இறைவனின் இல்லத்தைப் பராமரித்துப் பாதுகாக்கும் பணி ஒரு கொடை
மெரினா ராஜ் - வத்திக்கான்
“என் இல்லம் இறைவேண்டலின் வீடு” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப பெருங்கோவிலை செபிப்பதற்கு ஏற்ற இடமாகப் பராமரிக்கும் பணியானது நம்பிக்கையும் மறைப்பணி ஆர்வமும் கொண்டவர்களால் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும், இறைவனின் இல்லத்தை அண்மைய தொழில்நுட்பங்கள், ஆன்மிக, பொருளாதார அளவில் பாரமரித்து பாதுகாக்கும் பணியானது இறைவனின் ஒரு கொடை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 11 திங்கள்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் தூய பேதுரு பெருங்கோவிலைப் பாதுகாத்து பராமரிக்கும் Fabbrica di San Pietro அமைப்பின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பங்குதாரர்கள் ஏறக்குறைய 40 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தொழில்நுட்பக் கருவிகள் நமது படைப்பாற்றல் மற்றும் பொறுப்பை சவால் செய்கின்றன என்று கூறிய திருத்தந்தை அவர்கள், பயனுள்ள, ஆனால் தெளிவற்ற ஒரு ஆற்றலின் சரியான மற்றும் ஆக்கபூர்வமான பயன்பாடு நம்மைச் சார்ந்துள்ளது என்றும் எடுத்துரைத்தார்.
செய்யும் பணிகளில் நுட்பமான உணர்வுடன் செயல்பட வேண்டும், எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நிர்வாகத் தயாரிப்புகள் நன்றாகப் பணியாற்றும்போது அவை செய்யும் செயலுக்கு பலனளிப்பதோடு, நமது வாழ்வில் நாம் வளரவும் உதவுகின்றன என்றும் கூறினார்.
உரோம் நகருக்கு வரும் திருப்பயணிகள் பெருங்கோவிலை, நம்பிக்கை மற்றும் வரலாற்றின் இடமாக, விருந்தோம்பலின் இடமாக கடவுளையும் உடன் சகோதர சகோதரிகளையும் சந்திக்கும் இடமாகப் பார்க்க உதவவேண்டும் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அனைவரும் வரவேற்கப்பட்டும் இடமாக ஆலயம் திகழ வேண்டும் என்றும் கூறினார்.
செபத்திற்கு செவிசாய்த்தல், நம்பிக்கையின் பார்வை, திருப்பயணிகளின் தொடுதல் என்னும் மூன்று தலைப்புக்களின் கீழ் தனது கருத்துக்களை அவர்களுடன். பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த உணர்வுகள் அனைத்தும் உடல், ஆன்மிக, அறிவிற்கான முன்முயற்சிகளை எடுக்க உதவட்டும் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்