கடவுளோடும், பிற மனிதர்களோடும் பிணைப்பை ஏற்படுத்த உதவும் தூயஆவி

தூய ஆவியானவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார். சோகம், அழுகை, ஆறுதல், அநீதிகள், துணிவின்மை, விரக்தி, போன்ற எல்லா நிலைகளிலும் தூய ஆவியார் நம்முடன் இருக்கின்றார் – திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

தூய ஆவியாரால் ஆயர் மாமன்றமானது வழிநடத்தப்படுகின்றது என்றும், நம்முடைய சகோதரரும் ஆண்டவருமான கிறிஸ்துவில் அனைவருடனும் இணைந்து பிணைப்பை ஏற்படுத்துவதை அவர் கவனித்துக்கொள்கிறார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 2 புதன்கிழமை வத்திக்கானின் ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற ஆயர் மாமன்றத்தின் 16 வது பொதுப்பேரவையின் இரண்டாவது அமர்வில் அதன் பங்கேற்பாளர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியானவர் நம் கண்ணீரை துடைத்து ஆறுதல் அளிக்கின்றார் என்றும் எடுத்துரைத்தார்.

தூயஆவியானவர் ஓர் உறுதியான வழிகாட்டி என்பதை புரிந்து கொள்வதும்,  அவருடைய குரலை பகுத்தறிவதைக் கற்றுக்கொள்வதுமே நமது முதல் பணி என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், தூய ஆவி எல்லாவற்றிலும் எல்லாரிடமும் பேசுகிறார், இந்த ஒருங்கிணைந்த பயணச் செயல்முறையை அனுபவிக்கச் செய்கின்றார் என்றும் கூறினார்.

தூய ஆவியானவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார். சோகம், அழுகை, ஆறுதல், அநீதிகள், தீமையை எதிர்க்கும் போது நல்லதை எதிர்க்கும் பிடிவாதம், மன்னிப்பதற்கான போராட்டம், அமைதியைத் தேடும் துணிவின்மை, விரக்தி, போன்ற எல்லா நிலைகளிலும் தூய ஆவியார் நம்முடன் இருக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தாழ்ச்சி என்பது தூய ஆவியின் கொடை உமில்தா, (umilta, humus)  உமூஸ் என்ற வார்த்தைகளிலிருந்து பிறந்த தாழ்ச்சி என்னும் சொல்லின் பொருளானது, ஒன்றுமில்லாமையிலிருந்து இவ்வுலகைப் படைத்த இறைவனின் படைப்பு செயலை நினைவூட்டுகின்றது என்றும், நாம் அனைவரும் சமமானவர்கள் ஒருவர் மற்றவரை விட பெரியவர்கள் அல்ல என்பதை உணர, தாழ்ச்சியானது நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்றும் கூறினார்.

அன்பில்லாமல் தாழ்ச்சியுடையவர்களாக உங்களால் மாற முடியாது என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுக்கேற்ப  நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டும் என்று கூறிய  திருத்தந்தை அவர்கள், நமக்காக மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு இறந்து உயிர்த்தவரும் நமக்காகத் தூய ஆவியை வழங்கியவருமான இயேசுவின் வாழ்க்கையைத் தொடர்ந்து நாம் இறை இரக்கத்தின் மனிதர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2024, 14:20