திருத்தந்தை பிரான்சிஸ்  திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

புனித பூமியில் என் நாட்கள் என்ற நூலுக்கு திருத்தந்தை முன்னுரை

பல்வேறு மதங்கள் மற்றும் இனங்கள் இடையே உரையாடலை ஊக்குவிக்கவும், அமைதி கலாச்சாரத்தை வளர்க்கவும் மாணவர்களை உருவாக்கும் புனித பூமியின் 16 பள்ளிகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மோதல்கள் இடம்பெறும் இடத்தில் அமைதி மற்றும் உரையாடலின் மறைப்பணிகளை உள்ளடக்கியது, புனித பூமி திருஅவை பொறுப்பாளரின் பணி என புனித பூமி குறித்த நூல் ஒன்றிற்கான முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித பூமிக்கான திருஅவை பொறுப்பாளர் அருள்பணி Francesco Patton அவர்கள் திருப்பீடச்சார்பு தினத்தாள் லொசர்வாத்தோரே ரொமானோ என்பதன் எழுத்தாளர் Roberto Cetera அவர்களின் உதவியுடன் எழுதிய ‘ஒரு திருப்பயணியாக புனித பூமியில் என் நாட்கள்' என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதனை இறைவன் முதலில் படைத்தபோது, இவ்வுலகை அவன் கைகளில் ஒப்படைத்தார் என்பதை நாம் அறிந்துள்ளதுபோல், இயேசு வாழ்ந்த பூமியான புனித பூமியில் ஒவ்வோர் ஆண்டும் 5 இலட்சம் திருப்பயணிகள் வந்து செல்லும் புனித இடங்களை பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கும் பொறுப்பை திருஅவை தொடர்ந்து கொண்டுள்ளது என்று அம்முன்னுரையில் எழுதும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பகுதிக்குப் பொறுப்பேற்று எட்டு நாடுகளின் பிரான்சிஸ்கன் துறவிகள் செயலாற்றுவது இவ்விடத்தின் பன்னாட்டுத்தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது என மேலும் கூறியுள்ளார்.      

யெருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையின் கீழ் செயல்படும் 4 பெரிய பங்குதளங்களும் பிரான்சிஸ்கன் துறவியரால் நடத்தப்படுகின்றன என்பதை தன் முன்னுரையில் சுட்டிக்காட்டும் திருத்தந்தை, பல்வேறு மதங்கள் மற்றும் இனங்கள் இடையே உரையாடலை ஊக்குவிக்கவும், அமைதி கலாச்சாரத்தை வளர்க்கவும் மாணவர்களை உருவாக்கும் 16 பள்ளிகள் இப்பகுதியில் திருஅவையால் நடத்தப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

திறந்து மனதுடனும், ஏற்புடைமையுடனும், நளினத்துடனும் மதங்களிடையே மற்றும் கிறிஸ்தவ சபைகளுடன் பேச்சுவார்த்தைகளை இங்கு தலத்திருஅவை மேற்கொண்டுவருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த 76 ஆண்டுகளாக புனித பூமி பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரான்சிஸ்கன் துறவியர் ஆற்றிவரும் பணிகளையும், அண்மையில் காயமுற்ற 150 குழந்தைகளை இத்தாலிக்குக் கொண்டுவந்ததையும் தன் முன்னுரையில் எழுதி, புனித பூமிக்கான திருஅவையின் பொறுப்பை ஏற்று நடத்திவரும் பிரான்சிஸ்கன் துறவியரைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2024, 16:06