திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

அறிவு மற்றும் சிந்தனையின் புதையல் இலத்தீன் மொழி

இயற்கையின் மீதான பார்வை, கடவுளின் பரிசான, பொதுவான இல்லத்தின் மீதான நமது பொறுப்பை பிரதிபலிக்க அழைக்கிறது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இலத்தீன் மொழி என்பது அறிவு மற்றும் சிந்தனையின் புதையல், நமது உலகத்தை உருவாக்கிய சிறந்த நூல்களை அணுகுவதற்கான திறவுகோல் என்றும், மேற்கத்திய நாகரிகத்தின் வேர்களையும், பல வழிகளில் நமது அடையாளத்தையும் பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 23 புதன்கிழமை இலத்தீன் அமெரிக்க திருப்பீடப் பல்கலைக் கழகத்தாரால் நடத்தப்படும் திருப்பீட அகாடமி 2023 விருது நிகழ்விற்கு அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியினை கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான திருப்பீடத்துறையின் தலைவரான கர்தினால் José Tolentino de Mendonça அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

தத்துவம், விஞ்ஞானம், கலை மற்றும் அரசியலை உள்ளடக்கிய ஒரு மொழியான இலத்தீன் மொழி, அதன் உள்ளார்ந்த மதிப்பை, பிரதிபலிப்பு மற்றும் உரையாடலுக்கான ஒரு கருவியாக நிரூபிக்கிறது என்றும், துண்டு துண்டாக்கப்பட்ட உலகில் அம்மொழியின் தேவை எப்போதும் நமக்கு அவசியம் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

சுற்றுச்சூழலின் பலவீனம் பற்றி நாம் அதிகமாக அறிந்திருக்கும் நேரத்தில், இயற்கை உலகத்தைப் பற்றிய பிரதிபலிப்பு மிகமுக்கியமானது என்றும் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், இயற்கையின் விதிகளைப் புரிந்துகொள்வதற்கும், வாழ்க்கையின் மறைபொருளை ஆராய்வதற்கும், சூழலியல் சவால்களை எதிர்கொள்வதற்கும் அறிவியல் நமக்கு பல கருவிகளை வழங்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நெறிமுறை, கலாச்சார மற்றும் ஆன்மிக விளக்கத்தின் வழியாக மட்டுமே, நம்மைச் சுற்றியுள்ளதும், நாமும் அதன் ஒரு பகுதியாக இருப்பதுமான பிரபஞ்சத்தின் ஆழமான அர்த்தத்தை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், இயற்கையின் மீதான பார்வை, கடவுளின் பரிசான, பொதுவான இல்லத்தின் மீதான நமது பொறுப்பை பிரதிபலிக்க அழைக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

விருது பெற்றவர்களின் கடினமான மற்றும் முறையான ஆராய்ச்சியானது வெறும் கல்விப் பங்களிப்பாக மட்டும் இல்லாமல், நம் ஒவ்வொருவருக்கும் விடுக்கும் ஓர் உண்மையான அழைப்பு என்றும், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியின் கலாச்சாரத்திற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த அழைக்கிறது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

திருஅவைக்கு மிகவும் பிடித்தமான சிந்தனை மற்றும் படைப்பாற்றலின் வளமானது, இதயங்களையும் மனதையும் உருவாக்குகின்றது, பாலங்களைக் கட்டுகின்றது, வெறுப்பின் சுவர்களை உடைக்கும் திறன் கொண்டது என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், மனிதகுலத்தின் அறிவுசார் பாரம்பரியம், மக்களிடையே நல்லிணக்கத்தின் கருவிகளாக மாறும், பரஸ்பர மரியாதை மற்றும் மனித கண்ணியத்தை மேம்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2024, 10:14