத்துவது போன்ற வெளிப்பாட்டை புரிந்துகொள்வதற்கான ஓர் அழைப்பாக ஏற்றுக்கொண்டால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.

அர்ப்பணிப்பு

இரண்டாவது மதிப்பீடு அர்ப்பணம். இளைஞர்களே, நுகர்வோர் மற்றும் பொருள்முதல்வாதத்தால் ஏமாந்துவிடாதீர்கள். அவை தொடக்கத்தில் மகிழ்ச்சியின் தோற்றத்தைத் தரும் ஆனால் உண்மையில் அவை வெறுமையாகவும் பொய்த்தோற்றம் கொண்டதாகவும் இருக்கும். ஆனால் வசதியான மற்றும் உறுதியற்ற வாழ்க்கைக்கான வாக்குறுதிகள் அவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் மக்கள் அனுபவித்த துயரத்தின் காலங்கள் உங்களை உருவாக்கி, உங்களை வலிமையான ஆண்களாகவும் பெண்களாகவும் ஆக்கியுள்ளன. இதில் கட்டியெழுபுங்கள், விட்டுவிடாதீர்கள். தொடர்ந்து கடினமாகவும் தியாகத்துடனும் உழைப்பது, எளிதான காலங்களை உருவாக்குவதற்கு அல்ல, மாறாக, கிழக்கு திமோர் மற்றும் பிற இடங்களில், நாடுகளில் அமைதி, நீதி மற்றும் வளமை எல்லா மக்களுக்கும் தொடர்ந்து பரவி வருவதைப் போல, உலகத்தை சிறந்ததொரு இடமாக மாற்றுவதற்கு என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

உடன்பிறந்த உறவு

மூன்றாவது மதிப்பீடு உடன்பிறந்த உறவு. ஓர் இளைஞனாக புனித பவுலடியார் பல்வேறு தவறுகளை செய்தவர்தான். அவர் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார் (காண். பிலி l 3:6), கடவுள் அவருக்கு அருளிய கொடையை பிணைப்பதற்கும்  ஒன்றுபடுத்துவதற்கும் அல்ல, மாறாக அழிக்கவும் பிரிக்கவும் பயன்படுத்தினார்.  ஆனால் அவர் தமஸ்கு நகர் செல்லும் வழியில் இயேசுவால் தடுத்தாட்கொள்ளப்பட்ட பிறகு அவரது வாழ்வே முற்றிலும் மாறிப்போனது (காண். பிலி 3:7-11).

அதன் பின்னர், அவர் வெறுப்பதை நிறுத்தி அன்பு செய்யத் தொடங்கினார். எதிரி என்ற நிலையிலிருந்து சகோதரர் என்ற நிலைக்கு மாறினார். இரத்தக் கறை  படிந்திருந்த அவரது முந்தைய வாழ்வுதான், நம்பிக்கை, தோழமை மற்றும் பிறரன்புப் பணிகளின் அயராதத் தூதுவராகவும், உறுதியான மனம் கொண்ட நற்செய்தி  அறிவிப்பாளராகவும் அவர்  தன்னை மாற்றிக்கொள்ளத் தூண்டியது.

பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள்

எதிர்மறையான, அழிவுகரமான அல்லது வன்முறையான நடத்தை மாதிரிகளை முன்மொழிபவர்கள் உங்களில் தாக்கத்தை ஏற்படுத்த உங்களையே நீங்கள் அனுமதிக்காதீர்கள். நாம் அனைவரும் சகோதரர் சகோதரிகள் என்பதால் வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது! மேலும் சகோதரர் சகோதரிகளுக்குள் ஒரு போதும் போர் ஏற்படக்கூடாது.

தன் தம்பி ஆபேலைக் கொன்ற காயினிடம், "நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது" (காண்க. தொநூ 4:10) என்கிறார் கடவுள். ஆகவே, காயினைப் போன்றல்லாமல், நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் (காண்க. தொநூ 4:9). நாம் ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்ல. ஒவ்வொரு உயிரும் இறைவனின் புனிதமான கொடை என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்.

"உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள்" (உரோ 12:10) என்ற கூறும் புனித பவுலடியாரின் வழியில் செல்லுங்கள். காரணம் இப்படிப்பட்ட மனநிலைதான், ஒவ்வொரு நபரும் அனைவரின் நன்மைக்காக சிறந்த முறையில் பங்களிப்புச் செய்ய அனுமதிக்கிறது. இந்தப் பங்களிப்பு என்பது வயது, சமூக தகுதிநிலை அல்லது நம்பிக்கை போன்ற வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் செய்யப்படுகிறது.

இன்றுமுதல் உங்கள் அனைவரையும் அன்புடனும் இறைவேண்டலுடனும் என்னுடன் சுமந்து செல்கிறேன். நான் கிழக்கு திமோரிலிருந்து புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, நீங்கள் எனக்கு அளித்த வரவேற்புக்காக நன்றி மிகுந்த உள்ளமுடன், இந்த அன்பான நாட்டின் அனைத்து மக்களுக்கும் எனது ஆசீர்வாதங்களை வழங்குகின்றேன். இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2024, 12:57