மத்திய கிழக்கு அமைதி பரிந்துரைகள் திருத்தந்தையிடம் சமர்ப்பிப்பு
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார் என்று இஸ்ரேல் நாட்டின் மேனாள் பிரதமர் Ehud Olmert கூறினார்.
இஸ்ரயேலின் மேனாள் பிரதமர் Ehud Olmert, பாலஸ்தீனிய அரசின் மேனாள் வெளியுறவுத்துறை அமைச்சர் Nasser Al-Kidwa ஆகிய இருவரும் அடங்கிய அமைதி குழுவை அக்டோபர் 17, வியாழனன்று சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையுடனான சந்திப்பிற்குப் பிறகு வத்திக்கான் செய்தியாளர்களை சந்தித்த இரு நாட்டு தலைவர்களும் காசாவுக்கான அமைதி முன்மொழிவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் வழங்கியதாகவும், நாடுகளிடையே அமைதி நிலவ திருத்தந்தை மிகுந்த அக்கறை காட்டி வருவதாகவும், மோதலின் வளர்ச்சியையும் அவர் தினமும் கவனித்து வருவதாகவும், ஒவ்வொரு நாளும் திருத்தந்தை காசா கிறிஸ்தவர்களுடன் தொடர்பு கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
காசாவில் போர் நிறுத்தப்படவேண்டும், பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், காசாவிலிருந்து இஸ்ரேல் முற்றிலுமாக வெளியேற வேண்டும், இஸ்ரேலும் பாலஸ்தீனியர்களும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளில் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று தாங்கள் கொண்டுவர விரும்பிய அமைதிக்கான செய்தியின் மீது திருத்தந்தை மிகுந்த கவனம் செலுத்தினார் என்று விவரித்தார் இஸ்ரயேலின் முன்னாள் பிரதமர் Ehud Olmert.
இஸ்ரேல் நாட்டின் சிறைகளில் உள்ள பாலஸ்தீனியக் கைதிகளை விடுவிப்பது, இரண்டு நாடுகளும் தன்னாட்சி அரசுகளாக அமைதியுடன் செயல்படுவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்குவது போன்ற, அமைதிக்கான முன்மொழிவுகளை திருத்தந்தையிடம் வழங்கியதாக எடுத்துரைத்தார் பாலஸ்தீனிய அரசின் மேனாள் வெளியுறவுத்துறை அமைச்சர் Nasser Al-Kidwa.
அமைதிக்கான முன்மொழிவுடனும், போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய அவசரத் தேவையுடனும் இக்குழு உடன்படுவதாக கூறினார் பாலஸ்தீனிய அரசின் மேனாள் வெளியுறவுத்துறை அமைச்சர்.
அமைதியை ஏற்படுத்த இருவரும் இணைந்து வழங்கிய முன்மொழிவையும், திட்டங்களையும், செயல்பாடுகளையும் திருத்தந்தை ஆசிர்வதிப்பார் என்றும், உறுதியாக மாற்றம் ஒரு நாள் ஏற்படும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் பாலஸ்தீனிய தலைவர் Nasser Al-Kidwa.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்