வன்முறைகளைத் தூண்டும் வழிமுறைகளாக, மதங்கள் மாறக்கூடாது
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
செப்டம்பர் 22 முதல் 24 வரை Sant'Egidio அமைப்பினரால் பாரிசில் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிக்கான கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது அமைதிக்கான செய்தியைத் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் அசிசியில், அமைதிக்கான முதல் கூட்டம் துவங்கி 38 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், திருஅவைத் தலைவர்கள், பிற மதத் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில், இப்போது நாம் உலகை அழித்துக் கொண்டிருக்கிறோம், அதனை நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
போரை நிறுத்துங்கள் என்னும் அவர்களின் குரலோடு தானும் இணைவதாக தெரிவித்துள்ள திருத்தந்தை, "கடந்த காலங்களில் மோதல்கள் மற்றும் போர்களைத் தூண்டுவதற்கு மதங்கள் பயன்படுத்தப்பட்டன எனவும், இச்செயல் நம் நாட்களிலும் தொடர்கிறது என்றும், புனித அசிசியாருடைய உள்ளுணர்வின் தாக்கத்தால் பாரிசில் நடைபெற்ற இந்த சந்திப்பானது, மக்களிடையே உடன்பிறந்த உணர்வை வளர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
"மதங்கள் ஒருபோதும் போர், வெறுப்பு அணுகுமுறைகள், பகைமை, தீவிரவாதம், வன்முறை ஆகிவற்றைத் தூண்டக்கூடாது என்றும், இந்த துயரமான உண்மைகள், மத படிப்பினைகளிலிருந்து விலகியதன் விளைவாகும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
மேலும், மதங்களை அரசியல் ரீதியாகக் கையாள்வதிலிருந்தும், வரலாற்றின் அடிப்படையிலும், அனைவரின் இதயங்களிலும் உள்ள மத உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட மதக் குழுக்களின் சுயநல விளக்கங்களாலும் வன்முறைகள் விளைகின்றன என்றும் தெரிவித்தார்.
தேசியவாதம், இனவாதம் போன்ற வன்முறைகளைத் தூண்டுவதற்கான வழிமுறைகளாக, மதங்கள் ஒருபோதும் மாறக்கூடாது என்றும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர்களில் இறைவனைக் கொண்டு வர முயற்சி செய்யக் கூடாது என்றும் இதனால் போர்கள் மட்டுமே அதிகமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மத நம்பிக்கைகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களாக, உலகளாவிய உடன் பிறந்த உணர்வின் ஆற்றலையும், அழகையும் Sant'Egidio அமைப்பினர் அனுபவித்திருக்கிறார்கள் என்றும், இன்றைய உலகில் அமைதியின் கருவிகளாக இருப்பதற்கான அவர்களின் முயற்சிகளில் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்றும், மற்றவர்கள் தொடர்ந்து போரைத் தூண்டினாலும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து அமைதிக்காக உழைக்க முடியும் என்றும் தனது செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித அசிசியாரின் அமைதிக்கான தாகத்தை இன்றளவும் உயிருடன் வைத்திருக்கும் ஆர்வம் மற்றும் படைப்பாற்றலுக்காக Sant'Egidio அமைப்பினருக்கு நன்றி தெரிவித்ததோடு, அடிப்படைவாதங்கள், சண்டை சச்சரவுகளால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், தொற்று நோய்களின் தாக்கங்கள் என்ற தற்கால மாற்றங்களுக்கு மத்தியில் வாழும் நாம், இவை அனைத்தும் நம்மை எங்கு இட்டுச் செல்லும் என்பது பற்றிய தெளிவான சிந்தனை இல்லாமல் இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
உண்மையான மத உணர்வுகளுக்கும், அமைதி என்ற மகத்தான நன்மைக்கும் இடையே உள்ள உள்ளார்ந்த தொடர்பினை திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் வார்த்தைகளில் எடுத்துக்காட்டி, வரலாற்றிலிருந்து மரபுரிமையாக அல்லது நவீன கோட்பாடுகளால் உருவான பிளவுகளின் கொடிய சங்கிலிகளை உடைக்க, அமைதியின் புதிய மொழிக்கான அழைப்பினையும் விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சமூகத்தில் உடன் பிறந்த உணர்வைக் கட்டியெழுப்புவதற்கும், நீதியைப் பாதுகாப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க வேண்டுமெனவும், அமைதிக்காக ஜெபிக்க வேண்டும் என்றும் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
சண்டை சச்சரவுகள் மற்றும் போர்கள் நிறைந்துள்ள உலகில், அமைதியை நிலைநிறுத்துவதற்கு விசுவாசிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் விலைமதிப்பற்றவை என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
அமைதி என்னும் பெரும்பொறுப்புக்கு, ஞானம், மனவுறுதி, பெருந்தன்மை, உறுதிப்பாடு ஆகிவை தேவை என்றும், உலக மக்கள் அனைவரும் உடன் பிறந்த உணர்வோடு வாழ வேண்டும் என்னும் கடவுளின் கனவை நனவாக்கும் பொறுப்பு விசுவாசிகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் மேலும் எடுத்துரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்