Toledo குருமட மாணவர்கள் Toledo குருமட மாணவர்கள்  (VATICAN MEDIA Divisione Foto)

நமக்குள் வரும் கிறிஸ்துவை இறைமக்களிடம் எடுத்துச் செல்லும் பணி

குருமாணவர்களிடம் திருத்தந்தை : அருள்பணித்துவ வாழ்வுக்கு நம்மை வழிநடத்தும் இயேசுவிடமிருந்து நம் பார்வையை எடுக்காமல், அவருடனான சந்திப்பை நோக்கி இணைந்து நடைபோடுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மிக உன்னத அன்பின் எடுத்துக்காட்டாக இருப்பதை நமக்கு காண்பிப்பதற்காக நம் வாழ்விற்குள் இயேசு கிறிஸ்து திருப்பலிக் கொண்டாட்டங்கள் வழி வருகிறார் என இஸ்பெயினின் Toledo குருமட மாணவர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 7ஆம் தேதி, வியாழனன்று Toledo குருமடமாணவர்களை சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்பெயினின் பல கிராமங்களில் பாவப்பரிகார மையங்கள் வழி தாய்த்திருஅவையை நோக்கிச் செல்லும் சடங்குறை இடம்பெறுவதைக் குறிப்பிட்டு, கோவில் நற்கருணைப் பேழையில் முதன்முதலாக திருநற்கருணை வைக்கப்பட்டதை சிறப்பிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த ஆன்மீக ஊர்வலம் இஸ்பெயின் திருஅவையில் தனிச்சிறப்பு வாய்ந்தது என்றார்.      

இந்த நினைவுக் கொண்டாட்டம், திருப்பலி நிறைவேற்றலையும், நற்கருணையைக் காட்சிப்படுத்தலையும், ஆன்மீக ஊர்வலத்தையும் உள்ளடக்கியது என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இவையனைத்தும் அருள்பணித்துவ வாழ்வுக்கான தயாரிப்பில் முக்கியத்துவம் நிறைந்தவை எனவும் கூறினார்.

திருப்பலியில் நம் வாழ்வுக்குள் வரும் இயேசு, தன்னை நற்கருணைப் பேழையில் வெளிப்படுத்தி அவர் குரலுக்கு அமைதியில் செவிமடுக்கவும் உதவுகிறார் என்ற திருத்தந்தை, நமக்குள் வரும் கிறிஸ்துவை இறைமக்களிடம் எடுத்துச் செல்வதையே, நற்கருணை ஊர்வலம் குறித்து நிற்கின்றது என மேலும் கூறினார்.

அருள்பணித்துவ வாழ்வுக்கு நம்மை வழிநடத்தும் இயேசுவிடமிருந்து நம் பார்வையை எடுக்காமல், அவருடனான சந்திப்பை நோக்கி இணைந்து நடைபோடுவோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2024, 16:35