திருத்தந்தையுடன் பாப்புவா நியூ கினி ஆளுநர் சந்திப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அன்புள்ளங்களே, செப்டம்பர் 6ஆம் தேதி பாப்புவா நியூ கினி நாட்டிற்கு உள்ளூர் நேரம் மாலை 7 மணிக்கு வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்றிரவு உணவை போர்ட் மோர்ஸ்பி திருப்பீடத் தூதரகத்தில் அருந்தி அங்கேயே நித்திரையிலாழ்ந்தார். செப்டம்பர் 2ஆம் தேதி மாலை வத்திக்கானிலிருந்து புறப்பட்ட திருத்தந்தை இந்த தன் பயணத்தின் முதல் நாடான இந்தோனேசியாவில் தன் பயணத்திட்டங்களை நிறைவுச் செய்து வெள்ளி மாலை பாப்புவா நியூ கினியின் தலைநகர் வந்தடைந்தார். திருத்தந்தையின் பாப்புவா நியூ கினி நாட்டிற்கான திருப்பயணத் திட்டங்கள் செப்டம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமையன்று காலையில் துவங்கின.
சனிக்கிழமை காலையில் உள்ளூர் நேரம் 7.30 மணிக்கு, அதாவது இந்திய நேரம் அதிகாலை 3 மணிக்கு திருப்பீடத் தூதரகத்தில் தனியாக அங்குள்ள சிறு கோவிலில் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உள்ளூர் நேரம் 9.30 மணியளவில் பாப்புவா நியூ கினி ஆளுநர் இல்லம் நோக்கி பயணம் மேற்கொண்டார்.
திருப்பீடத் தூதரகத்தில் இருந்து 8.2 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அரசு மாளிகையை, அதாவது ஆளுநர் வசிக்கும் மாளிகையை வந்தடைந்த திருத்தந்தையை ஆளுநர் Sir Bob Bofeng Dadae வாசலில் வந்து நின்று வரவேற்றார். ஆளுநர் Sir Bob Bofeng Dadae அவர்கள் இங்கிலாந்து மன்னரின் பிரதிநிதிபோல் செயல்படுகிறார். 1961ஆம் ஆண்டு பாப்புவா நியூ கினி நாட்டில் பிறந்த இவர், இந்நாட்டின் பத்தாவது ஆளுநராக 2017ஆம் ஆண்டு அரசி இரண்டாம் எலிசபெத்தினால் நியமிக்கப்பட்டு நிர்வாகப் பொறுப்புக்களைக் கவனித்து வருகின்றார்.
பாப்புவா நியூ கினி நாட்டின் அரசியல்வாதியான இவர், பாரளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னால் பாப்புவா நியூ கினியின் எவாஞ்சலிக்கல் லூத்ரன் கிறிஸ்தவசபையின் கணக்குகளை சரிபார்ப்பவராகவும், கிறிஸ்தவ பதிப்பகங்களின் உயர்மட்ட குழு அங்கத்தினராகவும் பணியாற்றியுள்ளார்.
2002ஆம் ஆண்டு பாப்புவா நியூ கினி பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2007 முதல் 11 வரை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாப்புவா நியூ கினியின் பத்தாவது ஆளுனராக பொறுப்பேற்று, 2022ஆம் ஆண்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பதவியில் தொடர்ந்து வருகிறார் Sir Bob Bofeng Dadae. அரசி இரண்டாம் எலிசபெத்திடமிருந்து “சர்” பட்டத்தையும் பெற்றுள்ளார் தற்போதைய ஆளுநர். “சர்” பட்டத்தை பாப்புவா நியூ கினியின் கர்தினால் John Ribat அவர்களும் அரசியிடமிருந்து 2016ஆம் ஆண்டு பெற்றுள்ளார். அதே ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவரை நாட்டின் முதல் கர்தினாலாக உயர்த்தினார். ஆளுநர் மாளிகையில் திருத்தந்தைக்கும் பாப்புவா நியூ கினி ஆளுநருக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பு ஓர் அரை மணி நேரம் நீடித்தது. அரசு அதிகாரிகளை சந்திப்பதற்காக போர்ட் மோர்ஸ்பியிலுள்ள APEC Hausக்கு செல்வதற்கு முன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்புவா நியூ கினி நாட்டுத் தலைநகரின் புறநகர்ப் பகுதியான, கொனடொபுவில் உள்ள அரசு இல்லத்தில், அந்நாட்டின் ஆளுநரான சார் பாப் போஃபெங் ததா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தது இடம்பெற்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்