சிங்கப்பூர் நாட்டில் முதியோர் மற்றும் நோயுற்றோருடன் திருத்தந்தை
ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்
தான் தங்கியிருந்த புனித பிரான்சிஸ் சேவியர் தியான மையத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி கூறி அங்கிருந்து விடை பெற்றார் திருத்தந்தை பிரான்சிஸ். ஏறக்குறைய உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு, இந்திய நேரம் காலை 6 மணி 30 நிமிடங்களுக்கு புனித திரேசா முதியோர் இல்லம் நோக்கி பயணமானார் திருத்தந்தை. புனித பிரான்சிஸ் சேவியர் தியான இல்லத்திலிருந்து ஏறக்குறைய 16 கிலோமீட்டர் தூரத்திலுள்ள புனித தெரேசா இல்லத்தை 20 நிமிடங்களில் காரில் பயணம் செய்து வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இங்கு முதியோர் மற்றும் நோயுற்றோரை சந்திக்க ஏற்பாடாகியிருந்தது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ,சிங்கப்பூரில் உள்ள புனித தெரேசா இல்லத்தில், முதியோர் மற்றும் நோயுற்றோரைச் சந்தித்து அவர்களிடம், அவர்களின் ஜெபம் இறைவனுக்கு மிகவும் முக்கியமானது என்று கூறினார். மேலும், திருத்தந்தை அவர்கள், திருஅவைக்காகவும், மனிதநேயத்திற்காகவும் ஜெபிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், இறைவன் அவர்களின் ஜெபங்களை கேட்பதில் மிகவும் மகிழ்கிறார் என்றும் எடுத்துரைத்தார்.
அன்பான வரவேற்பிற்கு பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதியோர் மற்றும் நோயுற்றோருக்கான தனது ஜெபங்களை உறுதியளித்ததுடன், தனக்காகவும் ஜெபிக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
கத்தோலிக்க நலச் சேவை என்னும் அமைப்பினரால் நடத்தப்படும், செயின்ட் தெரஸா, செயின்ட் ஜோசப், வில்லா பிரான்சிஸ் ஆகிய 3 இல்லங்களிலிருந்தும், புனித தெரேசா சிற்றாலயத்தில் சக்கர நாற்காலிகளில் அமர்ந்திருந்த ஏறக்குறைய 60 முதியோர்களை ,திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசிர்வதித்தார். மேலும், இச்சந்திப்பின் போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு குடியிருப்போரை ஆசிர்வதித்தார்.
அவ்வில்லத்தின் மனித வளமேம்பாட்டு அதிகாரி கேண்டிலின் என்பவர், செயின்ட் தெரசா இல்லத்தில் 20 ஆண்டுகளாக பணி புரிவது தனக்குக் கிடைத்த மிகப்பெரும் பேறு என்றும், 38 ஆண்டுகளுக்கு முன் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் வருகையின் போது அவரை காணக்கூடிய வாய்ப்பை தவறவிட்டதாகவும், தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நேரில் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.
மேலும் அவர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அயராத அர்ப்பணிப்பை பாராட்டியதுடன், மிக நீண்ட திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்யவிருக்கும் திருத்தந்தை, தனது முதிர்ந்த வயதிலும் மனவலிமை நிறைந்தவர் என்றும், மக்களுக்காக அவர் மேலும் பல பயணங்கள் மேற்கொள்ள விரும்புவதாகவும், மக்களிடையே நம்பிக்கை மற்றும் ஒன்றிப்பை ஏற்படுத்த விரும்புவதாகவும் கூறினார்.
மென்மையான இளந்தென்றலும், பறவைகளின் கீச்சிடும் ஒலிகளும், வளாகம் முழுவதையும் அமைதி உணர்வால் நிரப்புகின்ற இயற்கையான சூழலில் அமைந்துள்ள புனித தெரேசா இல்லமானது, 1935ஆம் ஆண்டு, ஏழைகளின் சிறிய சகோதரிகள் சபையால் நிறுவப்பட்டது. தற்போது கத்தோலிக்க நலச்சேவை என்னும் அமைப்பினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது 1959 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு சமூக சேவை நிறுவனம் ஆகும். இவ்வில்லத்தில் உள்ள சிற்றாலயத்தின் பலிபீடத்தின் பின் சுவரில், இறைவனின் அன்பு இவ்வுலகில் குடியிருக்கிறது என்னும் வாசகமானது சீன மொழியில் எழுதப்பட்டுள்ளது. வாழ்விழந்த முதியோருக்கு வாழ்வளிக்கும் அமைதியான சோலை இந்த முதியோர் இல்லம் ஆகும். இவ்வில்லத்தில் தற்போது ஏறக்குறைய 80 முதல் 90 வயதுக்குட்பட்ட 185 முதியோர் உள்ளனர். இவ்வில்லத்தை நடத்தும் கத்தோலிக்க நலச்சேவை அமைப்பானது, வறுமையில் வாடும் குடும்பங்களின் நிதித் தேவைகளை நிறைவேற்றுவதுடன், அரசு உதவிகள் மற்றும் பல்வேறு மதக் குழுக்களின் ஒத்துழைப்பையும் பெற்று பயனடைந்து வருகிறது. மேலும், வயது முதிர்ந்தோர் இவ்வுலகை விட்டு விடைபெறுமுன் அவர்களுக்கு ஒரு நல்ல மகிழ்ச்சியான வாழ்வையும், சிறந்த அன்பையும், அக்கறையுடன் கூடிய கவனிப்பையும் வழங்குவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.
இங்கு ஏறக்குறைய அரைமணி நேரம், அதாவது, ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவியருடன் செலவிட்ட நேரத்தைவிட அதிக நேரம் செலவிட்ட திருத்தந்தை, அங்கிருந்து ஏறக்குறைய 3.7 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கத்தோலிக்க இளம் மாணவர் கல்லூரி நோக்கிப் பயணமானார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்