திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

உருகுவே நீதிபதிகள் குழுவிற்குத் திருத்தந்தை செய்தி

அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரியதாக்க நீதிபதிகள் குழு தங்களையே அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

ஜெர்சிலின் டிக்ரோஸ் வத்திக்கான்

சமூக உரிமைகள் மற்றும் பிரான்சிஸ்கன் கோட்பாட்டிற்கான அமெரிக்க  நீதிபதிகள் குழுவின் உருகுவே கிளை பிறந்த நவம்பர் 11 அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அக்குழுவினரை வாழ்த்தி செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். 

பல சமச்சீரற்ற காலங்களில் ஒரு சில மக்களும் பெருநிறுவனங்களும் உலகின் பெரும்பாலான செல்வங்களை குவித்து இலட்சக் கணக்கான மக்களை  கைவிடப்பட்ட  நிலையில் வைத்திருப்பதை தெளிவாக புரிந்து கொள்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

நல்லிணக்கத்தை உருவாக்குவதும்,  சமூக நீதிக்கு உறுதி அளிப்பதும் அரசுதானே தவிர, சந்தைப் பொருளாதாரம் அல்ல, என்றும் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்ற நிலை இனியும் இருக்கக் கூடாது என்றும், அனைவரும்  ஒருங்கிணைந்த ஒரு   பொருளாதார மற்றும் சமூக அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றால் செல்வத்தின்  நியாயமான பங்கீடு  இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.

ஒரு சில தனிநபர்களின்  முன்னேற்றம் எப்போதும் சமூக முன்னேற்றமாகாது என்றும் கூறியதோடு, ஏற்றத்தாழ்வான சமூகத்தில் நல்ல எதிர்காலம் இருக்க முடியுமா என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிபதிகள் குழுவினர் அனைவரும் துணிவுடன் செயல்பட வேண்டும் என்றும், அவர்களால் இன்னும் அதிகமாக செய்ய முடியும் என்றும் நம்பிக்கை அளித்ததோடு, தவறான பாதையில் செல்ல ஒருபோதும் அனுமதிக்க  வேண்டாம்  எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

எளியவர்களை மட்டுமே சிக்க வைத்து, ஆற்றல் படைத்தவர்கள் எளிதில் தப்பிச் செல்ல  சட்டம் ஒரு சிலந்தி வலை அல்ல என்னும் Alfredo Zitarrosa அவர்களின் அழகான பாடல் வரிகளை ஒருபோதும் மறக்க வேண்டாம் என்று கூறியதோடு, அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரியதாக்க நீதிபதிகள் குழு தங்களையே அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2024, 14:46