திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

இதயத்துடன் தொடர்பு கொள்ளும் தகவல் தொடர்பாளர் பணி

உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக் கொண்டு, நீதியை மார்புக்கவசமாக அணிந்து நில்லுங்கள்; அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிப்பதற்கான ஆயத்தநிலையை உங்கள் காலில் மிதியடிகளாகப் போட்டுக் கொள்ளுங்கள்

மெரினா ராஜ் – வத்திக்கான்

தகவல் தொடர்பாளர் பணி என்பது ஓர் அழைப்பு, மறைப்பணி, படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத்தின் வழியாகக் கிடைக்கும் வழிமுறைகளை அறிவாற்றலுடன் பயன்படுத்துவது என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக இதயத்துடன் தொடர்பு கொள்வது என்றும் கூறினார் திருத்தந்தை  பிரான்சிஸ்.

அக்டோபர் 31 வியாழன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் திருப்பீட செய்தித்தொடர்பாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதர் பவுலின் வார்த்தைகளான, உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக் கொண்டு, நீதியை மார்புக்கவசமாக அணிந்து நில்லுங்கள்; அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிப்பதற்கான ஆயத்தநிலையை உங்கள் காலில் மிதியடிகளாகப் போட்டுக் கொள்ளுங்கள் என்ற வரிகளை மேற்கோள்காட்டி அதன்படி வாழ வலியுறுத்தினார்.

மிகச்சிறப்பான மற்றும் மிகப்பெரிய பணிக்கு அழைக்கப்பட்டிருக்கும் செய்தித் தொடர்பாளர்கள் ஒவ்வொருவரும், கருத்தியல் சித்தாந்தங்கள் என்னும் உயர்ந்த சுவர்கள் எழுப்பாமல், இணைப்பின் பாலங்களை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வேறுபாடுகளை உருவாக்கும் கலாச்சாரம் என்பது “இது என் முறையல்ல அவர்கள் செய்யட்டும்” என்று கை கழுவுகின்ற வேதனை தருகின்ற கலாச்சாரம் என்றும் கூறினார்.

திருஅவையில் நாம் ஒற்றுமையுடன் வாழ்ந்து, சமூக வாழ்வின் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும், கிறிஸ்துவில் நம்மைக் கவர்கின்ற மற்றும் ஈர்க்கின்ற இறைஅன்பை நம் வாழ்வில் எதிரொலிக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், கடவுள் நம்மை அன்பு செய்கின்றார் அழைக்கின்றார், மன்னிக்கின்றார் என்பதை உணரும் போது நாம் திருஅவையாக மாறுகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒன்றிணைந்து ஈடுபாட்டுடன் உழைக்கவும். புதிய மொழிகளைக் கற்றுக்கொள்ளவும், புதிய பாதைகளில் பயணிக்கவும், டிஜிட்டல் எனப்படும் எண்ணிம சூழலில் வாழவும்  அஞ்ச வேண்டாம் என்றும், இயேசுவின் அன்பை பிறருக்கு எடுத்துரைக்கக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை     

சமாரியப்பெண், நிக்கோதேமு, விபச்சாரத்தில் பிடிபட்ட பெண், பார்வையற்ற பர்த்திமேயு போன்றோரை அவர்களது துன்பம், கவலைகள் மற்றும் கவனிப்புடன் சந்தித்த இயேசுவைப் போல, நாமும் பிறரைச் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கிறிஸ்துவின் இயேசுவின் அன்பை சந்திப்பதன் வழியாக, உடன்பிறந்த உறவுகளை உருவாக்குவதற்கும், ஒவ்வொரு மனிதனின் மாண்பை அங்கீகரித்து, நமது பொதுவான இல்லத்தை ஒன்றாகக் கவனித்துக்கொள்வதற்கான திறனையும் நாம் பெறுகின்றோம் என்றும் கூறினார்.

இயேசுவின் திரு இருதய அன்பை இரக்கம் மற்றும் பிறரன்புச் செயல்கள் வழியாக காயம்பட்ட இந்த உலகிற்கு எடுத்துரைக்க உதவுங்கள் என்றும், போர்கள், சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், நுகர்வோர், மனித விரோத தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றுக்கு மத்தியில் தப்பிப்பிழைக்கும் உலகம், மிக முக்கியமானதும் அவசியமானதுமான இதயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க தகவல் தொடர்பு வழியாக உதவுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2024, 12:12