குழந்தைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் குழந்தைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

குழந்தைகளின் நலன்களுக்காகத் திருஅவை அதிகாரமுடன் பேசுகிறது!

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது உண்மையில் பெற்றோர்கள், அரசு மற்றும் கற்றுக்கொடுக்கும் ஒரு சமூகமாக திருஅவையின் மிகப்பெரிய பொறுப்பாக அமைந்துள்ளது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிறிஸ்துவின் திரு இரத்தத்தால் குழந்தைகள் மீட்கப்பட்டு, அவருடைய அருளால் குழந்தைகளாகவும், கடவுளின் நண்பர்களாகவும், முடிவற்ற மகிமையின் வழித்தோன்றல்களாகவும் மாறுகிறார்கள் என்பதை கிறிஸ்தவ வெளிப்பாடு திருஅவைக்கு உணர்த்துகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக குழந்தைகள் தினத்திற்காகப் பாப்பிறை அமைப்பு நிறுவப்பட்டதற்கான தான் கையொப்பமிட்டுள்ள ஆணை (CHIROGRAPH) ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை. நற்செய்திகளில் காட்டப்படும் குழந்தைகள்மீதான இயேசுவின் அணுகுமுறைகளையும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை

குழந்தைகள் பொதுவாக எதிர்காலத்தில் குடும்பம், சமூகம், திருஅவை அல்லது தங்கள் நாடுகளுக்கு  என்ன கொடுக்க முடியும் என்பதைக் கருத்தில் கொள்வது மட்டுமல்ல, அவர்கள் வாழும் பருவத்தில் முதன்மையானவர்கள், முக்கியமானவர்கள் மற்றும் மதிப்புமிக்கவர்கள் என்பதும் உணர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பம், திருஅவை, அரசு ஆகியவை குழந்தைகளுக்கானது, குழந்தைகள் நிறுவனங்களுக்காக அல்ல என்றும், ஏற்கனவே குழந்தையாக இருந்த மனிதன், பிரிக்க முடியாத, மீற முடியாத மற்றும் உலகளாவிய உரிமைகளுக்கு உட்பட்டவன் என்பதையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

திருஅவை கடவுளின் பெயரால் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளுக்காக அதிகாரபூர்வமாகக் குரல் கொடுக்கிறது என்றும், குழந்தைகளின் உயிரையும் மாண்பையும்  நசுக்குகின்ற வன்முறை மற்றும் ஆபத்துக்களை எதிர்கொண்டு, இன்னும் கூடுதலான வலிமையுடன்  அவர்களின் தேவைகளை எல்லா நாடுககளுக்கும் எடுத்துச்செல்பவளாகத் திருஅவைத் தன்னை மாற்றிக்கொள்கிறது என்றும் விவரித்துள்ளார்.

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது உண்மையில் பெற்றோர்கள், அரசு மற்றும் கற்றுக்கொடுக்கும் ஒரு சமூகமாகத் திருஅவையின் மிகப்பெரிய பொறுப்பு என்று வலியுறுத்திக் கூறியுள்ள திருத்தந்தை, குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது திருஅவையின் கடமை மற்றும் அறத்தின் முதல் வடிவம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை

இந்த நாள் உலகளாவிய திருஅவையின் அளவிலும், குறிப்பிட்ட தலத்திருஅவைகளிலும் அவற்றின் மாநில மற்றும் தேசிய குழுக்களின் அளவிலும் கொண்டாடப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகக் கூறியுள்ள திருத்தந்தை, உள்ளூர் அமைப்புக் குழுக்களை அமைக்கும் மாநில மற்றும் தேசிய ஆயர் பேரவைகளுக்கு உலக குழந்தைகள் தினத்தை தயாரிக்கும் பணியை தான் ஒப்படைப்பதாகவும் உரைத்துள்ளார்.

தற்போதைய இந்த ஆணை (CHIROGRAPH)  மற்றும் இணைக்கப்பட்ட விதியை (Statute) L'Osservatore Romano நாளிதழில் வெளியிடுவதன் வழியாக உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவருமாறும், பின்னர் Acta Apostolicae Sedis-இன் அதிகாரப்பூர்வ விளக்கத்தில் வெளியிடும் படியாகவும் தான் உத்தரவிடுவதாகக் கூறியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2024, 15:13