புனிதர் பட்ட படிநிலைகளுக்கென 6 இறையடியார்களுக்கு அங்கீகாரம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
வெவ்வேறு விதங்களில் விசுவாசத்திற்கு சான்றாக விளங்கிய வெவ்வேறு நாடுகளையும் காலத்தையும் பின்னணிகளையும் கொண்ட 6 இறையடியார்களை புனிதர் பட்ட படிநிலைகளுக்கென அங்கீகாரம் வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 25 திங்களன்று திருப்பீடத்தில் புனிதர்பட்ட படிநிலைகளுக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் Marcello Semeraro அவர்களைச் சந்தித்தபோது, இவ்வொப்புதலை வழங்கினார் திருத்தந்தை.
இத்தாலியின் தூரின் நகரைச் சேர்ந்த அருளாளர் Pier Giorgio Frassati அவர்களின் பரிந்துரையால் இடம்பெற்ற புதுமை குறித்தும், இத்தாலியில் பிறந்து ஈக்குவதோர் நாட்டில் இறந்த அருள்சகோதரி, அருளாளர் Maria Troncatti அவர்களின் பரிந்துரையால் இடம்பெற்ற புதுமை குறித்தும் இடம்பெற்ற ஆய்வுகளின் முடிவுகளுக்கும், அவர்களை புனிதர்களாக அறிவிப்பதற்கான பரிந்துரைகளுக்கும் தன் ஒப்புதலை வழங்கியுள்ளார் திருத்தந்தை.
மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்ட வியட்நாம் நாட்டின் மறைமாவட்ட அருள்பணியாளர், இறையடியார் Francis Xavier Tru’o’ng Bǚu Diệp, காங்கோ ஜனநாயக குடியசின் பொதுநிலையினர், இறையடியார் Floribert Bwana Chui Bin Kositi ஆகியோர் குறித்த ஆய்வுகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார் திருத்தந்தை.
குரோவேசியாவில் வாழ்ந்த ஆயர் Giuseppe Lang அவரின் பெயரும் வீரத்துவ பண்புகளுக்காக புனிதர் படிநிலைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டு திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, 16ஆம் நூற்றாண்டில் இறைபதம் சேர்ந்த புனித பிரான்சிஸ்கன் துறவுசபையின் இல்லத் தலைவி, வணக்கத்துக்குரிய இறையடியார், அருள்சகோதரி சிலுவையின் Giovanna அவர்களுடன் தொடர்புடைய வழிபாட்டு மரபை அங்கீகரித்து அதனை அறிவிக்குமாறும் இத்திருப்பீடத்துறைக்கு அதிகாரம் வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்