அறிவை மேம்படுத்துவதில் நூலகர்களின் முக்கிய பங்கு உள்ளது
மெரினா ராஜ் - வத்திக்கான்
வரலாற்றுப் பாரம்பரியத்தை பாதுகாப்பது மட்டுமின்றி, அறிவை மேம்படுத்துவதிலும் நூலகர்களின் முக்கிய பங்கு உள்ளது என்றும், உரையாடலில் நூலகங்கள் என்ற மாநாடு அமைதியின் இடங்களாகவும், சந்திப்பின் சோலைகளாகவும், சுதந்திரமான கலந்துரையாடல்களாகவும் இருப்பதை உறுதிசெய்ய தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 16 சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில், வத்திக்கான் திருப்பீட நூலகத்தாரால் நடத்தப்படும் உரையாடலில் நூலகம் என்னும் மாநாட்டின் பங்கேற்பாளர்கள் ஏறக்குறைய 100 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நட்புறவு நிறுவனங்களுடன் பல முக்கிய புள்ளிகளில் உரையாட இருக்கும் இந்நிகழ்வு பரஸ்பர செறிவூட்டலின் அடையாளமாக தொடரும் என்றும் கூறினார்.
நூலக திருத்தந்தை என்று அழைக்கப்படும் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ், மிலானில் உள்ள அம்புரோசியன் நூலகம் மற்றும் வத்திக்கான் நூலகத்தின் தலைவராகவும் இருந்தவர் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகவும் சுறுசுறுப்பான மனிதர், அறிவியல் மற்றும் வெகுஜன ஊடகத் துறைகளில் ஆர்வமுள்ளவர், இரண்டு உலகப் போர்களுக்கு இடையே வரலாற்றின் மிகவும் கடினமான நேரத்தில் நூலகங்களின் முக்கியத்துவத்தை ஊக்குவித்தவர் என்றும் எடுத்துரைத்தார்.
நாம் வாழும் புதிய காலத்தில், நூலகங்களின் உருவாக்கம் மற்றும் கலாச்சாரத் திறனை சிறப்பாக வளர்த்துக்கொள்ள உரையாடலானது அனைவருக்கும் உதவும் என்றும், புதிய தலைமுறையினருக்கு அர்த்தமுள்ள வழிகளில் கடந்த கால பாரம்பரியத்தை கொண்டு செல்வதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மாறிவரும் தொழில்நுட்பமானது நூலகப் பணியாளர்களின் வேலையை பெரிதும் மாற்றியுள்ளது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், பலவீனமான நாடுகள் பொருளாதார வறுமையை மட்டுமன்றி, அறிவுசார் மற்றும் கலாச்சார வறுமைக்கும் ஆளாக்குகின்றன, இது மிக மோசமான ஆபத்து என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
போர் மற்றும் மோதல்கள் மாணவர்கள் கற்றல் மற்றும் ஆராய்ச்சி செய்வதிலிருந்து தடுக்கின்றன, பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வித் திட்டங்களை அழித்துவிடுகின்றன என்று தெரிவித்த திருத்தந்தை அவர்கள், போர் அனைத்தையும் அழிக்கிறது என்றும் கூறினார்.
எவாஞ்சலி கௌதியம் என்னும் திருத்தூது மடலில் உள்ள எண். 222-237 இல் கூறப்பட்டிருக்கும் நான்கு அளவுகோல்களான விண்வெளியை விட நேரம் உயர்ந்தது மோதலை விட ஒற்றுமை மேலோங்குகிறது. எண்ணத்தை விட எதார்த்தம் மேலானது; பகுதியை விட முழுமையும் மேலானது. என்பவற்றை நாம் மறந்துவிடக் கூடாது என்றும் அவ்வுறுப்பினர்களுக்கு மீண்டும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்