திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

‘அமைதியின் வார்த்தைகள்‘ என்ற நூலுக்கு திருத்தந்தையின் முன்னுரை

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட அமைதிக்கான ஒன்றிணந்த ஜெபம், அமைதி இயலக்கூடியதே என்ற நம்பிக்கையை வழங்கியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

1986ஆம் ஆண்டு இத்தாலியின் அசிசியில் இடம்பெற்ற அமைதிக்கான பல்மதங்களின் பங்கேற்பு கூட்டம் முதல் இன்றுவரை இடம்பெற்றுவரும் கத்தோலிக்க அமைதி முயற்சிகளின் உரைகளை ‘அமைதியின் வார்த்தைகள்‘ என்ற நூல் தொகுத்து வழங்குவதாக அந்நூலுக்கான முன்னுரையில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சான் எஜிதியோ என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைதி இயக்கத்தின் நிறுவனர் அந்த்ரேயா ரிக்கார்தி என்பவரால் எழுத்தப்பட்டுள்ள ‘அமைதியின் வார்த்தைகள்’ எனற நூல், 1986ஆம் ஆண்டிற்குப்பின் ஒவ்வோர் ஆண்டும் இடம்பெறும் இந்த பல்மத கூட்டங்களில் அவர் வழங்கிய உரைகளின் தொகுப்பை உள்ளடக்கியுள்ளது.

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட அமைதிக்கான பல்மத உரையாடல், ஒன்றிணைந்த இறைவேண்டல் ஆகியவை, அமைதி இயலக்கூடியதே என்ற நம்பிக்கையை நமக்கு வழங்கியுள்ளது என நூலின் முன்னுரையில் கூறும் திருத்தந்தை, 1986ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி அசிசியில் அமைதிக்கான கூட்டத்தை கூட்டிய புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் இறுதியாகக் கூறிய வார்த்தைகளான, ‘அமைதிக்கான மனவுறுதி இன்றி அமைதியைப் பெற முடியாது, அமைதி அதன் இறைவாக்கினர்களுக்காக காத்திருக்கிறது’ என்ற வார்த்தைகளை இதில் மேற்கோள்காட்டியுள்ளார்.

அமைதியின் தேவையை அதிகம் அதிகமாகக் கொண்டிருக்கும் இவ்வுலகிற்கு, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் துவக்கிவைத்த, அமைதிக்கான மதங்களிடையேயான முற்சிகளின் உணர்வு தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பது உணரப்படவேண்டும் என எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1986ஆம் ஆண்டு அசிசியில் இடம்பெற்ற கூட்டம் அதன் அமைதி உணர்வுகளால் தொடர்ந்து, அனைத்து துன்புறும் மக்களின், போரின் பிணையக் கைதிகளின், துயர்களினாலும் சுரண்டல்களினாலும் துன்புறும் மக்களின் ஜெப நம்பிக்கையாகவும், அமைதிப் பேச்சுவார்த்தைகளின் செயல்பாடாகவும் உள்ளது எனவும் ‘அமைதியின் வார்த்தைகள்' என்ற நூலின் முன்னுரையில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பல காலமாக தூரத்திலேயே இருந்த பல மதங்கள்  உலக அமைதிக்காக ஒன்றிணைந்து வர புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் முயற்சிகள் உதவியுள்ளதையும், பேச்சுவார்த்தைகளின் பாதையில் Al Azhar தலைமைக்குரு Ahmad Al-Tayyeb அவர்களுடன் 2019ல் தான் உடன்பிறந்த உணர்வு நிலை ஏட்டில் கையெழுத்திட்டது குறித்தும், போரின் அச்சுறுத்தல்கள் நம்மை முடக்கிவிடக்கூடாது மாறாக அமைதி தொடர்ந்து எடுத்து நடத்தப்படவேண்டும் என்பதையும், அந்நூலுக்கான முகவுரையில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2024, 13:35