கிறிஸ்துவின் மறைப்பணியாற்றும் சீடர்களாக மாறுவோம்

நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கு அருளடையாளத்தில் நமது முழு கவனத்தையும் செலுத்தி நாம் வாழ்கின்ற இந்த பொதுவான உலகிற்கான நன்மைக்காக உழைக்கும்போது கிறிஸ்துவின் மறைப்பணியினை ஆற்றும் அவரின் சீடர்களாக மாறுகின்றோம்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கு அருளடையாளத்தில் நமது முழு கவனத்தையும் செலுத்தி நாம் வாழ்கின்ற இந்த பொதுவான உலகிற்கான நன்மைக்காக உழைக்கும்போது கிறிஸ்துவின் மறைப்பணியினை ஆற்றும் அவரின் சீடர்களாக மாறுகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 7 மணியளவில் வத்திக்கானின் Protomartiri வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவிழிப்பு வழிபாட்டில் பங்கேற்றவர்களுக்கு எழுத்து வடிவில் வழங்கிய மறையிரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த மறையுரையை வழங்காமல் அமைதியில் சிந்திக்க அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், நாம் வாழ்கின்ற இந்த உலகிற்கு பொதுவான சான்று ஒன்று தேவை என்றும், இந்த உலகில் வாழ்கின்ற நாமெல்லாரும் பொதுவான மறைப்பணியின் நம்பிக்கையாளர்களாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஒன்றிணைந்து கிறிஸ்துவிற்கு சான்று பகராமல் வாழ்வது அவமானம் என்று தனது மறையுரையில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மிடையே நிலவுகின்ற சுவர் போன்ற வேற்றுமைகளைக் களைந்து திருமுழுக்கு அருளடையாளம் வழியாக நாம் பெற்றுக்கொண்ட பொதுவான நலனிற்காக உழைக்கும் எண்ணத்தில் கவனத்தை செலுத்துவதற்கான ஓர் வாய்ப்பாக ஆயர் மாமன்றம் விளங்குகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கு அருளடையாளத்தில் நமது முழு கவனத்தையும் செலுத்தி நாம் வாழ்கின்ற இந்த பொதுவான உலகிற்கான நன்மைக்காக உழைக்கும்போது கிறிஸ்துவின் மறைப்பணியினை ஆற்றும் அவரின் சீடர்களாக மாறுகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

நமது கடவுளாகிய இயேசுவுக்கு ஒன்றிணைந்து நாம் சான்று பகரவில்லை என்றால், அந்த ஊழலானது நற்செய்தி அறிவிப்பினை பாதிப்படையச் செய்கின்றது என்று திருஅவையின் தந்தையர்கள் கருதினார்கள் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், இரத்தத்தின் கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது வேறு எந்த வார்த்தைகளையும் விட வலிமையானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்வேறு மரபுகளைக் கொண்ட பல கிறிஸ்தவர்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், உலக மீட்பிற்காக தன் உயிரைக் கொடுத்து, அலகையின் சோதனைகளுக்கு எதிராகப் போராடிய இயேசுவின் வாழ்வை முழுமையாகக் கடைப்பிடித்து வாழ வலியுறுத்தியுள்ளார்.

ஒருங்கிணைந்த பயணத்தைப் போலவே, கிறிஸ்தவ ஒன்றிப்பும் நமது பணிக்கு அவசியம் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் சில இடங்களில் மிகவும் கடினமானதாக மாறுகின்ற இப்பணியானது, தியாகம் நிறைந்த வாழ்விற்கு வழிவகுக்கும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

மறைசாட்சிய வாழ்வு வாழ்பவர்கள் இயேசு கிறிஸ்துவில் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்காக தங்கள் உயிரையே ஒன்றிணைந்துக் கொடுக்கிறார்கள், இரத்தத்தின் கிறிஸ்தவ ஒன்றிப்பை வாழ்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், அவர்களின் சான்றுள்ள வாழ்வு வேறு எந்த வார்த்தைகளையும் விட வலிமையானது, ஏனெனில் இறைவனின் சிலுவையிலிருந்து அந்த சான்று வாழ்விற்கான ஒன்றிப்பு வருகின்றது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஒன்றிப்பு, ஒற்றுமை என்பது கணிக்க முடியாத பரிசு, ஒரு பயணம் என்றும்,   எப்பொழுதும் கூடுதலான ஒற்றுமையை நோக்கி வழிநடத்தும் தூய ஆவியானவர், மனிதனின் தன்னார்வ உறுதிப்பாட்டிற்கு அப்பாற்பட்ட, இன்றியமையாத விண்ணகத்தின் பலன் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 October 2024, 15:33