பாப்புவா நியூ கினி பிரதமருடன் திருத்தந்தை சந்திப்பு பாப்புவா நியூ கினி பிரதமருடன் திருத்தந்தை சந்திப்பு 

பாப்புவா நியூ கினி நாட்டின் பிரதமருடன் சந்திப்பு

திருத்தந்தையின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமையின் பயணத்திட்டங்கள், பாப்புவா நியூ கினி நாட்டின் பிரதமரை திருப்பீடத்தூதரகத்தில் சந்திப்பதிலிருந்து துவங்கியது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பாப்புவா நியூ கினி நாட்டிற்கு செப்டம்பர் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை வந்தடைந்த திருத்தந்தை, செப்டம்பர் 7ஆம் தேதி தன் திருப்பயணத் திட்டங்களைத் துவக்கி, முதலில் ஆளுநரை அவரின் மாளிகையில் சென்று சந்தித்து, அதன் பின் APEC எனப்படும் ஆசிய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் மையத்தினைச் சென்றடைந்து அரசியல் மற்றும் சமூக அதிகாரிகள், அரசியல் தூதுவர்கள் என பலரை சந்தித்து உரை ஒன்றும் வழங்கிய பின், காரித்தாஸ் பெண்கள் தொழிற்கல்வி நிலையத்தில் ஏழைகள் மற்றும் தெருவில் வாழும் சிறார்களை சந்தித்தார்.  அதன் பின் திருஅவை அதிகாரிகளைச் சந்தித்து உரை வழங்கியதுடன் அவரின் சனிக்கிழமை தின நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்தன. எவ்வாறு தன் முதல் நாள் பயணத்திட்டத்தை ஆளுநர் மாளிகை சந்திப்புடன் துவக்கினாரோ, அதுபோல் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமையின் பயணத்திட்டங்கள், பாப்புவா நியூ கினி நாட்டின் பிரதமரை மோர்ஸ்பி திருப்பீடத்தூதரகத்தில் சந்திப்பதிலிருந்து துவங்கியது. பாப்புவா நியூ கினி நாட்டின் பிரதமராக 53 வயதான ஜேம்ஸ் மராப் அவர்கள், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அவர் அங்குள்ள PANGU Pati என்ற அரசியல் கட்சியின் முக்கிய தலைவராக உள்ளார். இவர் 1993இல் பாப்புவா நியூ கினி பல்கலைக்கழகத்தில் இலக்கிய பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய பாடங்களிலும் அவர் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் இந்நாட்டின் 8ஆவது பிரதமர் ஆவார். பிரதமர் ஆகும் முன்பு இவர் கல்வி மற்றும் நிதி அமைச்சராக பல முக்கிய துறைகளைக் கவனித்துள்ளார்.

பிரதமர் ஜேம்ஸ் மராப் அவர்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமானால், இந்தியா மீது அவர் மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டவர். கடந்த ஆண்டு மே மாதம் ஆசிய- பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம்  தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் இடம்பெற்ற போது, அவர் பிரதமர் மோடியுடன் நடந்துகொண்ட விதம் இதற்கு சான்றாக உள்ளது. பாப்புவா நியூ கினி நாட்டைப் பற்றிச் சொல்லும்போது, கடந்த ஆண்டு APEC எனப்படும் ஆசிய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்திற்கு பிரதமர் மோடி வந்தபோது அக்கூட்டத்தின் ஒரு பகுதியாக பாப்புவா நியூ கினி பிரதமர் ஜேம்ஸ் மாரப் அவர்களுடன் இணைந்து, அந்நாட்டின் ‘தோக் பிசின்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி அவர்கள் வெளியிட்டதையும் நாம் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்த மொழிபெயர்ப்புப் பணியை செய்தவர்கள், பாப்புவா நியூ கினியின் வெஸ்ட் நியூ பிரிட்டன் மாகாண முதல்வர் சசீந்திரன் முத்துவேல் மற்றும் அவரது மனைவி சுபா சசீந்திரன் ஆகியோர் என்பது சிறப்பு. தமிழ்நாட்டின் சிவகாசியைச் சேர்ந்த  சசீந்திரன் முத்துவேல் அவர்கள், பாப்புவா நியூ கினி நாட்டின் ஒரு மாகாண முதல்வராக பணியாற்றி வருகிறார் என்பது தமிழர்கள் பெருமைப்படவேண்டிய விடயம்தான். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2024, 15:33