திருத்தந்தை பிரான்சிஸ் ரோமன் ரோட்டா உருவாக்கப் பயிற்சி பெறுபவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் ரோமன் ரோட்டா உருவாக்கப் பயிற்சி பெறுபவர்களுடன்  (Vatican Media)

இயேசுவைப்போல நீதி, இரக்கம், உண்மையுள்ளவர்களாக வாழுங்கள்

நீதி, இரக்கம், உண்மை என்னும் பண்புகளில் நாம் சிறந்து விளங்க நமக்கு முன்மாதிரிகையாக இருப்பவர் இயேசு - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

நீதி, இரக்கம் மற்றும் உண்மை என்னும் மூன்றும் ஒன்றிணைந்து செல்கின்றன, ஒன்றை விட்டு மற்றொன்று  நம்பத்தன்மையை இழக்கின்றது என்றும். இம்மூன்று நிலைகளில் பணியாற்றவும், அன்பு செய்யவும், இறைமக்களுக்கான பணியில் முனைப்புடன் செயல்படவும் ரோமன் ரோட்டாவின் பயிற்சியாளர்கள் அழைக்கப்படுகின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 23 சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில்  ரோமன் ரோட்டா எனப்படும் திருஅவையின் உச்ச நீதிமன்றம் நடத்தும் உருவாக்கும் பயிற்சியின் பங்கேற்பாளர்கள் ஏறக்குறைய 330 பேரைச் சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நீதி, இரக்கம், உண்மை என்னும் பண்புகளில் நாம் சிறந்து விளங்க நமக்கு முன்மாதிரிகையாக இருப்பவர் இயேசு என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இயேசு நீதியுள்ளவர், இரக்கமுள்ளவர், உண்மையுள்ளவர் என்றும், இரக்கமில்லாத நீதியுமில்லை. நீதியில்லாத இரக்கமும் இல்லை என்றும் எடுத்துரைத்தார்.

நீதி என்பது ஒவ்வொரு நபருக்கும் அவரவர் உரிமையை வழங்க வழிவகுக்கும் மிக முக்கியமான நல்லொழுக்கம் என்றும், இந்த நல்லொழுக்கமானது திருஅவையின் உள்ளேயும் வாழப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

மனித சமூகம் மற்றும் திருஅவையிலும் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், தனது உடனிருப்பை ஒருவர் தாராளமாகக் கொடுப்பதன் வழியாக பிறரின் நன்மையைத் தேடும் இரக்கத்துடன் செயல்கள் செய்யப்பட வேண்டும் என்றும், நீதி மற்றும் அன்பின் வழியில் மக்கள்  நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

திருஅவையின் தாயாகிய இரக்கமுள்ள அன்னை தன் பிள்ளைகளிடத்தின் மென்மையை வெளிப்படுத்துவது போல உதவியை நாடி வரும் மக்களிடத்தில் இருக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இரக்கமின்றி கொடுக்கப்படும் நீதி தவிர்க்கப்படவேண்டும் என்றும் கூறினார்.

துணிவு, நிதானம் உழைப்பு என்னும் நல்லொழுக்கங்களை வாழ்வில் செயல்படுத்துவதற்கு திறந்த மனம் மற்றும் ஒற்றுமை உணர்வு கொண்டு பிறரோடு பழக வேண்டும் என்றும், இதுவே கடவுள் நம்மிடம் செயல்படுத்த விரும்பும் இரக்கம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

தேவையற்ற அச்சங்களை போக்க வேண்டும். நீதியின் பயம், அறத்தை அரித்துவிடும் அல்லது குறைத்துவிடும் என்றும், திருஅவையின் நம்பகத்தன்மை இரக்கமுள்ள அன்பின் பாதையில் செல்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு என்று நம் வாழ்வால் பிறருக்குச் சொல்வோம் என்றும், கடவுளாகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருக்கும் நமது நம்பிக்கையின் வல்லமை நம்முடைய நிகழ்காலத்தை நிரப்பட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2024, 12:20