உலக அமைதிக்குத் திருத்தந்தையின் செப விண்ணப்பங்கள்

போரினால் துன்புறும், உக்ரைன், மியான்மார், சூடான் மக்கள் அனைவரையும், அனைத்து வகையான வன்முறை மற்றும் துயரங்களாலும் பாதிக்கப்பட்ட எல்லா மக்களையும் அன்னை மரியிடம் ஒப்படைத்து செபிப்போம்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

போர் என்பது ஒரு மாயை, அது ஒரு தோல்வி, அது ஒருபோதும் அமைதியைத் தராது என்றும், அனைவருக்கும் தோல்வியைத் தரும் போர் ஒருபோதும் பாதுகாப்பைக் கொண்டு வராது என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 13 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களை வெல்ல முடியாது என்று நினைப்பவர்களுக்கு போர் ஒரு தோல்வி, எனவே அதனை தயவுகூர்ந்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மத்திய கிழக்கில் நடப்பதை தான் கவலையுடன் கவனித்து வருவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அனைத்து முனைகளிலும் உடனடி போர்நிறுத்தத்திற்கு மீண்டும் அழைப்பு விடுப்பதாகவும், அமைதியை அடைவதற்கான அரசு நடவடிக்கைகள் மற்றும் உரையாடல் பாதைகள் தொடர வலியுறுத்துவதாகவும் எடுத்துரைத்தார்.

போரினால் துன்புறும் பாலஸ்தீன், இஸ்ரயேல் மற்றும் லெபனோனில் உள்ள அனைத்து மக்களுக்கும் தான் ஆதரவாக நிற்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைகளுக்கு மரியாதை அளிக்க அழைப்பு விடுப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், பிணையக் கைதிகள் அனைவருக்காகவும் தான் செபிப்பதாகவும் கூறினார்.

பிணையக்கைதிகள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று தான் நம்புவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், வெறுப்பு மற்றும் பழிவாங்கல்களால் உருவாக்கப்பட்ட இந்த பெரிய தேவையற்ற துன்பம் விரைவில் முடிவுக்கு வரும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.

போரின் துயரத்தாலும் குளிரின் கடுமையாலும் பாதிக்கப்படும் உக்ரைன் மக்களை நாம் மறந்துவிடக்கூடாது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள் பொதுமக்களை பாதிப்பிற்குள்ளாக்கும் வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என்றும், அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்றும் கூறினார்.

ஹெய்ட்டியில் நிலவும் மக்களுக்கு எதிரான வன்முறைச்சூழலினால் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பைத் தேடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அனைத்து வகையான வன்முறைகளும் நிறுத்தப்பட்டு, பன்னாட்டு சமூகத்தின் அர்ப்பணிப்புடன், நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக தொடர்ந்து பணியாற்ற அழைப்புவிடுத்தார்.

மக்களின் மாண்பையும் உரிமைகளையும் எப்போதும் பாதுகாத்து வாழ செபிக்கும்படி அனைவரையும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார்.

அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை துன்புறும் தலத்திருஅவைக்கு உதவும் அறக்கட்டளையின் முயற்சியால் 10 இலட்சம் குழந்தைகள் உலக அமைதிக்காக செபமாலை செபிக்க இருக்கின்றார்கள் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இம்முயற்சியில் கலந்துகொள்ளும் அனைத்து சிறுவர் சிறுமிகளை வாழ்த்தி நன்றி கூறுவதாகவும் எடுத்துரைத்தார்.

அக்டோபர் 13 பாத்திமா அன்னை கடைசியாக காட்சி கொடுத்த நாளை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், போரினால் துன்புறும், உக்ரைன், மியான்மார், சூடான் மக்கள் அனைவரையும், அனைத்து வகையான வன்முறை மற்றும் துயரங்களாலும் பாதிக்கப்பட்ட எல்லா மக்களையும் அன்னை மரியிடம் ஒப்படைத்து செபிக்க வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 October 2024, 14:46