பொதுநலனைக் கட்டியெழுப்ப பெண்களின் குரல்கள் பங்காற்றுகின்றன
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
கத்தோலிக்க சமூகப்படிப்பினைகளின் மூலைக்கல்லாக பொது நலன் என்பது இருப்பதால், வாழ்வு தொடர்புடைய அனைத்து விடயங்களும் இதயத்திற்குள் பேணப்பட வேண்டும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வாழ்வுக்கான திருப்பீடக் கழகத்தால், “பொது நலன் குறித்த கலந்துரையாடல் : கோட்பாடு மற்றும் நடைமுறை” என்ற தலைப்பில் ஏற்பாடுச் செய்யப்பட்ட கருத்தரங்கில் பங்குபெற்றோருக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், பொதுநலனைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் குரல்கள் மிகப்பெரிய அளவில் பங்காற்றுகின்றன, என அதில் தெரிவித்துள்ளார்.
பொதுநலன் குறித்த மிகப் பரந்த சிந்தனையுடன் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் இரு முக்கியக் கூறுகளை தான் சுட்டிக்காட்ட விரும்புவதாகக் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில் இது வாழ்வுக்கான திருப்பீடக் கழகத்தால் ஏற்பாடுச் செய்யப்பட்டிருப்பதால், அனைத்துச் சூழல்களிலும் மனித வாழ்வை பாதுகாப்பதை வலியுறுத்துவதாக உள்ளது என கூறியுள்ளார்.
வாழ்வை பாதுகாப்பதை அதன் இருத்தியலில், சமூக மற்றும் கலாச்சார நிலைகளில் ஒரு சில நேரங்களுக்கு அல்லது ஒரு சில விடயங்களுக்கு என மட்டும் குறுக்கப்பட்டால் அது பயனற்றதாக போவது மட்டுமல்ல, புலனாகாத கொள்கைகளை பாதுகாத்து உண்மை மனிதர்களை பாதுகாக்கத் தவறிவிடும், என மேலும் தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.
தன் இரண்டவாது கருத்தாக, இக்கலந்துரையாடலில் இரு வேறு பொறுப்புக்களை, பின்னணியை, துறைகளைச் சார்ந்த பெண்கள் இடம்பெறுவதைப் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத்திலும் திருஅவையிலும் பெண்களின் குரல்கள் அதிகம் அதிகமாகச் செவிமடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மனித குலத்தின் வருங்காலத்திற்கான உண்மையான பங்களிப்பில் உலக கலாச்சாரங்களின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், தனி மனிதர்கள் தங்கள் நலனையும் தாண்டி சிந்திக்க மறுப்பதால், இவ்வுலகில் மோதல்களும் பிரிவினைகளும் மலிந்து கிடக்கின்றன எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வியாழக்கிழமையன்று உரோம் நகரில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் வாழ்வுக்கான திருப்பீடக்கழகத்தின் தலைவர், பேராயர் Vincenzo Paglia அவர்கள் திருத்தந்தையின் செய்தியை வாசிக்க, இலண்டன் பலகலைக்கழக கல்லூரியின் பொருளாதார பேராசிரியர் Mariana Mazzucato, மற்றும், பார்பதோஸ் நாட்டு பிரதமர் Mia Mottley ஆகியோரின் கலந்துரையாடலுடன் இக்கூட்டம் துவங்கியது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்