அமைதி மற்றும் பாதுகாப்புடன் வாழும் உரிமை பெற்றவர்கள் மக்கள்

உரையாடல் மற்றும் அமைதியால் மக்களின் வாழ்விற்கு உறுதி அளிக்கப்படவேண்டும். மாறாக வெறுப்பு மற்றும் போரால் அல்ல - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஒவ்வொரு நாடும் அதன் மக்களும் அமைதி மற்றும் பாதுகாப்புடன் வாழும் உரிமை பெற்றவர்கள் மாறாக வன்முறை மற்றும் மோதல்களால் தாக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்றும், வெறுப்பு மற்றும் போரால் அல்ல மாறாக, உரையாடல் மற்றும் அமைதியால் அவர்களது வாழ்விற்கு உறுதி அளிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை  பிரான்சிஸ்.

அக்டோபர் 6 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையைத் தொடர்ந்து வழங்கிய செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை அவர்கள், பாலஸ்தீனம், மத்தியதரைக்கடல் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிக்கக் கேட்டுக்கொண்டார்.

அக்டோபர் 7 திங்கள் கிழமையுடன் இஸ்ரயேல் மக்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவுறுகின்ற நிலையில் அம்மக்களுடன் தனது ஆன்மிக நெருக்கத்தைப் புதுப்பித்துக் கொள்வதாகவும், காசாவில் பிணையக்கைதிகளாக இருப்பவர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

துன்புறும் மக்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகள் அனைத்தும் கிடைக்கப்பட வேண்டும் என்றும், லெபனோன் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள மக்கள், போரினால் தங்களது சொந்த நிலத்தை விட்டு புலம்பெயரக் கட்டாயப்படுத்தப்படுகின்ற மக்கள் அனைவருக்காகவும் செபிக்க கேட்டுக்கொண்டார்.

அண்மையில் ஈரான் இஸ்ரயேல் மீது நடத்திய தாக்குதலை நினைவுகூர்ந்து அப்பாவி மக்களை துன்புறுத்தும் இத்தகைய கொடிய செயல்களை மீண்டும் செய்ய வேண்டாம் என்று பன்னாட்டு சமூகத்திற்கு வேண்டுகோள்விடுத்த திருத்தந்தை அவர்கள், ஒவ்வொரு நாடும் அதன் மக்களும் அமைதி மற்றும் பாதுகாப்புடன் வாழும் உரிமை பெற்றவர்கள், மாறாக வன்முறை மற்றும் மோதல்களால் தாக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்றும் எடுத்துரைத்தார்.

உரையாடல் மற்றும் அமைதியால் அவர்களது வாழ்விற்கு உறுதி அளிக்கப்படவேண்டும் என்றும், மாறாக வெறுப்பு மற்றும் போரால் அல்ல என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், முந்தைய நிலைமையை விட இப்போது செபத்தின் தேவை அதிகமாக உள்ளது என்றும் கூறினார்.

மாலையில் உரோம் தூய மேரி மேஜர் பெருங்கோவில் சென்று உலக அமைதிக்காக செபிக்க இருப்பதாகக் கூறிய திருத்தந்தை அவர்கள், அக்டோடபர் 7 திங்கள்கிழமை உலக அமைதிக்கான செப நாள் சிறப்பிக்கப்பட இருப்பதை எடுத்துரைத்து போர் மற்றும் எல்லா கொடிய தீய சக்திகளுக்கு எதிராக ஆற்றலுடன் ஒன்றிணைவோம் என்றும் எடுத்துரைத்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா மக்களுக்கு தனது ஆழ்ந்த ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்திய திருத்தந்தை அவர்கள், வெள்ளத்தால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும்  இறைவனின் ஆறுதலையும் இரக்கத்தையும் பெற தொடர்ந்து செபிக்கவும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 October 2024, 14:54