அருள்பணித்துவ மாணவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அருள்பணித்துவ மாணவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (VATICAN MEDIA Divisione Foto)

சிறைப்பணியாற்ற முன்வாருங்கள் – திருத்தந்தை பிரான்சிஸ்

அரசு சிறைச்சாலைகளுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் எண்ணையையும், எதிர்நோக்கு என்னும் திராட்சை இரசத்தையும் வழங்குங்கள்

மெரினா ராஜ் - வத்திக்கான்

குருத்துவ அருள்பொழிவு பெற இருக்கும் மாணவர்கள் சிறைப்பணியாற்ற முன்வர வேண்டும் என்றும், கலாச்சாரம், சமூகம், தீமைகள், மறைக்கப்பட்ட பாவங்கள் போன்ற பல சங்கிலிகளால் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் மக்களை மீட்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 16 சனிக்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் Pamplona, Tudela, San Sebastián மறைமாவட்டம் மற்றும் Redemptoris Mater சபையின் குருத்துவ மாணவர்கள் என ஏறக்குறைய 40 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித வியாழனன்று பெண்கள் சிறைக்குச் சென்று, தான் அவர்களின் பாதங்களைக் கழுவியதை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், சிறைக்கைதிகளில் இருந்த ஒரு பெண் தன்னை அழைத்து தனது மகனையேத் தான் கொன்றதாகக் கூறியதை அருள்பணித்துவ மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

அரசு சிறைச்சாலைகளுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் வழங்குங்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஆறுதல் எண்ணையையும், எதிர்நோக்கு என்னும் திராட்சை இரசத்தையும் அவர்களுக்கு வழங்குங்கள் என்றும், சுரண்டல், ஊக்கமின்மை, அறியாமை மற்றும் கடவுளை மறத்தல் போன்றவற்றினால் வாடும் மக்களுக்காகப் பணியாற்ற வலியுறுத்தினார்.

முன்பே தயாரிக்கப்பட்டிருந்த கருத்துக்கள் அடங்கிய உரையினை எழுதுவடிவில் அருள்பணித்துவ மாணவர்களுக்கு வழங்கினார் திருத்தந்தை. அதில் குறிப்பிட்டிருந்தவை.      

தூய ஆவிக்குக் கீழ்ப்படிதல், பாலைவனத்தில் கடவுளைச் சந்தித்தல், நம்மிடம் உள்ள தூசுகளைத் தட்டிவிடுதல், என்னும் நான்கு முக்கியமான கருத்துக்களை நற்செய்தியாளர் லூக்கா, அருள்பணியாளர்களாக மாற தங்களையேத் தயாரித்துக் கொண்டிருப்பவர்களுக்காகத் தனது நான்காம் அதிகாரத்தில் எடுத்துரைக்கின்றார்.

சோதனைகளைக் கண்டு அஞ்சாமல் துணிவுடன் போராட வேண்டும். பொருள், கைதட்டல், தன்னை முன்னிலைப்படுத்துதல் போன்ற சிலைவழிபாட்டுப் பணியின் சோதனைகளை எதிர்த்துப் போராட அஞ்சவேண்டாம் என்று லூக்கா நற்செய்தியாளர் வலியுறுத்துகின்றார்.

உலகின் பார்வையில் தான் யோசேப்பின் மகனைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்து, இயேசு தனது சொந்த ஊரான நாசரேத்துக்குச் சென்றார் என்று தொடங்கும் லூக்கா நற்செய்தியின் அதிகாரமானது நாம் நமது வேர்களை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்துகின்றது.

நமது நற்செய்தி அறிவிப்புப்பணி மனிதர்களுக்கு இடையில் வேறுபாடுகளை ஏற்படுத்தக்கூடாது. அந்நியர்கள் எதிரிகள் என யாராக இருந்தாலும் கடவுளின் பார்வையில் நாம் அனைவைரும் அவரின் குழந்தைகளாக இருக்கின்றோம் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2024, 14:48