காசாவில் அமைதிக்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை
மெரினா ராஜ் - வத்திக்கான்
காசாவில் அமைதிக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதுவரை காசாவில் 41,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செப்டம்பர் 13 வெள்ளிக்கிழமை மாலை தனது ஆசியா மற்றும் ஒசியானியாவிற்கான 45ஆவது திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து உரோம் திரும்புகையில் விமானத்தில் வைத்து பத்திரிக்கையாளர்கள் தொடுத்த கேள்விகளுக்கு பதிலளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிழக்கின் நியுயார்க் என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் சிங்கப்பூர் வளர்ச்சியடைந்த, தூய்மையான கல்வியறிவு பெற்ற வானளாவிய கட்டிடங்கள் கொண்ட, பல்சமய கலாச்சாரங்கள் கொண்ட நகரம் என்றும், இளைஞர்கள் மற்றும் பல்மதத்தலைவர்கள் உடனான சந்திப்பு, உடன்பிறந்த உறவிற்கான சான்றாக அமைந்தது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சிங்கப்பூர் மக்களின் கலாச்சாரம் தன்னை அதிகமாக ஈர்த்தது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அம்மக்களிடையே பாகுபாடு என்பது இல்லை என்றும், கலாச்சாரங்களை ஈர்க்கும் ஒரு பெரிய தலைநகரமாக சிங்கப்பூர் விளங்குகின்றது என்றும் கூறினார்.
குழந்தைகள் தான் நமது எதிர்காலம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், கிழக்கு திமோரில், தான் அதிகமான குழந்தைகளைக் கண்டதாகவும், சிங்கப்பூரில் குறைவான குழந்தைகளைக் கண்டதாகவும் எடுத்துரைத்து, ஒவ்வொரு நாடும் நபரும் மற்றொன்றிலிருந்து வேறுபட்ட செழுமையைக் கொண்டுள்ளது, நமது தொடர்புகளில் உடன்பிறந்த உறவு மிக முக்கியமானது என்றும் கூறினார்.
கிழக்கு திமோரில் முதலைகள் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கான காரணத்தை ஒரு பத்திரிக்கையாளர் கேட்க அதற்கு பதிலளித்த திருத்தந்தை கிழக்கு திமோர் ஓர் எளிய, குடும்பம் சார்ந்த, மகிழ்ச்சியான கலாச்சாரம் கொண்ட நாடு, தான் அதிகம் அன்பு செய்யும் நாடு என்றும், வெளியிலிருந்து வரும் தீய எண்ணங்கள் நமது நல்லிணக்கத்தை அழித்துவிடும் என்பதை வலியுறுத்துவதற்காக முதலைகள் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும் கூறினார்.
பாப்புவா நியு கினியில் உள்ள வனிமோ மறைமாவட்ட மக்களை சந்தித்த நிகழ்வைப் பற்றி எடுத்துரைக்கையில், கலை வளர்ச்சி மிக்க நாடு என்றும், காட்டுக்குள் இருந்து பணியாற்றும் மறைப்பணியாளர்கள் பணி சிறப்பானது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பத்திரிக்கையாளர்களுடனான இந்த சந்திப்பின்போது தனது 45ஆவது திருத்தூதுப்பயணம், சீனாவுடனான உரையாடல், காசாவில் நிலவும் சூழல், புனித பூமி, வெனிசுலா பிரச்சனை, அமெரிக்க தேர்தல்கள், கருக்கலைப்பு, புலம்பெயர்ந்தோரின் மறுசீரமைப்பு, போன்றவை குறித்து பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்