கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவிழிப்பு வழிபாட்டில் பங்கேற்ற திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
1962 அக்டோபர் 11 அன்று கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான நுழைவாயிலாகத் திகழ்ந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கப்பட்ட நாளையும், திருத்தந்தை புனித 23ஆம் யோவான் அவர்களின் திருவிழாவையும் முன்னிட்டு, தைஷ் குழுவினரால் வழிநடத்தப்பட்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவிழிப்பு வழிபாட்டில் பங்கேற்று தலைமையேற்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 7 மணியளவில் வத்திக்கானின் Protomartiri வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவிழிப்பு வழிபாட்டில் 16ஆவது உலக ஆயர் மாமன்றத்தின் பங்கேற்பாளர்கள் மற்றும் பிற கிறிஸ்தவ அமைப்புக்களின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த வழிபாடானது மெழுதிரி ஏந்திய பவனியுடன் வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில் இருந்து தொடங்கி, Protomartiri வளாகத்தில் முடிவடைந்தது.
அமைதியை வலியுறுத்தும் பாடல் ஒன்று குழுவாகப் பாடப்பட நான்கு சிறுமிகள் மத்தியில் ஒரு பெண் இறைவார்த்தையை ஏந்தி வர கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிப்பதற்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் Kurt Koch அவர்கள் லூமன் ஜெண்டியும் என்னும் திருஅவைக் கோட்பாடு வெளியிடப்பட்டதன் 60ஆம் ஆண்டு மற்றும் Unitatis Redintegratio என்னும் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கோட்பாடு விளக்கம் பற்றியும் எடுத்துரைத்தார்.
இறைவாக்கினர் எசாயா நூலில் உள்ள பகுதி வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருப்பாடல் 122 பாடப்பட்டது. யோவான் நற்செய்தியில் உள்ள கிறிஸ்துவில் நாம் அனைவரும் ஒன்றாக என்ற இறைவார்த்தைகள்ளைத் தொடர்ந்து சீனம், போர்த்துகீசியம், சுவாஹிலி, அரபு, மலையாளம் ஆகிய மொழிகளில் சிறிய இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டன.
சற்று நேர ஆழ்ந்த அமைதிக்குப் பின் பசிதாகமுடையவர்கள், நோயாளிகள், சிறையில் இருப்பவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் நம்பிக்கையை இழந்த அனைவருக்குமான ஆவியின் பணியில் ஒன்றிப்பைப் புதுப்பிக்க நம்பிக்கையாளர் மன்றாட்டுக்கள் எடுத்துரைக்கப்பட்டன.
Focolare இயக்கத்தின் தலைவர் Margaret Karram மற்றும் Taizé சமூகத்தின் முன்னாள் தலைவர் சகோதரர் அலோயிஸ் ஆகியோர் இந்த திருவிழிப்பு வழிபாட்டில் இணைந்தனர். இறுதியாக விண்ணகத் தந்தையை நோக்கிய செபமானது அனைவராலும் ஒன்றிணைந்து செபிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது அப்போஸ்தலிக்க ஆசீரை அனைவருக்கும் வழங்கினார். இத்துடன் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவிழிப்பு வழிபாடானது நிறைவுற்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்