இலக்ஸம்பர்க் அரச குடும்பத்தாருடன் திருத்தந்தை பிரான்சிஸ் இலக்ஸம்பர்க் அரச குடும்பத்தாருடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

இலக்ஸம்பர்க்கில் திருத்தந்தைக்கு வரவேற்பு

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் 1985ஆம் ஆண்டு மே மாதம் ஓலாந்தா, பெல்ஜியம், இலக்ஸம்பர்க் ஆகிய நாடுகளுக்கு திருத்தூதுப்பயணம் மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலக்ஸம்பர்க் மற்றும் பெல்ஜியத்திற்கு வருகை தந்துள்ளார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

செப்டம்பர் 26 வியாழன் காலை உரோமிலிருந்து புறப்பட்ட விமானம் இலக்ஸம்பர்க்கின் Findel பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. உள்ளூர் நேரம் காலை 10.00 மணியளவில் லக்ஸம்பர்க் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், திருத்தந்தையை இலக்ஸம்பர்க்கின் மன்னர் வழி வந்த அந்நாட்டுத் தலைவர் அரசர் ஹென்றி ஆல்பர்ட் கபிரியேல், அரசி Maria Teresa Mestre, பிரதமர் Luc Frieden ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். இரு இளையோர் பாரம்பரிய முறைப்படி திருத்தந்தைக்கு மலர்கள் கொடுத்து வரவேற்றபின் நாட்டின் மன்னர், பிரதமர், திருத்தந்தை ஆகியோர் விமான நிலையத்தில் உள்ள அரசு வரவேற்பு வழங்கும் (Salon d’Honneur) இடத்தினை வந்தடைந்தனர். ஏறக்குறைய 100 இளைஞர்கள் கூடி திருத்தந்தையை வரவேற்றதைத் தொடர்ந்து, வத்திக்கான் மற்றும் இலக்ஸம்பர்க் நாட்டுப்பண்கள் பாடப்பட்டன.

இலக்ஸம்பர்க்கின் மன்னர் வழி வந்த அரசர்

அரசர் ஹென்றி ஆல்பர்ட் கபிரியேல் பெலிக்ஸ் என்னும் இயற்பெயர் கொண்ட அரசர் ஹென்றி, 1955 ஆம் ஆண்டு அரசர் முதலாம் யோவானுக்கும், பெல்ஜியம் நாட்டின் இளவரசியும் இலக்ஸம்பர்க் அரசியுமான ஜூசெப்பினா கர்லோத்தா என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர். அரசியல் அறிவியலில் பட்டப்படிப்பை 1980 ஆண்டு ஜினெவ்ரா பல்கலைக்கழகத்தில் பெற்ற இவர், 1980 முதல் 1998 வரை, லக்ஸம்பர்க் மாநில கவுன்சில் உறுப்பினராகவும், 1998 முதல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராகவும் இருந்தார். 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று இவரது தந்தை பதவி விலகியதைத் தொடர்ந்து, 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 7 முதல் லக்சம்பர்க்கின் அரசராகப் பொறுப்பேற்றார். மரியா தெரசா மேஸ்ட்ரே என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றனர்.

விமான நிலையத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு திருத்தந்தைக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். அதன்பின் கூடியிருந்த இளைஞர்கள் அருகில் சென்று அவர்கள் அனைவருக்கும் கரம்குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அதிகாரப்பூர்வ அரசாங்க வரவேற்பு முடிந்தவுடன், அங்கிருந்து தனி வாகனத்தில் புறப்பட்டு லக்ஸம்பர்க் திருப்பீடத்தூதரகம் வந்தடைந்த திருத்தந்தை அவர்கள், உள்ளூர் நேரம் காலை 10.40 மணியளவில் 8.8 மிகீ தூரம் காரில் பயணித்து கிராண்டுகாலே இலக்ஸம்பர்க் அரசு மாளிகையை வந்தடைந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2024, 14:42