இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்” என அடிக்கடி கூறுங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மீட்புத்திட்டத்தில் நம் ஒத்துழைப்பிற்கு எப்போதும் அழைப்புவிடுக்கும் இறைவனுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்ற கேள்வி எழும்போது, “யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?” என வினவும் இறைவனின் கேள்வியும், “இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்”(எசா 6:8) என்ற இறைவாக்கினர் எசாயா வார்த்தைகளும் நினைவுக்கு வருகின்றன என Passionists துறவுசபை அங்கத்தினர்களிடம் தெரிவித்தார் திருத்தந்தை.
Passionists அதாவது திருப்பாடுகள் சபையின் பொதுப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டோரை அக்டோபர் 25, வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளை தியானித்து செபிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
“இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்” என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் எடுத்துரைப்பது, நம் மறைப்பணி ஆற்றல்களை புதுப்பிக்க உதவும், அதிலும் இந்த யூபிலி ஆண்டுக் கொண்டாட்டங்களை நெருங்கிவரும் வேளையில் என திருப்பாடுகள் சபையின் அங்கத்தினர்களிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்றைய உலகின் மக்களுக்கு நற்செய்தியின் ஒளியின் தேவை உள்ளது என்ற திருத்தந்தை, மறைப்பணி நடவடிக்கைகளின் பழைய பாதைகளில் நடந்துவரும் அதேவேளையில், புதிய பாதைகளைக் கண்டுகொண்டு, மக்களிடையேயான நட்புணர்வின் புதிய வழிகளை கைக்கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
நம் விசுவாசத்தின் கனிகளையும் மகிழ்வையும் கொணரும் நற்செய்தியை தெருக்களிலும் உலகின் மூலை முடுக்குகளிலும் பிறரோடு பகிரவேண்டிய நம் கடமைகளையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித சிலுவையின் பவுலின் தனிவரத்தைக் கொண்டுள்ள திருப்பாடுகள் சபை, தன் வாழ்வு நடவடிக்கைகள் வழியாக நற்செய்தியை அறிவித்துவருகின்றது என்ற பாராட்டையும் அச்சபையின் அங்கத்தினர்களிடம் தெரிவித்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்