பாவப் பரிகார திருவிழிப்பு வழிபாட்டின்போது பாவப் பரிகார திருவிழிப்பு வழிபாட்டின்போது  (ANSA)

திருஅவையின் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்பை வேண்டல்

நமது தவறுகளை ஒப்புக்கொண்டு, நமது பாவங்களால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த வராவிட்டால், நாம் மறைப்பணியில் நம்பகத்தன்மை உடையவர்களாக இருக்க முடியாது

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

ஆயர் மாமன்றத்தின் 16 வது பொதுப்பேரவையின் இரண்டாவது அமர்வை தொடக்கி வைப்பதற்கு முன்னதாக, உரிமை மீறல், போர், இரக்கமின்மை ஆகியற்றால் காயமடைந்தவர்களின் சாட்சியத்துடன், பரிகார  திருவிழிப்பு வழிபாட்டில் இறைவனிடமிருந்தும், நமது பாவங்களால் காயமடைந்தவர்களிடமிருந்தும் மன்னிப்பை வேண்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமைதிக்கு எதிராகவும், சுற்றுச்சூழலுக்கு எதிராகவும், பெண்களின் கண்ணியத்திற்கு எதிராகவும், ஏழைகளுக்கு எதிராகவும் புரிந்த பாவங்களுக்காகவும், கோட்பாடுகளை பிறர் மீது எறியும் கற்களாக பயன்படுத்தியமைக்காகவும், ஒருமைப்பாட்டிற்கு எதிராக செய்த பாவங்களுக்காகவும், வழிபாட்டின் போது, திருஅவையில் உள்ள அனைவரின் சார்பாகவும் மன்னிப்பு வேண்டினார் திருத்தந்தை.

பாவ அறிக்கையைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் விசுவாசம்  எப்போதும் உறவுமுறை சார்ந்தது என்றும், காயப்பட்ட உறவுகளைக் குணப்படுத்துவதன் வழியாகவே  நாம் ஒருங்கிணைந்த  திருஅவையாக மாறுகிறோம் என்றும் வலியுறுத்தினார் .

மேலும் நமது தவறுகளை ஒப்புக்கொண்டு, நமது பாவங்களால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த  நாம்  தலைகுனிந்து நிற்காவிட்டால், நாம் எப்படி மறைப்பணியில்  நம்பகத்தன்மை உடையவர்களாக இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார் திருத்தந்தை.

கர்வம் மிக்க  பரிசேயர் மற்றும் மனந்திரும்பிய ஆயக்காரர் பற்றிய இயேசுவின் உவமையை  நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எத்தனை முறை நாம் நமது சொற்களால், நமது தீர்ப்புகளால், நமது பட்டங்களால், நமக்கு மட்டுமே தகுதி இருக்கிறது என்ற நமது நம்பிக்கையால் எல்லா இடத்தையும் நாமே எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று கேள்வி எழுப்பி, இத்தகைய நிலைகளுக்கு பதிலாக, இன்று நாம் அனைவரும் ஆயக்காரனைப்போல்,  நம் கண்கள் தாழ்த்தப்பட்டு, நமது பாவங்களுக்காக வெட்கப்பட்டு நிற்கிறோம் என்றார்.

ஆயக்காரனைப் போலவே நாமும் ஆணவம், வெளிவேடத்தனம், தற்பெருமை  ஆகியவற்றால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தைத் துடைத்தெறிந்து நிற்கிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த பரிகார வழிபாடு, நமது தவறுகளாலும், பாவங்களாலும் சிதைந்து போன திருஅவையின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும், நமது பாவங்களால் தொடர்ந்து காயமடைந்து கொண்டிருப்பவர்களை குணப்படுத்தவும் ஒரு வாய்ப்பாகும் என்றும் கூறினார் திருத்தந்தை.  

திருப்பலியின் முடிவில் அங்கிருந்த அனைவரையும் அமைதியைப் பகிர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, நற்செய்தியின் ஒரு பிரதியை இளையோர் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்து, எதிர்காலத் தலைமுறையினருக்கு நற்செய்தியை அறிவிப்பதற்குமான   ஆணையையும் அளித்து இறையரசின்  நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பதே சிறந்த பணி என்றும் கூறினார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2024, 13:54