திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (VATICAN MEDIA Divisione Foto)

தேவையிலிருப்பவர்களுக்கான பணியே உண்மையான நற்செய்தி அறிவிப்புப்பணி

கிறிஸ்துவை அறிவித்தல், சமநிலையற்ற தன்மையை சரிசெய்தல், எதிர்நோக்கை விதைத்தல் என்னும் மூன்று கருத்துக்களில் தனது கருத்துக்களை களப்பணியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஒவ்வொரு முறை ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்போதும், அவர்கள் அருகில் செல்லும்போதும், கடவுளின் அருகில் செல்கின்றோம், கடவுளைத் தொடுகின்றோம் என்றும், தேவையிலிருப்பவர்களுக்கான பணியில் தான் கிறிஸ்தவத்தின் ஈடுபாடு உள்ளது, அதுவே உண்மையான நற்செய்தி அறிவிப்புப் பணி என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 4 திங்கள்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ கிறிஸ்தவ சமூகங்களின் இயக்கமான Adsis என்பதன் திருஅவை களப்பணியாளர்களின் மூன்றாவது கூட்டத்தின் உறுப்பினர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இளைஞர்கள் மற்றும் ஏழைகளிடையே உடன்பிறந்த உணர்வை ஏற்படுத்தவும், ஆதரவின் வழியாக இயேசுவின் நற்செய்தியை வாழ விரும்புகின்ற மக்களால் ஆன இவ்வியக்கம், குறிப்பாக பெருந்தொற்று நோய்க்காலத்தில் மக்களுடன் தங்களது வாழ்க்கை,  நம்பிக்கை, அன்பு மற்றும் பணியைப் பகிர்ந்து கொண்டு செயலாற்றியது.

கிறிஸ்துவை அறிவித்தல், சமநிலையற்ற தன்மையை சரிசெய்தல், எதிர்நோக்கை விதைத்தல் என்னும் மூன்று கருத்துக்களில் தனது கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழ்மையான சமூகத்தால் மிகவும் ஒதுக்கப்பட்ட மக்களை வரவேற்று அவர்களுக்காக ஆற்றும் பணி குறித்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

கிறிஸ்துவை அறிவித்தல்

சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட மக்களை வரவேற்று அவர்கள் மத்தியில் வார்த்தைகள் மற்றும் செயல்கள் வழியாக சான்றுள்ள வாழ்க்கை வாழவேண்டும் என்றும், மிகவும் பாதிக்கப்படுபவர்களில் கடவுளின் முகத்தை தொடர்ந்து காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

நமக்காக அடிமையின் உருவை ஏற்று அனைத்தையும் துறந்த கிறிஸ்துவுக்காக வாழவும் அவரைப் பற்றி அனைவருக்கும் அறிவிக்கவும்,  கிறிஸ்துவோடு தொடர்ந்து நாம் இணைந்து நடக்கவும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

சமநிலையற்ற தன்மையை சரிசெய்தல்  

தங்களது திருத்தூதுப்பணி வாயிலாக சமூகத்தில் நிலவும் ஏழை - பணக்காரன் என்ற சமநிலையற்ற தன்மையை எதிர்த்துப் போராடும் அவ்வியக்கத்தாரை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், நீதியற்ற, ஏற்றத்தாழ்வுகள் கொண்ட இத்தகைய மனித குலத்தைக் கடவுளும் விரும்புவது இல்லை, அவற்றை சரிசெய்ய அவர் விரும்புகின்றார் என்றும் எடுத்துரைத்தார்.

ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்து சமூகக் கட்டமைப்பை மீட்டெடுக்க ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என்றும், மற்றவர்களின் துன்பத்தைப் பற்றி யாரும் அலட்சியமாக இருக்க முடியாது என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

எதிர்நோக்கை விதைத்தல்

வீடற்றவர்களாக, அகதிகளாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருக்கும் மக்களை வரவேற்று உதவிகள் செய்யும் இடத்தில் எதிர்நோக்கை விதைப்பவர்களாக நாம் இருக்க வேண்டும் என்றும், வாழ்வில் ஏற்படும் தடைகள் முட்டுக்கட்டைகள் போல அவர்களுக்குத் தோற்றமளித்தாலும் அவர்கள் கிறிஸ்தவ நம்பிக்கையின் அடையாளமாக இருக்கின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

எல்லாவிதமான கடினமான சூழல்களையும் விட கிறிஸ்தவ நம்பிக்கை பெரியது என்பதை நினைவூட்டுபவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அம்மக்களின் நம்பிக்கையின் அடித்தளம் கடவுளில் உள்ளது மாறாக மனிதரில் இல்லை என்றும், மனிதரால் ஆகாதது கடவுளால் ஆகும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2024, 13:22