அன்பை வெளிப்படுத்தும் கல்விச் செயல்முறைகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
கல்விச் செயல்முறைகள் வழியாக நமக்கு அருகில் இருப்பவர்கள், நம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் மீது நாம் அன்பை வெளிப்படுத்துகிறோம் என்றும், கல்விமுறை, நோக்கங்கள் அன்பின் மீது நிறுவப்பட வேண்டியது அவசியம், எப்போதும் அன்புடன் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 31 வியாழனன்று வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் கத்தோலிக்க கல்வி நடவடிக்கைகளுக்கான இயக்கத்தின் 11 ஆவது தேசிய மாநாட்டின் உறுப்பினர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித வாழ்க்கையின் மாண்பு நிறைவடைதல் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற இடத்தை கண்டடைவதற்குமான ஒரு தொடர்புடைய சூழலைக் கண்டறியும் இடமே கல்வி என்றும் கூறினார்.
1990 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சபையில் இருந்து, கத்தோலிக்க ஆசிரியர் இயக்கத்தின் பாரம்பரியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து மிகுந்த படைப்பாற்றலுடன், காலத்தின் அறிகுறிகளைக் கவனத்தில் கொண்டு, நற்செய்தியின் வழியாக தங்களை எப்பொழுதும் ஒளிரச் செய்துகொண்டிருக்கும் கத்தோலிக்க கல்வி நடவடிக்கைகளுக்கான இயக்கத்தினரின் பணியினைப் பாராட்டினார் திருத்தந்தை.
கிறிஸ்தவக் கல்வியானது மானுடவியல் மற்றும் கலாச்சார மாற்றங்களால் குறிக்கப்படாத நிலப்பரப்பைக் கடந்து செல்கிறது என்றும், கடவுளுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் அதற்கான பதில்களை நாம் தேடுகின்றோம் என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள், இதன்வழியாக பல குடும்பங்கள், பள்ளிகள், திருஅவைச் சமூகங்கள், சங்கங்கள் கல்வியியல் ஆகியவை நமக்குக் கற்பிக்கும் நேர்மறையான அனுபவங்களை நாம் சேகரிக்கின்றோம் என்றும் கூறினார்.
சிக்கலான தளங்களில் மனித உறவுகள் பாதிப்படையாமல் இருக்கவும், குழந்தைகள், இளையோர், பெரியவர்களின் நலனுக்காக உழைக்கவும் ஒவ்வொருவரும் தங்களது இதயத்தை அகலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், சிரமங்களை எதிர்கொண்டு சோர்வடையாமல், உயர்ந்த இலட்சியங்களை நோக்கி முன்னோக்கிச் செல்லவும் கல்வியாளர்களை வலியுறுத்தினார்.
சிக்கலான சூழல்களை சமாளிக்கும்போது தனியாக இருக்காமல் அனைவரோடும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், கல்வி முறையின் செயல்பாடுகள், பாடங்கள் வழியாக பயனுள்ள உறவை உருவாக்கி வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள், குடும்பங்கள், ஆசிரியர்கள், சமூக வழிகாட்டிகள், விளையாட்டுத் தலைவர்கள், பயிற்சியாளர்கள், அருள்பணியாளர்கள் அருள்சகோதரிகள் பொது நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை புறக்கணிக்காமல் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வரவிருக்கும் யூபிலி ஆண்டானது எதிர்நோக்கின் விதையை நம்மில் விதைப்பதற்கான நேறம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், எதிர்நோக்கை விதைக்க வேண்டிய இன்றியமையாத தேவை நமக்கு உள்ளது என்றும், குழந்தைகள், இளம் பருவத்தினர், இளைஞர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துங்கள் என்றும், அவர்களை நம்பிக்கையோடும், இரக்கத்தோடும் இயேசுவின் பார்வையுடனும் இதயத்துடனும் பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகம் மற்றும் திருஅவையின் நிகழ்காலமாகவும் எதிர்காலமாகவும் இருக்கும் இளையோர்க்குத் துணையாகச் செல்வது, அவர்களுக்கு ஆதரவளிப்பது, ஊக்குவிப்பது, நமது சான்றுள்ள வாழ்வுடன், "எல்லோரும் சகோதரர்களாக" இருப்பதற்கு வழிவகுக்கும் நல்ல பாதையை அவர்களுக்குக் கல்வி வாயிலாகக் காண்பிப்பதும் நமது பணி என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்