திருத்தந்தையின் புதன் தின நிகழ்வுகள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இந்தோனேசியா நாட்டில் இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் புதன்கிழமையின், அதாவது, செப்டம்பர் 4ஆம் தேதியின் பயணத்திட்டத்தை காலை தனியாக திருப்பலி நிறைவேற்றுவதுடன் துவக்க உள்ளார். அதன் பின் திருப்பீடத்தூதரகத்திலிருந்து 2.9 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்குச் செல்வார். தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள மெர்டெகா வளாகத்தின் வடபகுதியில் அமைந்திருக்கும் அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தைக்கான வரவேற்பு நிகழ்ச்சி இடம்பெற உள்ளது. அதன்பின் அரசுத்தலைவர் Joko Widodo அவர்களை அரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்து உரையாடுவார் திருத்தந்தை. அதன்பின் அரசுத்தலைவர் மாளிகையில் உள்ள Istana Negara என்ற அரங்கிற்கு நடந்து சென்று, அங்கு அரசியல் தலைவர்கள், இந்தோனேசியாவிற்கான பல்வேறு நாடுகளின் அரசுத்தூதுவர்கள் ஆகியோரை சந்தித்து உரை வழங்குவார். இதுவே இந்தோனேசியா நாட்டில் அவர் வழங்க உள்ள முதல் உரையாகும். இவ்வுரையை முடித்தபின் அங்கிருந்து 2.9 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்பீடத்தூதரகம் சென்று, இந்தோனேசியாவில் பணியாற்றும் இயேசு சபையினரை சந்தித்து அவர்களோடு சிறிது நேரம் உரையாடுவார். அதன்பின் மதிய உணவருந்தி ஓவெடுத்தபின், மாலையில் திருப்பீடத்தூதரகத்தில் இருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள விண்ணேற்பு நமதன்னை பேராலயத்திற்குச்சென்று அங்கு ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர், குருமடமாணவர்கள், பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்கள் ஆகியோரைச் சந்தித்து உரை ஒன்றும் வழங்குவார். அதன்பின் பேராலயத்திற்கு மிக அருகாமையில் உள்ள இளையோர் இல்லமான Grha Pemuda சென்று அங்கு Scholas Occurrentes அமைப்பின் அங்கத்தினர்களை, அதாவது இளையோரை சந்தித்து அவர்களோடு உரையாடி மகிழ்வார் திருத்தந்தை. இத்துடன் அவரின் புதன் தின திருப்பயண நடவடிக்கைகள் நிறைவுக்கு வரும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்