ஏழைகளின் அழுகுரலை எப்போதும் கேட்கின்ற கடவுள்

வாழ்வது என்பது எப்போதும் தன்னை இயக்கத்தில் அமைத்துக்கொள்ளுதல், புறப்படுதல், கனவு காணுதல், திட்டமிடுதல், எதிர்காலத்திற்காகத் தன் இதயத்தை திறந்திருத்தல் – திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கடவுள் எப்போதும் ஏழைகளின் அழுகுரலைக் கேட்கின்றார் என்றும், எந்த ஒரு அழுகுரலும் துன்பத்தின் குரலும் அவர் முன்னால் கேட்கப்படாமல் இருந்ததில்லை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற 16 ஆவது உலக ஆயர்கள் மாமன்றத்தின் நிறைவு திருப்பலியில் வழங்கிய மறையுரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆயர் மாமன்றத்தில் பகிர்ந்து கொள்ள முடிந்த ஏராளமான கருத்துக்களுக்காக இதயத்தில் நன்றியினையும் மகிழ்வையும் சுமந்திருக்கும் நாம், பார்வையற்ற பர்த்திமேயுவின் வாழ்வைக் குறித்து சிந்திப்போம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தெருவோரம் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பர்த்திமேயு இயேசுவால் அழைக்கப்பட்டதும் அவரைப் பின்தொடர்கின்றார் என்றும் கூறினார்.

அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பர்த்திமேயு

தெருவோரமாக அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பர்த்திமேயுவின் செயலானது, எரிக்கோ நகருக்கு பாஸ்கா விழாவிற்கு சென்று கொண்டிருப்பவர்கள் ஏதாவது உதவி செய்வார்கள் என்ற மனநிலை, தனது சொந்த துன்பத்தால் சூழப்பட்டு இனிமேல் எதுவும் செய்ய இயலாது என்ற எண்ணம் உடையவர் அவர் என்பதைக் காட்டுகின்றது என எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களால் எதுவும் செய்யாமல் இருக்க முடியாது என்றும் கூறினார்.

வாழ்வது என்பது எப்போதும் தன்னை இயக்கத்தில் அமைத்துக்கொள்ளுதல், புறப்படுதல், கனவு காணுதல், திட்டமிடுதல், எதிர்காலத்திற்காகத் தன் இதயத்தை திறந்திருத்தல் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இயக்கமற்ற, நம்பிக்கையற்ற சூழலில் வாழ்வின் விளிம்பில் இருக்கின்ற உள்மனப் பார்வையற்றவர்கள் போன்று நாம் இருப்பதை பர்த்திமேயுவின் செயல் வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார்.

இறைவனின் உடனிருப்பை அடையாளம் காண முடியாமல், எதார்த்தத்தின் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இல்லாமல் பல நேரங்களில் நாம் பார்வையற்றவர்களாக இருக்கின்றோம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், பர்த்திமேயு போன்று நம்மிடம் கூக்குரல் எழுப்புபவர்களுக்கு என்ன பதில் கூறுவது என்று அறியாமல் நாம் இருக்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.

இயக்கத்தில் இல்லாமல் இருக்கும் திருஅவையானது வாழ்விலிருந்து விலகி எதார்த்தத்தின் விளிம்புக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றது என்றும், இந்த நிலை நீடித்தால் நமது மேய்ப்புப்பணியில் உள்ள அவசரங்களையும் தேவைகளையும் கண்டுகொள்ளமுடியாதவர்களாக நாம் மாறிவிடுகின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.

இயேசுவைப் பின்தொடர்ந்த பர்த்திமேயு

பர்த்திமேயுவைக் கடந்து சென்ற இயேசு ஒவ்வொரு நாளும் நம்மையும் கடந்து செல்கிறார், நமது பார்வையற்றத்தனத்தை நீக்க நம்மைக் கடந்து செல்கின்றார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இறைவன் நம்மைக் கடந்து செல்வதை அறியும் திறன் நம்மிடம் இருக்கின்றதா? அவரை உரக்கக்குரல் எழுப்பி அழைக்கும் திறன் நம்மிடம் இருக்கின்றதா என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைப்புவிடுத்தார்.

மீட்பின் தூண்டலைப் பெற்று, நற்செய்தியின் ஆற்றலால் விழித்தெழுந்து அவரை நோக்கிக் கூக்குரலிடும் சீடர்கள் போன்று நாம் மாற வேண்டும் என்றும், மாறாக ஏழைகள், விளிம்புநிலை மக்களின் கூக்குரலைக் கேட்காது விலகி ஒதுங்கிச் சென்றவர்கள் போல வாழக்கூடாது என்றும் கூறினார் திருத்தந்தை.

ஏழைகளுக்காக சேவையாற்றி அதனால் கறைபடிந்த ஒரு திருஅவை நமக்கு தேவை என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இயேசுவால் குணம்பெற்று அவரைப் பின் தொடர்ந்த பர்த்திமேயு போன்ற திருஅவை நமக்கு தேவை என்றும், துணிவுடன் எழுந்து நடக்கின்ற, மகிழ்வுடன் அவரைப் பின்தொடர்கின்ற திருஅவையாக நாம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இயேசு நம்மைக் கடந்து செல்லும்போது அவரது அழைப்பிற்கு செவிசாய்க்கின்றவர்களாக நாம் இருக்கவேண்டும் என்றும், பார்வையற்றத்தனத்திலிருந்து மாறி, அவரைப் பின்பற்றுகின்றவர்களாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இயங்கின்ற திருஅவையாக மனித குலத்தின் அழுகைக்கு செவிசாய்க்கின்ற திருஅவையாக நாம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குருட்டு திருஅவையாக அல்ல, மாறாக கிறிஸ்துவால் ஞானம் பெற்றதாக, மற்றவர்களுக்கு நற்செய்தியின் ஒளியைக் கொண்டு வருகின்றதாக, ஒரு மறைப்பணி திருஅவையாக, உலகின் சாலைகளில் இறைவனுடன் நடந்து செல்லும் திருஅவையாக நாம் வாழவேண்டும் என்று வலியுறுத்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 October 2024, 15:57