வியட்நாம், மியான்மார் மக்களுக்குத் திருத்தந்தையின் ஆன்மிக உடனிருப்பு

உலகை இரத்தம் சிந்த வைத்த போர்களை நாம் மறந்துவிடக் கூடாது. துன்புறுத்தப்பட்ட உக்ரைன், மியான்மார், மத்திய கிழக்கில் வாழும் மக்கள், குறிப்பாக பிள்ளைகளை இழந்த அன்னையர்களுக்காக செபிப்போம் - திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அருளாளர் செராபின் அவர்களின் அப்போஸ்தலிக்க பேரார்வம் பிற அருள்பணியாளர்கள் தங்களது வாழ்க்கையை ஏழை எளிய மக்களுக்காகவும் கடவுள் மக்களின் ஆன்மிக நன்மைக்காகவும் அர்ப்பணிக்க ஓர் அடையாளமாக இருக்கட்டும் என்றும், புயலால் பாதிக்கப்பட்ட வியட்நாம் மற்றும் மியான்மார் நாட்டு மக்களுக்கு தன் ஆன்மிக உடனிருப்பை வழங்குவதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செபஉரையைத் தொடர்ந்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புயலால் பாதிக்கப்பட்ட வியட்நாம் மற்றும் மியான்மர் நாட்டு மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், புயலால் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் இடம்பெயர்ந்தவர்கள், உறவுகள் மற்றும் உடைமைகளை இழந்தவர்கள், உதவிப்பொருள் வழங்கி வருபவர்கள் என அனைவருக்கும் கடவுள் ஆசிர் கிடைக்கப்பெற செபிப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 14 சனிக்கிழமை மெக்சிகோ நாட்டில் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்ட அமல அன்னை இறை இரக்க மறைப்பணியாளர்கள் சபையின் நிறுவனரான  அருள்பணி Moisés Lira Serafín அவர்கள் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், 1950ஆம் ஆண்டு இறந்த அருளாளர் தனது இறை நம்பிக்கையாலும் இறை அன்பாலும் ஏழை எளிய மக்களுக்கு உதவினார் என்றும் கூறினார்.

அருளாளர் செராபின் அவர்களின் அப்போஸ்தலிக்க பேரார்வம் பிற அருள்பணியாளர்கள் தங்களது வாழ்க்கையை ஏழை எளிய மக்களுக்காகவும் கடவுள் மக்களின் ஆன்மிக நன்மைக்காகவும் அர்ப்பணிக்க ஓர் அடையாளமாக இருக்கட்டும் என்று கூறி புதிய அருளாளரைக் கொடுத்த மெக்சிகோ மக்களுக்கு தன் வாழ்த்துக்களையும். பாராட்டுக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை.

உலகை இரத்தம் சிந்த வைத்த போர்களை நாம் மறந்துவிடக் கூடாது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், துன்புறுத்தப்பட்ட உக்ரைன், மியான்மார், மத்திய கிழக்கில் வாழும் மக்கள், குறிப்பாக பிள்ளைகளை இழந்த அன்னையர்களையும் நினைவுகூர்ந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரேச்சல் எனப்படும் போரினால் இறந்த காசாவைச்சார்ந்த இளைஞனின் தாயைச் சந்தித்ததை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் செபிப்பதாகவும்,அனைத்து குடும்பங்களுடன் தனது ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் மோதல், வெறுப்பு மற்றும் வன்முறை நிறுத்தப்பட வேண்டும், பிணையக்கைதிகள் விடுவிக்கப்படட்டும், பேச்சுவார்த்தைகள் தொடரட்டும், அமைதிக்கான தீர்வுகள் காணப்படட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகர மக்கள் இத்தாலி மற்றும் உலகின் பிற பகுதிகளிலிருந்து வந்திருக்கும் மக்கள் ஆகிய அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், போலோனியாவின் Radom மறைமாவட்டத்திலுள்ள புனித Edwige Regina பங்குத்தள மக்கள், மேற்படிப்பிற்காக உரோம் நகர் வந்திருக்கும் இயேசு சபை அருள்பணியாளர்கள், ஜெர்மன் மாணவர்கள், அசிசியிலிருந்து திருயாத்திரை வந்திருக்கும் மக்கள், இம்மாகுலேட் சபை மாணவர்கள் என அனைவரையும் வாழ்த்தினார் திருத்தந்தை.

இறுதியாக அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை  தனக்காக செபிக்கும்படி கூடியிருந்த திருப்பயணிகளிடன் கேட்டுக்கொண்டு தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2024, 13:25