மலைப்பொழிவில் வரும் நற்பேறுகள் அன்பின் பாதையாக உள்ளன

திருத்தந்தை : நம்முடைய முழு சுதந்திரத்தை மதிக்கும் இறைவன், பிறரன்புப் பணியில் அவரை பின்பற்றுவதற்கான அனுமதியையும் நமக்கு வழங்குகிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இயேசுவின் மலைப்பொழிவில் வரும் நற்பேறுகள் ஒவ்வொரு கிறிஸ்தவரின் அடையாள அட்டை மற்றும் புனிதத்துவத்திற்கான பாதை என அனைத்துப் புனிதர்கள் திருவிழா அன்று வழங்கிய மூவேளை செபவுரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைத்துப் புனிதர்களின் திருப்பலி நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கும் மலைப்பொழிவு நற்பேறுகள் குறித்து நண்பகல் மூவேளை செபவுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு நமக்காக மனிதனாக உருவெடுத்து தன்னையே இறைவனின் கொடையாக தந்ததையும், அதற்கான நம் பதில்மொழியையும் உள்ளடக்கியதாக இயேசு வழங்கிய நற்பேறுகள் அன்பின் பாதையாக உள்ளன என்றார்.  

இது கடவுளின் கொடை, ஏனெனில் புனித பவுல் எடுத்துரைப்பதுபோல், இறைவன் நம்மை தூயவர்களாக்குகிறார் என்ற திருத்தந்தை, இறைவனே தன் அருளால் நம்மைக் குணப்படுத்தவும், இயேசுவைப்போல் அன்புகூர்வதில் தடையாக இருப்பவைகளிலிருந்து விடுவிக்கவும் செய்கிறார் என்றார்.

இறைவனின் செயல்பாடுகளுக்கு நம் பதில்மொழி என்ன என்பது குறித்தும் இம்மூவேளை செப உரையின்போது விளக்கமளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவன் தன் புனிதத்தன்மையை நமக்கு முன்வைக்கிறாரேயொழிய, அதனை நம்மீது திணிப்பதில்லை, மாறாக அதனை நம்மீது தூவி அதன் சுவையை ருசிக்கவும் அழகை இரசிக்கவும் நம்மை அனுமதித்து, நம் பதிலுரைக்காக காத்திருக்கிறார் என்ற திருத்தந்தை, நம்முடைய முழு சுதந்திரத்தை மதிக்கும் இறைவன், பிறரன்புப் பணியில் அவரை பின்பற்றுவதற்கான அனுமதியையும் நமக்கு வழங்குகிறார் என மேலும் கூறினார்.

இந்நாளில் நாம் கொண்டாடும் அனைத்துப் புனிதர்களிலும், நம்மைச் சுற்றி வாழும் புனிதர்களிலும் இந்த நற்பேறுப் பண்புகளை நாம் காண்கிறோம் என்ற திருத்தந்தை, Auschwitz நாத்ஸி வதைப்போர் முகாமில் ஒரு குடும்பத் தலைவனுக்காக தன் உயிரை வழங்கிய புனித Maximilian Kolbe, ஏழைகளுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த கல்கத்தாவின் புனித தெரேசா, ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்ததால் திருப்பலி ஆற்றிக்கொண்டிருந்தபோதே கொலைச் செய்யப்பட்ட ஆயர் புனித ஆஸ்கர் ரொமேரோ போன்றோரிலும், நம்மைச் சுற்றி வாழும் புனிதர்களிலும் ஏழைகளைக் கண்டுகொள்கிறோம் என்றார்.

ஏழையர், துயருறுவோர், கனிவுடையோர், நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர், இரக்கமுடையோர், தூய்மையான உள்ளத்தோர், அமைதி ஏற்படுத்துவோர், கடவுளின் மக்கள், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் என தங்களுக்கு அடுத்திருக்கும் ஏழைகளை புனிதர்களின் முகங்களில் கண்டுகொண்டு நம்மால் ஏழைகளின் தேவைகளுக்கு பாராமுகமாக இருக்க முடியாது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித வாழ்வு வாழவும், ஆவியாரால் வழிநடத்தப்படவும், இயேசு வழங்கிய நற்பேறுகளை நடைமுறைப்படுத்தவும் நாம் தயாராக இருக்கின்றோமா என்ற சிந்தனையுடன் தன் அனைத்துப் புனிதர்கள் நாள் மூவேளை செபவுரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மூவேளை செப உரைக்குப்பின் இன்றைய உலகில் இடம்பெறும் துயரநிலைகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Chad நாட்டில் அண்மையில் பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்,  அண்மை வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட இபேரியத் தீபகற்பப் பகுதி, குறிப்பாக வலேன்சியா பகுதி,  துயர்களை அனுபவித்துவரும் உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ராயேல், லெபனோன், மியான்மார், சூடான் ஆகிய நாடுகளைப் பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை, அண்மையில் காசா பகுதியில் 153 பெண்களும் குழந்தைகளும் படுகொலைச் செய்யப்பட்டது குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2024, 16:24