நமது சொந்த அன்னையைப் போல் திருஅவையை அன்புகூர வேண்டும்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உண்மையில் திருஅவை நம் சொந்த அன்னையரைப் போலவே அன்புகூரப்பட வேண்டும், இல்லையேல், நாம் அவளை அன்புகூரவில்லை என்று அர்த்தமாகிறது, அல்லது நாம் அன்புகூர்வது ஓர் உருவம் குறித்த வெறும் கற்பனையே என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 21, அன்னை மரியாவை காணிக்கையாக நேர்ந்தளித்த திருநாளாகிய வியாழன் இன்று, திருஅவைக் குறித்த வரலாற்றின் படிப்பை புதுப்பித்தல் குறித்து அருள்பணித்துவ பயிற்சி நிலையில் இருப்போருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
எனது இந்தக் கடிதத்தில், திருஅவையின் வரலாற்றைப் படிப்பதன் முக்கியத்துவம் குறித்த சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ள திருத்தந்தை, குறிப்பாக, நாம் வாழும் உலகத்தைப் பற்றி அருள்பணியாளர்களுக்கு சிறந்த முறையில் விளக்குவதற்காக இதனை எழுதுவதாகக் கூறியுள்ளார்.
அருள்பணித்துவ வாழ்விற்கு மாணவர்களை உருவாக்குவதற்காகத் திரு அவைக் குறித்த வரலாற்றைப் படிப்பதில் அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது என்பதை தான் அறிந்துள்ளதாக உரைத்துள்ள திருத்தந்தை, இளம் இறையியல் மாணவர்களிடம் உண்மையான வரலாற்று உணர்வை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இங்குத் தான் வலியுறுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார்.
இதன் வழியாக, கிறிஸ்தவத்தின் கடந்த இருபது நூற்றாண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் திடமான மற்றும் விரிவான அறிவை மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதர்களாகிய நம்முடைய வரலாற்று பரிமாணத்தின் தெளிவான உணர்வை வளர்ப்பதையும் தான் இங்குக் குறிப்பிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
வரலாற்றின் சரியான உணர்வு, நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த விகிதாச்சார உணர்வையும் முன்னோக்கையும் வளர்த்துக்கொள்ள உதவும், ஆனால் நாம் கற்பனை செய்வது போலவோ அல்லது எதார்த்தத்தை விரும்புவதைப் போலவோ அல்ல என்று எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, ஆபத்தான மற்றும் சிதைந்த காரியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நெறிமுறை பொறுப்பு, பகிர்வு மற்றும் ஒன்றிப்புக்கு நம்மை அழைக்கும்போது, எதார்த்தத்துடன் தொடர்புபடுத்த முடிகிறது என்றும் கூறியுள்ளார்.
திருஅவையின் வரலாறு உண்மையான திருஅவையைப் பார்க்கவும், அதில் உண்மையாக இருப்பதைப் போல அதனை அன்புகூரவும் உதவுகிறது, மேலும் அது கற்றுக்கொண்டதை அன்புகூரவும், அதனுடைய தவறுகள் மற்றும் தோல்விகளில் இருந்து தொடர்ந்து கற்றுக்கொள்ளவும் முடிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
இருண்ட தருணங்களில் கூட தனது ஆழமான அடையாளத்தை உணர்ந்து கொண்டிருக்கும் ஒரு திருஅவை, அது வாழும் நிறைவற்ற மற்றும் காயமடைந்த உலகத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்று உரைத்துள்ள திருத்தந்தை, உலகிற்கு குணப்படுத்துதல் மற்றும் புதுப்பித்தலை கொண்டுவருவதற்கான அதன் முயற்சிகளில், திருஅவை சில வேளைகளில் வெற்றிபெறாவிட்டாலும், தன்னைக் குணப்படுத்தவும் புதுப்பிக்கவும் முயற்சிக்கும் அதே வழிமுறைகளைப் பயன்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரலாற்றுடன் இணைப்பின் முக்கியத்துவம்
வரலாற்றைத் தவிர்ப்பது என்பது பார்வையற்றத்தன்மையின் ஒரு வடிவமாகத் தோன்றுகிறது என்றும், இது இல்லாத உலகில் நமது ஆற்றலை வீணடிக்க, தவறான பிரச்சனைகளை எழுப்பி, போதுமான தீர்வுகளை நோக்கிச் செல்கிறது என்றும் விளக்கியுள்ள திருத்தந்தை, இந்த விளக்கங்களில் சில சிறிய குழுக்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமே தவிர, நிச்சயமாக மனிதகுலத்திற்கும் கிறிஸ்தவ சமூகத்திற்கும் அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரலாற்று ஆசிரியர்களின் பணி மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகளின் அறிவு இன்று தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்தவை மற்றும் அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் மீது தங்கியிருக்கும் இந்தக் கொடிய வெறுப்பு ஆட்சிக்கு ஒரு மருந்தாக அவை செயல்பட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
முழு உண்மையின் நினைவு
புனித மத்தேயு கூறியுள்ள இயேசுவின் மூதாதையர் பட்டியலை நினைவு கூர்வோம் என்றும், அதில் எதுவும் எளிமைப்படுத்தப்படவில்லை, அழிக்கப்படவில்லை அல்லது கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, இந்தப் பட்டியலானது, உண்மைக் கதையை உள்ளடக்கியது என்றும், இதில் குறைவானதாகக் கூறுவதற்கு சிக்கலான பல புள்ளிவிவரங்கள் உள்ளன. மேலும் தாவீது அரசரின் பாவமும் இதில் வலியுறுத்தப்படுகிறது (காண்க. மத் 1:6) இருப்பினும், எல்லாமே அன்னை மரியா மற்றும் கிறிஸ்துவுடன் நிறைவடைகிறது (காண்க. மத் 1:16) என்றும் தெரிவித்துள்ளார்.
உலகத்துடனான தனது உறவை உருவாக்க பல நூற்றாண்டுகளின் கடந்த கால அனுபவத்தின் முதிர்ச்சியடைந்த செல்வாக்கு தனக்கு எவ்வளவு தேவை என்பதை திருஅவை உணர்ந்துள்ளது என்பதையும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.
வரலாற்றின் நேர்மையான மற்றும் துணிச்சலான ஆய்வு, பல்வேறு மக்களுடனான தனது உறவுகளை நன்கு புரிந்துகொள்ள திருஅவை உதவுகிறது, மேலும் இந்த முயற்சிகள் இம்மக்களின் மிகவும் கடினமான மற்றும் குழப்பமான தருணங்களை விளக்குவதற்கும் தெளிவுபடுத்துவதற்கும் உதவ வேண்டும் என்பதையும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
திருஅவையினுடைய வரலாற்றின் ஆய்வு
இறுதியாக, திருஅவையினுடைய வரலாற்றின் ஆய்வு என்ற தலைப்பில், திருஅவை வரலாற்றைப் பற்றிய சில சுருக்கமான கணிப்புகளைச் சேர்க்க விரும்புவதாகக் கூறியுள்ள திருத்தந்தை, ஏழுவிதமான கணிப்புகளைக் கூறி தனது கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்