சிங்கப்பூரிலிருந்து விடைபெற்று உரோம் நோக்கிய பயணம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
கத்தோலிக்க இளம் மாணவர் கல்லூரியிலிருந்து விடைபெற்று, அங்கிருந்து ஏறக்குறைய 22 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் நோக்கிப் பயணமானார் திருத்தந்தை பிரான்சிஸ். விமான நிலையத்தில் சிங்கப்பூர் பண்பாட்டுத்துறை அமைச்சர் வந்திருந்து திருத்தந்தையை வழியனுப்பி வைத்தார். திருத்தந்தையின் விமானம் உள்ளூர் நேரம் நண்பகல் 12 மணி 25 நிமிடங்களுக்கு, அதாவது இந்திய நேரம் காலை 9.55 மணிக்கு உரோம் நகர் நோக்கி புறப்பட்டது. உரோம் நகருக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான 9567 கிலோ மீட்டர் தூரத்தை, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, மியான்மார், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பேகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், அசர்பைஜான், ஜியார்ஜியா, துருக்கி, கிரேக்கம், அல்பேனியா ஆகியவைகளின்மேல் பறந்து இத்தாலிய உள்ளூர் நேரம் மாலை 6 மணி 30 நிமிடங்களுக்கு வந்தடைவார் திருத்தந்தை என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்திய நேரம் வெள்ளி இரவு 10 மணியாக இருக்கும். இத்துடன் திருத்தந்தையின் 45வது வெளிநாட்டுத் திருப்பயணம் நிறைவுக்கு வருகிறது.
ஆசியா மற்றும் ஓசியானியாவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருப்பயணத்தில் பல்வேறு காட்சிகள் இன்னும் நம் நினைவின் முன் நிற்கின்றன. ஜகார்த்தாவின் இஸ்லாம் தலைமைக்குரு திருத்தந்தையை அன்புடன் வரவேற்ற விதம், ஜகார்த்தாவின் பேராலயத்தையும் இஸ்லாம் மசூதியையும் இணைக்கும் சுரங்கப்பாதை, ஜப்பான் நாட்டிற்கு மறைப்பணியாளராகச் செல்லவேண்டும் என தன் இளவயதில் ஆவல் கொண்ட திருத்தந்தை வனிமோ நகருக்கு பயணம் மேற்கொண்டு அங்கு விசுவாசிகளை சந்தித்தது, பாப்புவா நியூ கினி நாட்டில் வந்து இறங்கியவுடனேயே அகதிகள் மற்றும் குடியேற்றதாரர்களின் பிரதிநிதிகளை சந்தித்தது, அதில் இலங்கை நாட்டிலிருந்து அடைக்கலம் தேடும் தமிழ் மக்களும் இருந்தது, அவர்களின் தலைகளில் கை வைத்து ஆசீர்வதித்தது, கிழக்கு திமோர் நாட்டில் அவருக்கு வழங்கப்பட்ட அமோக வரவேற்பு, கைவிடப்பட்ட குழந்தைகளை Irmãs Alma பள்ளியில் சந்தித்தது, 6 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் திருப்பலியில் கலந்துகொண்டது, சிஙகப்பூரில் முதியோர் மற்றும் நோயாளிகளை புனித தெரேசா இல்லத்தில் சந்தித்தது என மனதை விட்டு அகலாத நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டேச் செல்லலாம். நமக்கு மட்டுமல்ல, திருத்தந்தைக்கும் இந்நிகழ்வுகள் மனதிற்கு மிகவும் நெருக்கமானவையே. தொடரட்டும் திருத்தந்தையின் திருப்பயணங்கள், அத்துடன், அவருக்கான நம் இறைவேண்டல்களும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்