என்னை நினைவிற்கொள்ளும் இயேசுவே

இயேசு தன்னுடன் சிலுவையில் அறையப்பட்டவர்களை நினைவுகூர்கிறார், அவருடைய இறுதி மூச்சு வரை அவர்களை பாதுகாக்கின்றார் - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும் என்ற நல்ல கள்வனின் வார்த்தைகளில் உள்ள நினைவிற்கொள்ளுதல் என்பது மீண்டும் இதயத்திற்குக் கொண்டு வருதல், மீண்டும் இதயத்தில் வைத்தல் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 4 திங்கள்கிழமை உரோம் உள்ளூர் நேரம் காலை 11 மணியளவில் இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 3.30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் கடந்த ஆண்டு (2023) திருஅவையில் இறந்த கர்தினால்கள் ஆயர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக நிறைவேற்றிய திருப்பலியின் மறையுரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சிலுவையில் இயேசுவோடு அருகில் தொங்கவைக்கப்பட்டிருந்த குற்றவாளியின் இவ்வார்த்தைகளானது, வேறு யாராலும் இதற்கு முன் கூறப்படவில்லை என்றும், உண்மை நிறைந்த இந்த உரையாடலானது இயேசுவோடு அப்பம் பகிர்ந்து கொண்ட சீடர்களாலும் கூறப்படவில்லை என்றும் கூறினார் திருத்தந்தை.

பாவிகளின் செபத்தை இறைவன் எப்போதும் கேட்கின்றார், இறுதிவரை கேட்கின்றார் என்றும், வலியால் துளைக்கப்பட்ட கிறிஸ்துவின் இதயம் உலகைக் காப்பாற்ற திறக்கிறது என்றும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், ஒரு திறந்த இதயமே உலகைக் காப்பாற்றுகின்றது, மூடிய இதயம் அல்ல என்றும் எடுத்துரைத்தார்.

“நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்ற இயேசுவின் பதிலானது அக்குற்றவாளியின் வாழ்வில் செயல்படுத்தப்படுகின்றது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இயேசுவின் நினைவு ஆற்றல் மிக்கது இரக்கமுள்ளது என்றும் அவர் நமக்காக இறந்தார், நம்மோடு இறந்தார் என்றும் கூறினார்.

நான் இயேசுவை எவ்வாறு சந்திக்கின்றேன்? எதிர்கொள்கின்றேன்? அவருக்காக எனது இதயத்தைத் திறக்கின்றேனா? அல்லது எனது துன்பம் தன்னலம் கொண்டு இதயத்தை மூடிவிடுகின்றேனா என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் பாவி இயேசு நமக்குத் தேவை என்று உணர்கின்றோமா இல்லை நாம் நேர்மையாளர்கள் அவரது உதவி நமக்குத் தேவையில்லை என்று உதாசீனப்படுத்துகின்றோமா என்றும் சிந்தித்துப் பார்க்க அழைப்பு விடுத்த திருத்தந்தை அவர்கள்,    

இயேசு தன்னுடன் சிலுவையில் அறையப்பட்டவர்களை நினைவுகூர்கிறார், அவருடைய இறுதி மூச்சு வரை அவர்களை பாதுகாக்கின்றார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நாம் சந்திக்கும் மனிதர்களிடத்தில் எப்படி இருக்கின்றோம்? தீர்ப்பிடுகின்றோமா பிரிக்கின்றோமா வரவேற்கின்றோமா என்று சிந்திக்க வலியுறுத்தினார்.

கடவுளின் செயல்களான உடனிருப்பு, இரக்கம், அன்பு ஆகியவற்றை மனதில் கொண்டு வாழ வேண்டும் என்றும், இயேசுவே என்னை நினைவிற்கொள்ளும் என்பதை அடிக்கடி கூறுபவர்களாக வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2024, 13:39