திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

மன்னிக்கப்பட்ட மீட்கப்பட்ட மக்களை முதன்மையாக வரவேற்கும் திருஅவை

செவிசாய்த்தல் என்பது வெறுமனே வார்த்தைகளுக்கு செவிமடுப்பது அல்ல மாறாக உள்ளார்ந்த விதமாக அவர்களை கடவுளின் கொடையாக இனிமையுடன் வரவேற்பது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

எல்லாரையும் மன்னியுங்கள், எப்போதும் மன்னியுங்கள், நாம் மன்னிப்பதற்காகவே  இருக்கின்றோம் என்றும், திருஅவை மீட்கப்பட்ட மன்னிக்கப்பட்ட மக்களையும், கடவுளின் ஒளி, மென்மை மற்றும் ஆற்றலில் நம்பிக்கையும் அன்பும் கொண்ட மக்களை முதன்மையாக வரவேற்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 24 வியாழனன்று வத்திக்கானில் Apostolic Penitentiary எனப்படும் திருஅவையின் மனசாட்சி திருப்பீடத்துறையினரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய பேதுரு பெருங்கோவிலில் உள்ள பாவமன்னிப்பு திருவருளடையாளம்  வழங்கும் பொறுப்பு Frati Minori சபையினருக்கு வழங்கப்பட்டதன் 250 ஆவது ஆண்டு விழா வாழ்த்துக்களையும் கூறி மகிழ்ந்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலுக்கு எண்ணற்ற மக்கள் ஒவ்வொரு நாளும் வருகின்றனர் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தங்களது பாவத்திற்காக மனம் வருந்தும் மக்களுக்கு பணியாற்றுகின்ற மனசாட்சி திருப்பீடத்துறையின் பணி மிக முக்கியமானது என்றும் எடுத்துரைத்தார்.

திருத்தூதர் பேதுருவின் கல்லறையில் செபித்து, தங்களது நம்பிக்கையையும் திருஅவையுடனான தங்களது ஒன்றிப்பையும் சிலர் வெளிப்படுத்துகின்றார்கள் என்றும், நகரின் அழகு, வரலாறு கலையினால் ஈர்க்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் போல வருகின்றனர் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான தேடல் உள்ளது என்றும் கூறினார்.

தாழ்ச்சி, செவிசாய்த்தல் மற்றும் இரக்கம் என்னும் மூன்று பண்புகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், கடவுள், அழகு மற்றும் நிலையான நன்மை, அதன் ஆசை இந்த உலகில் வாழும் ஆணும் பெண்ணும் ஒவ்வொரு இதயத்திலும் வாழ்கிறது மற்றும் துடிக்கிறது என்று கூறி தூய பேதுருவின் வாழ்க்கை சான்றுகளை மேற்கோள்காட்டினார்.

தாழ்ச்சி

தனது பாவத்திற்காக மனம் வருந்திய பிறகே மறைசாட்சியாக தனது வாழ்வை திருத்தூதர் பேதுரு அளித்தார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, அது கடவுளுக்குகே உரியது என்ற வார்த்தைகளின் வழியாக நமக்கு எடுத்துரைக்கின்றார் என்றும் கூறினார்.

சிறந்த பாவமன்னிப்பு வழங்குபவர்களாகத் திகழ நாம் நல்ல பாவமன்னிப்பைப் நாடுபவர்களாக இருக்கவேண்டும் என்றும், அதற்காக தாழ்ச்சியுள்ள நமது செபத்தினால் நறுமணத்தை எழுப்பி கடவுளின் அருளை வேண்டுவோம் என்றும் கூறினார்.

செவிசாய்த்தல்

இளையோர்க்கும் ஏழை எளியவர்களுக்கும் செவிசாய்த்தல் என்பதில் தனது மந்தையாகிய மக்கள் நடுவில் நடந்து அவர்களின் குரலுக்கு செவிசாய்த்ததன் வாயிலாக  தூய ஆவிக்கு செவிமடுத்த திருத்தூதர் பேதுரு நமக்கு முன்மாதிரிகையாக இருக்கின்றார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், செவிசாய்த்தல் என்பது வெறுமனே வார்த்தைகளுக்கு செவிமடுப்பது அல்ல மாறாக உள்ளார்ந்த விதமாக அவர்களை கடவுளின் கொடையாக இனிமையுடன் வரவேற்பது என்றும் கூறினார்.

பாவமன்னிப்பு திருவருளடையாளத்தின் வழியாக தாழ்ச்சியும் எளிமையும் கொண்ட கிறிஸ்துவிற்கு நாம் செவிசாய்க்கின்றோம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், பாவமன்னிப்பு பெற விரும்புவர்களின் உணர்வுகளை கடவுள் புரிந்து கொண்டுள்ளார் எனவே நாமும் அவர்களைப் புரிந்து கொள்ளவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

இரக்கம்

கடவுளின் மன்னிப்பை வழங்குபவர்களாக, "இரக்கமுள்ள மனிதர்களாக, தனித்துவமானவர்களாக, தாராள மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், உடனிருப்பு, இரக்கம் நெருக்கம் எனும் கடவுளின் பண்பு கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எப்போதும் எல்லா வேளையிலும் எல்லாரையும் மன்னியுங்கள் ஏனெனில் கடவுள் நம்மை மன்னிக்கி ஒருபோதும் மறுப்பதில்லை என்றும் கடவுள் நம்மை புரிந்துகொள்வது போல நீங்களும் ஒருவர் மற்றவரைப் புரிந்து கொள்ளுங்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2024, 13:06