திருத்தந்தையின் பெயரில் சிங்கப்பூரில் புதிய ஆர்க்கிட் மலர்

ஒவ்வொரு முக்கிய தலைவர்கள் சிங்கப்பூருக்கு முதல்முறையாக வரும்போது அந்நாட்டில் ஒட்டுமுறை மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட ஆர்க்கிட் வகை செடிகளுக்கு அவர்களின் பெயர் வைக்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சிங்கப்பூரின் புனித பிரான்சிஸ் சேவியர் தியான மையத்தில் தங்கியிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் 12, வியாழக்கிழமையன்று காலை பாராளுமன்ற இல்லம் நோக்கி காரில் பயணமானார். 20.5 கிலோ மீட்டர் தூரம் காரில் பயணம் செய்து பாராளுமன்ற இல்லத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வந்தடைந்தபோது உள்ளூர் நேரம் காலை 9 மணி, இந்திய நேரம் காலை 6 மணி 30 நிமிடங்கள். இந்த பாராளுமன்ற இல்ல முன்வளாகத்தில் அந்நாட்டிற்கான அதிகாரப்பூர்வ வரவேற்பு திருத்தந்தைக்கு வழங்கப்பட்டது. முதலில் இராணுவ மரியாதை வழங்கப்பட்டு, இரு நாடுகளின் தேசிய பண்களும் இசைக்கப்பட்டன. பாராளுமன்ற இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் வரவேற்பு புத்தகத்தில் சில வார்த்தைகளை எழுதி கையெழுத்தும் இட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்ச்சியின்போது இன்னொரு முக்கிய நிகழ்வும் இடம்பெற்றது. ஒவ்வொரு முக்கிய தலைவர்கள் இந்நாட்டிற்கு வரும்போதும் அந்நாட்டில் ஒட்டுமுறை மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட ஆர்க்கிட் வகை செடிகளுக்கு அவர்களின் பெயர் வைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. 1955ஆம் ஆண்டிலிருந்து 57 வரை சிங்கப்பூருக்கான இங்கிலாந்தின் ஆளுனராக இருந்த Sir Robert Black என்பவரின் மனைவி Aranthera Anne Black என்பவரின் பெயரில் புதிய ஒட்டுவகை ஆர்க்கிட் மலர் 1956ஆம் ஆண்டு பெயரிடப்பட்டதிலிருந்து இந்த வழக்கம் சிங்கப்பூரில் இருந்து வருகிறது. ஆர்க்கிட் மலர்ச் செடிகளின் இரு இனங்களை ஒட்டு முறை மூலம் ஒன்றிணைத்து புதிய வகை ஆர்க்கிட் இனத்தை உருவாக்கும்போது அதற்கு ஒரு முக்கிய நபரின் பெயரை சூட்டுவது சிங்கப்பூர் பாரம்பரியமாகும். அதன்படி, இந்த திருத்தந்தையின் பயணத்தின்போது ஒரு புது வகை ஆர்க்கிட் மலருக்கு திருத்தந்தையின் பெயர் வைக்கப்பட்டது. இதன் அறிவியல் பெயர் Dendrobium Papa Franciscum என்பதாகும். திருத்தந்தையின் வருகையை கௌரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ஆர்க்கிட் வகை, இளமஞ்சள் இதழ்களால் மூடிய மொட்டுக்களையும், தூய வெள்ளை மலர்களையும் கொண்டுள்ளது. அந்த ஆர்க்கிட் செடியை பூக்களுடனும் மொட்டுக்களுடனும் பார்க்கும்போது அது வத்திக்கான் நாட்டுக் கொடியை நினைவுபடுத்துவதுபோல் உள்ளது. இந்த வகை ஆர்க்கிட் செடி திருத்தந்தையின் பெயரால் இனிமேல் அழைக்கப்படும். சிங்கப்பூரின் தாவிரவியல் பூங்காவில் இந்த ஆர்க்கிட் செடிகள் வளர்க்கப்படுகின்றன. உலகிலேயே அதிக அளவு ஆர்க்கிட் இனவகைகளைக் கொண்டுள்ளது சிங்கப்பூர் ஆர்க்கிட் தாவரவியல் பூங்கா. ஆர்க்கிட் தான் சிங்கப்பூரின் தேசிய மலராகும். அன்பு,அழகு மற்றும் புது வாழ்வை குறித்து நிற்பதாக ஆர்க்கிட் மலர் உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2024, 11:45