அமைதிக்கான அசிசியின் முதல் பல்மத செபக்கூட்டம் அமைதிக்கான அசிசியின் முதல் பல்மத செபக்கூட்டம் 

படைப்பை பராமரிக்க புனித பிரான்சிஸின் வழிகாட்டுதலுக்கு செபிப்போம்

கடவுளின் முடிவற்ற அழகையும் நன்மைத்தனத்தையும் நமக்கு கணநேர காட்சியாகத் தரும் உன்னத நூலாக படைப்பை பார்க்க வேண்டும் என புனித பிரான்சிஸ் அழைக்கிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் படைப்பின் காலம், அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களின் திருவிழாவான இவ்வெள்ளிக்கிழமையன்று நிறைவுறுவதை முன்னிட்டு அப்புனிதரின் வழிகாட்டுதலுக்காகச் செபிப்போம் என டுவிட்டர் குறுஞ்செய்தி வழி அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் தன் முடிவற்ற அழகையும் நன்மைத்தனத்தையும் நமக்கு ஒரு கணநேர காட்சியாகத் தரும் மிக உன்னத நூலாக படைப்பை பார்க்க வேண்டும் என புனித பிரான்சிஸ் நம்மை அழைக்கிறார் என குறுஞ்செய்தியில் மேலும் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், படைப்பை பராமரிக்கும் வழிகாட்டுதலுக்காக அசிசியின் பிரான்சிஸ் அவர்களின் பரிந்துரையை வேண்டுவோம் என அதில் விண்ணப்பித்துள்ளார்.

‘எதிர்நோக்குடன் படைப்போடு இணைந்து செயலாற்றுங்கள்’ என்ற விருதுவாக்குடன் புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலின் வார்த்தைகளால் (உரோ 8:19-25) தூண்டப்பட்டதாக இவ்வாண்டின் படைப்பின் காலம், ஏனைய ஆண்டுகளைப்போல் படைப்பின் திருவிழாவான செப்டம்பர் முதல் தேதியன்று துவக்கப்பட்டு, அசிசியின் புனித பிரான்சிஸ் திருவிழாவன்று நிறைவுக்கு வந்தது.

கிறிஸ்தவ சபைகள் சிறப்பிக்கும் இந்த படைப்பின் காலத்தில் அவை ஒன்றிணந்து படைப்பின் அழுகுரலுக்கு செவிமடுப்பதாகவும், படைப்பின் மீதான அக்கறையை வெளிப்படுத்துவதாகவும் இந்த நான்கு நாட்கள் கிறிஸ்தவ ஒன்றிப்பு நாட்களாக சிறப்பிக்கப்படுகின்றன.    

இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது (உரோ 8:22) என்ற புனித பவுலின் வார்த்தைகளை ஆழமாகப் புரிந்துகொண்ட புனித பிரான்சிஸ் அசிசி அவர்கள், அன்னை பூமியை சகோதரியாகவும் நம் தாயாகவும் உருவகித்து ‘படைப்புகளின் கவிதை’ என்ற படைப்பை உருவாக்கியது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2024, 15:56